தண்ணீரை உள்வாங்குவதை நிறுத்திய திசையன்விளை அதிசய கிணறு: விவசாயிகள் கவலை

By செய்திப்பிரிவு

திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம் திசையன்விளை அருகே ஆயன்குளத்தில் உள்ள அதிசயக் கிணறு தண்ணீரை உள்வாங்கியதை நிறுத்தியுள்ளது. இது இப்பகுதி மக்கள் மற்றும் விவசாயிகளுக்கு கவலையை ஏற்படுத்தியிருக்கிறது.

ஆயன்குளத்திலுள்ள இந்த அதிசயக் கிணறு வெள்ளக் காலங்களில் பெருமளவுக்கு தண்ணீரை உள்வாங்கி வந்தது. இதனால் இப்பகுதியில் நிலத்தடி நீர்மட்டம் பெருகியது. கடந்த ஆண்டு பருவ மழைக் காலங்களில் உபரி நீர் விநாடிக்கு 3,000 கன அடி இந்த கிணற்றுக்குள் சென்றது. பல நாட்களாக தண்ணீரை உள்வாங்கியும், அதிசயக் கிணறு நிரம்பவில்லை. இது சுற்றுவட்டார மக்களுக்கு அதிசயமாக இருந்தது.

அதிசயக் கிணறு குறித்து ஆராய்ச்சி மேற்கொள்ள திருநெல்வேலி மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுத்தது. சென்னை ஐஐடி பேராசிரியர்கள் வரவழைக்கப்ப்டடு 3 மாதங்களாக ஆய்வு மேற்கொண்டனர். அதிசய கிணறு மற்றும் சுற்று வட்டாரப் பகுதிகளில் உள்ள 50 -க்கும் மேற்பட்ட கிணறுகளில் டிரோன் கேமரா, கோப்ரா கேமரா, ஜிபிஎஸ் கருவிகளைக் கொண்டு ஆய்வு மேற்கொண்டனர். இதன் மூலம் பல்வேறு தகவல்களைப் பெற்றனர்.

இங்குள்ள கிணறுகளில் சுண்ணாம்பு பாறைகள் அதிகமாக உள்ளன. மழை நீரில் உள்ள ஆக்சி ஜன் சுண்ணாம்பு பாறைகளில் வேதிவினை புரிந்து அதில் துவாரங்களை உருவாக்குகிறது. அவை நாளடைவில் பெரிய குகைகளாக மாறி உள்ளதும் ஆய்வில் தெரியவந்துள்ளது. சில கிணறுகளுக்கு கீழே பூமிகுள் கால்வாய் போன்ற அமைப்பு உருவாகி உள்ளதும், உபரி நீர் செல்லச் செல்ல இந்த கால்வாய் இன்னும் நீரோட்டம் செல்லும் விரிவான கால்வாயாக மாறும் எனவும் கண்டுபிடிக்கப்பட்டது.

ஆயன்குளம் அதிசயக் கிணற்றில் கீழுள்ள பாதாள குகைகள் வழியாக தண்ணீர் அதிவேகமாக கடத்தப்படுகிறது. இந்த அதிசயக் கிணறு மூலமாக சுற்றிலும் 6 கி.மீ. பரப்பளவில் உள்ள கிணறுகள் நீர்மட்டம் உயர்கிறது. இதேபோன்ற கிணறுகள் அருகிலுள்ள பல கிராமங்களில் உள்ளதை ஆராய்ச்சியில் ஐஐடி குழுவினர் கண்டறிந்தனர். கீரைக்காரன்தட்டு, சுவிசேஷபுரம், சாத்தான்குளம், ராதாபுரம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள கிணறுகளுக்கு அடியிலும் கார் செல்லும் அளவுக்கு கூட பாதைகள் இருப்பதாக ஆய்வில் தெரியவந்துள்ளது.

இந்நிலையில் தற்போது பெய்த அதிகனமழை காரணமாக காட்டாற்று வெள்ளம் அதிசய கிணற்றில் திருப்பி விடப்பட்டது. தொடர்ந்து 2 நாட்கள் நீரை உள்வாங்கிய கிணறு நிரம்பிய நிலையில் அதன் சுற்றுச்சுவர் திடீரென்று சரிந்து விழுந்துள்ளது. இதனால் கிணற்றுக்குள் தண்ணீர் செல்வது தடைபட்டுள்ளது. ஆண்டாண்டு காலமாக நீரை உள்வாங்கிய அதிசயக் கிணறு தற்போது தண்ணீரை உள்வாங்கியதை நிறுத்திக்கொண்டதால், இப்பகுதி மக்களும், விவசாயிகளும் கவலையடைந்து உள்ளனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE