தென்மாவட்டங்களில் வெள்ளத்தால் சேதமடைந்த பயிர்களுக்கு ஏக்கருக்கு ரூ.35,000 இழப்பீடு வலியுறுத்தல்

By செய்திப்பிரிவு

திருநெல்வேலி: தென்மாவட்டங்களில் மழை, வெள்ளத்தால் பயிர்கள் பாதிப்படைந்த விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ.35 ஆயிரம் நிவாரணம் வழங்க வேண்டும் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் ஆர்.முத்தரசன் கூறினார். திருநெல்வேலி மாவட்டம் வள்ளியூரில், வெள்ளத்தால் சேதமடைந்த வாழை பயிகளை அவர் பார்வையிட்டார். செய்தி யாளர்களிடம் அவர் கூறியதாவது: மழை வள்ளத்தால் தூத்துக்குடி மாவட்டத்தில் மிகுந்த பாதிப்பு ஏற்பட்டுள் ளது. இந்த பாதிப்புகளில் இருந்து மக்கள் இன்னமும் வெளியே வரவில்லை. குளங்களில் உடைப்பு ஏற்பட்டு வெள்ளம் வெளியேறிவிட்டது. இனி பயிர் சாகுபடி செய்ய வேண்டுமானால் குளங்களை சீரமைக்க வேண்டும். வள்ளியூர், ராதாபுரம் பகுதியில் நூற்றுக்கும் மேற்பட்ட ஏக்கரில் பயிரிடப் பட்ட வாழைகள் சரிந்து விழுந்து பாதிப்படைந்துள்ளன.

நெற்பயிர்கள் வயலில் முளைத்து விட்டன. விருதுநகர் மாவட்டத்தில் கால்நடைகள் இறந்துள்ளன. விவசாய பயிர்கள் சேதத்துக்கு ஏக்கருக்கு குறைந்த பட்சம் ரூ.35 ஆயிரம் நிவாரணம் வழங்க வேண்டும் என முதல்வரிடம் கோரிக்கை விடுத்துள்ளோம். தமிழக அரசு மழை வெள்ள பாதிப்புகளுக்கு ரூ. 21 ஆயிரம் கோடி நிதி வழங்கவேண்டும் என மத்திய அரசிடம் கேட்டுள்ளது. இந்த நிதியை வழங்கினால் தான் பாதிப்படைந்த சாலைகள், கண்மாய்கள், குளங்களை சீரமைக்க முடியும். தென்மாவட்டங்களை பேரிடர் பாதித்த மாவட்டங்களாக மத்திய அரசு அறிவிக்கவேண்டும். அதனை அரசு இதழில் வெளியிடவேண்டும் என்று தெரிவித்தார். இதுபோல் திருநெல்வேலி, தூத்துக்குடியில் வெள்ளச் சேதத்தை பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ், புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி, அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் ஆகியோரும் பார்வையிட்டு பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்கினர்.

அன்பு மணி ராமதாஸ்

அன்பு மணி ராமதாஸ் கூறியதாவது: தென்மாவட்டங்களில் அரசு கூறியிருப்பதைவிட அதிகமானோர் வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்துள்ளனர். பல்வேறு கிராமங்களுக்குள் அதிகாரிகளே இன்னும் செல்ல முடியவில்லை. அரசு உடனடியாக ரூ.10 ஆயிரம் நிவாரணம் வழங்க வேண்டும். மொத்தமாக ரூ. 25 ஆயிரம் வரை நிவாரணம் வழங்கினால் தான் பொதுமக்களுக்கு ஓரளவு பாதிப்பை குறைக்க முடியும். சேதமடைந்த விவசாய பயிர்களுக்கு ஹெக்டேருக்கு ரூ. 17 ஆயிரம் நிவாரணம் போதுமானதல்ல. சென்னை வானிலை ஆய்வு மையம் சுதந்திர காலத்துக்கு முன்பு எப்படி இருந்ததோ அதுபோன்ற நிலையே தற்போது நீடிக்கிறது. அதை மூடி விடலாம். வெள்ள நிவாரணமாக தமிழக அரசு கேட்டுள்ள தொகையை மத்திய அரசு உடனடியாக வழங்க வேண்டும். இதில் அரசியல் செய்யக்கூடாது.ரூ.2 ஆயிரம் கோடியை முதல் கட்டமாக உடனே வழங்க வேண்டும். பாதிப்பு ஏற்பட்ட பகுதிகளில் 1 மாதம் மின்கட்டணத்தை ரத்து செய்ய வேண்டும் என்று தெரிவித்தார்.

டாக்டர் கிருஷ்ணசாமி

டாக்டர் கிருஷ்ணசாமி: வெள்ளம் வந்து 6 நாட்கள் கடந்த பின்னும் பல்லாயிரக்கணக்கான மக்கள் உணவு, பால் மற்றும் குடிநீர் இல்லாமல் அவதி அடைந்து வருகின்றனர். பொது மக்களுக்கு உடனடியாக உதவி வழங்க வேண்டும். வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பொது மக்களுக்கு ரூ.6 ஆயிரம் போதாது. முதல் கட்டமாக ரூ.15 ஆயிரம் நிவாரணம் தர வேண்டும்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE