கிறிஸ்துமஸ் பண்டிகை: சென்னையில் 8,000 போலீஸார் பாதுகாப்பு

By செய்திப்பிரிவு

சென்னை: கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி சென்னையில் 8 ஆயிரம் போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். மேலும், பைக் ரேஸ், மது போதையில் வாகனங்கள் ஓட்டுவோர் மீது நடவடிக்கை எடுக்க போலீஸாருக்கு காவல் ஆணையர் உத்தரவிட்டுள்ளார்.

கிறிஸ்துமஸ் பண்டிகை நாளை கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, இன்று இரவு முதல் அனைத்து தேவாலயங்களிலும் சிறப்பு பிரார்த்தனை நடைபெறும். தேவாலயங்களில் நடைபெறும் சிறப்பு பிரார்த்தனையில் ஏராளமானோர் கலந்து கொள்ள வருகை தருவார்கள் என்பதால், இன்று முதல் சென்னையில் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

அந்த வகையில், சென்னை காவல் ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர் உத்தரவின் பேரில், 8 ஆயிரம் போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். போலீஸாருக்கு உதவியாக ஊர் காவல் படையினரும் கூடுதலாக சேர்க்கப்பட்டுள்ளனர். அதன்படி, இன்று இரவு முதல் கிறிஸ்துமஸ் பண்டிகை கொண்டாடும் திங்கள் கிழமை ( டிச.25 ) வரை சென்னையில் உள்ள சுமார் 350 தேவாலயங்களில் சுழற்சி முறையில் போலீஸார் பாதுகாப்பு பணிகளை மேற்கொள்ள காவல் துறை சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

மயிலாப்பூர் சாந்தோம் தேவாலயம், பெசன்ட்நகர் வேளாங்கண்ணி தேவாலயம், பாரி முனை அந்தோணியார் தேவாலயம், அண்ணா சாலை புனித ஜார்ஜ் ( கதீட்ரல் ) தேவாலயம், சைதாப்பேட்டை சின்னமலை தேவாலயம் உள்ளிட்ட பொதுமக்கள் அதிகம் கூடும் தேவாலயங்களுக்கு கூடுதலாக போலீஸார் நியமிக்கப்பட்டு, பாதுகாப்பு மற்றும் போக்குவரத்தை சீர்படுத்தும் பணிகள் மேற்கொள்ள ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

மேலும், கூட்ட நெரிசலை பயன்படுத்தி திருட்டு உள்ளிட்ட குற்றச்சம்பவங்களில் ஈடுபடும் நபர்களை சிசிடிவி கேமராக்கள், டிரோன் கேமராக்கள் மூலமும், ‘மப்டி’ உடையிலும் போலீஸார் கண்காணிப்பில் ஈடுபட ஏற்பாடுகளை செய்துள்ளனர். சென்னையில் முக்கிய சந்திப்புகளில் தடுப்புகள் அமைத்து வாகன சோதனையிலும் போலீஸார் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.

மெரினா, சாந்தோம், பெசன்ட்நகர், நீலாங்கரை உள்ளிட்ட கடற்கரைகளில் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. தேவாலயங்களுக்கு அருகில் வாகன நிறுத்துமிடங்களுக்காக சிறப்பு ஏற்பாடுகள் போக்குவரத்து காவல் துறைசார்பில் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

மேலும், பைக் ரேஸ், அதி வேகமாக வாகனங்களை ஓட்டுவது, மது போதையில் வாகனங்களை ஓட்டுவது உள்ளிட்ட போக்குவரத்து விதி மீறல்களில் ஈடுபடுவோர் மீது, அபராதம் உள்ளிட்ட நடவடிக்கை எடுக்க போலீஸாருக்கு சென்னை காவல் ஆணையர் உத்தரவிட்டுள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE