“இண்டியா கூட்டணியை கண்டு அரண்டு போயுள்ளார்” - நிர்மலா சீதாராமனுக்கு இ.கம்யூ கண்டனம்

By செய்திப்பிரிவு

சென்னை: "பாஜக ஒன்றிய அரசின் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் “இண்டியா” கூட்டணி உருவாக்கி வரும் அரசியல் பேரலைகளைக் கண்டு அரண்டு போய் பிதற்றி வருகிறார்" என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில், "வடகிழக்கு பருவமழைக் காலங்களில், வங்கக்கடலில் காற்றழுத்த மண்டலத்தால் உருவாகும் இயற்கை சீற்றம் குறித்தும், அதனை எதிர்கொள்ளும் பாதுகாப்பு மற்றும் தடுப்பு ஏற்பாடுகள் செய்திருந்த, தமிழ்நாடு அரசின் முன்னெச்சரிக்கை நடவடிக்கை பேரழிவின் விளைவுகளை பெருமளவு கட்டுப்படுத்தி குறைத்தது என்பதை நிர்மலா சீதாராமன் மூடி மறைக்கிறார். கடந்த 2015ம் ஆண்டில் ஏற்பட்ட வர்தா புயல் இயற்கை சீற்றத்தால் ஏற்பட்ட பேரிடர் இழப்புகளில் கற்றுக் கொண்ட படிப்பினை அடிப்படையில் உடனடி திட்டங்கள், தொலை நோக்கு நிரந்தர திட்டங்கள் என்ற முறையில் விரிவான பாதுகாப்புத் திட்டங்கள் ரூ.1,27, 692 கோடி மதிப்பில் தயாரித்து அதற்கான நிதியை வழங்குமாறு தமிழ்நாடு அரசு, ஒன்றிய அரசிடம் கேட்டுக்கொண்டது.

ஆனால், ஒன்றிய அரசு வெறும் 4.61 சதவீத நிதி மட்டுமே வழங்கி தமிழக மக்களை வஞ்சித்து விட்டது. தற்போது ஏற்பட்டிருக்கும் பேரிடர் இழப்புகளை எதிர்கொள்ள தமிழ்நாடு அரசு ரூ.21,692 கோடி ரூபாய் நிதியுதவி கோரியுள்ள நிலையில், ஒன்றிய அரசின் வன்மம் மேலும் தொடரும் என்பதையே நிதி அமைச்சர் வெளிப்படுத்துகிறார். தென் மாவட்டங்களுக்கு ஏற்படும் பெருமழை ஆபத்து டிசம்பர் 12ம் தேதியே நிர்மலா சீதாராமன் அறிந்தது உண்மை எனில், முக்கியத்துவம் வாய்ந்த அந்தச் செய்தியை ஏழு நாள் கழித்து, ஊடகங்கள் வாயிலாக வெளியிடுவது ஏன்?. தமிழ்நாட்டின் தலைநகர் சென்னை பெருமாநகர் மாவட்டம் உட்பட ஒன்பது மாவட்டங்கள் இயற்கை சீற்றத்தால் நிலைகுலைந்து கிடக்கும் நிலையில், தமிழ்நாடு அரசு மன்றாடிக் கேட்ட பேரிடர் நிவாரண நிதியை வழங்க கவனம் செலுத்தாத ஒன்றிய நிதி அமைச்சர், வழக்கமாக வழங்கப்படும் பேரிடர் நிதி தவிர, தற்போது ஏற்பட்டிருக்கும் பேரிடரை எதிர்கொள்ள, தமிழ்நாடு கோரியுள்ள கூடுதல் நிதி இல்லை என கை விரித்து நிற்பதற்கு நிதியமைச்சர் வெட்கப்பட வேண்டும்.

அதானி, அம்பானி போன்ற பன்னாட்டு கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு பல லட்சம் கோடி மக்கள் வரிப்பணத்தை அள்ளி, அள்ளித் தரும் பாஜக ஒன்றிய அரசு, மாற்றுக் கருத்தும் கொள்கையும் கொண்ட மாநில அரசுகளுக்கு எதிராக ஆளுநர் மாளிகைகளும், அரசியலமைப்பு நிறுவனங்களும் ஏவி விடப்பட்டிருப்பதை நாடு பார்த்துக் கொண்டிருக்கிறது. இந்த வரிசையில் தேசிய பேரிடர் மீட்புக் குழுக்களையும் சேர்த்துக் கொண்டார்களா? அடர்த்தியான அரசியல் மற்றும் அரசுப் பணிகளுக்கு மத்தியில் முதலமைச்சர், பிரதமரை சந்தித்து முறையிட நேரம் கேட்டபோது, மாற்றி, மாற்றி கூறிய போதும் நள்ளிரவு வரை காத்திருந்து, பிரதமரிடம் விரிவாக எடுத்துக் கூறியதை நிதியமைச்சர் அறிந்து கொள்ளாதது ஏன்?

நாடாளுமன்ற பாதுகாப்பில் ஏற்பட்ட படுதோல்வி, இதற்காக நியாயமும் விளக்கமும் கேட்ட 146 நாடாளுமன்ற உறுப்பினர்கள் இடைநீக்கம் செய்த ஜனநாயக படுகொலை, மாநில உரிமைகளை பறித்து, மையத்தில் குவிக்கும் அதிகார வெறி என எதேச்சதிகார ஒன்றிய அரசுக்கு எதிராக மக்கள் கிளர்ந்தெழும் சூழலில், “இண்டியா” கூட்டணி கண்டு நிதியமைச்சர் ஆத்திரமடைந்து தமிழ்நாடு முதலமைச்சர் மீது ஆசிட் வார்த்தைகளை அள்ளி வீசுகிறார். வெள்ளம் சூழ்ந்த பகுதிகளில் வெள்ளம் வடியாத நிலையில், தென் மாவட்டங்களில் பெருமழையால் ஆயிரக்கணக்கான ஏக்கர்களில் சாகுபடி செய்யப்பட்ட நெற்பயிர்கள் விளைந்த நிலையில் நீரில் மூழ்கியும், வாழைகள், பயிறு வகைகள், சிறு கிழங்குகள் உள்ளிட்ட பயிர்கள் சேதமடைந்து விட்டன. நூற்றுக்கணக்கான கால்நடைகள் மழை வெள்ளத்தால், அடித்துச் செல்லப்பட்டுள்ளது.

ஏரிகள், குளங்கள், கண்மாய்களில் ஏற்பட்ட உடைப்புகள், சாலைகள் துண்டிப்பு என வரலாறு காணாத சேதாரத்தை சீர்படுத்தி வரும் நேரத்தில், அதற்கு தேவையான பேரிடர் கால நிதியுதவி செய்து உதவும் மனிதாபிமானம் எள் அளவும் இல்லாமல், ஊடகங்கள் வழியாக மலிவான அரசியல் ஆதாயம் தேடும் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கருத்துக்களை இந்தியக் கம்யூனிஸ்டு கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு வன்மையாகக் கண்டிக்கிறது" என்று தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

2 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

10 hours ago

மேலும்