புதுச்சேரியில் வீடு, வர்த்தக நிறுவனங்களுக்கான மின் கட்டணம் மீண்டும் உயருகிறது

By செ. ஞானபிரகாஷ்

புதுச்சேரி: புதுச்சேரி மாநிலத்தில் வீடு, வர்த்தக நிறுவனங்கள் மற்றும் தொழிற்சாலைகளின் மின் கட்டணம் உயர்த்தப்படவுள்ளது. வீடுகளுக்கான மின் கட்டணம் யூனிட்டுக்கு ரூ. 75 காசுகள் வரை அதிகரிக்கும். தொடர்ந்து ஆண்டுதோறும் கட்டணம் உயர்த்தப்படுவதால் மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

மின்துறையின் வரவு செலவு கணக்குகள் கோவாவில் உள்ள இணை ஒழுங்கு முறை ஆணையத்திடம் சமர்பிக்கப்பட்டு அதற்கேற்ப ஆண்டுதோறும் கட்டணம் நிர்ணயிக்கப்படுகிறது. அதன்படி 2023-24 நிதியாண்டுக்கான கட்டணத்தை நிர்ணயம் செய்ய இணை மின்சார ஒழுங்குமுறை ஆணையத்திடம் விண்ணப்பிக்க துணைநிலை ஆளுநர் தமிழிசை ஒப்புதல் தந்தார்.

இதையடுத்து மின் கட்டண உயர்வு தொடர்பாக இணை மின்சார ஒழுங்குமுறை ஆணையத்திடம் புதுச்சேரி மின்துறை விண்ணப்பித்துள்ளது. இதன்படி வீட்டு உபயோகத்துக்கான மின் கட்டணம் யூனிட்டுக்கு 50 காசு முதல் 75 காசு வரை உயர்த்த அனுமதி கேட்கப்பட்டுள்ளது. குறைந்த மின் அழுத்த தொழிற்சாலைகளுக்கான மின் கட்டணத்தை யூனிட்டுக்கு ரூ. 6.35ல் இருந்து ரூ. 7 ஆக உயர்த்த அனுமதி கேட்கப்பட்டுள்ளது. அதேபோல் உயர் மின் அழுத்த தொழிற்சாலைகளுக்கு கட்டணம் யூனிட்டுக்கு ரூ.5.45ல் இருந்து ரூ. 6 ஆகவும், அதி உயர் மின் அழுத்த தொழிற்சாலைகளுக்கு யூனிட்டுக்கு ரூ.5.50ல் இருந்து ரூ.6 ஆகவும் உயர்த்த அனுமதி கேட்கப்பட்டுள்ளது.

இந்த விண்ணப்பம் தொடர்பாக ஆய்வு செய்ய இணை மின்சார ஒழுங்கு முறை ஆணையம் விரைவில் புதுச்சேரி வருகிறது. பொதுமக்களிடம் கருத்து கேட்பு கூட்டம் நடத்தி அதன் பின்னர் மின் கட்டணத்தை நிர்ணயம் செய்வார்கள். இந்த மின்கட்டண உயர்வு வரும் ஏப்ரல் 1ம் தேதி அமலுக்கு வரும். தொடர்ந்து பல ஆண்டுகளாக மின்கட்டணம் புதுச்சேரியில் உயர்ந்து வருகிறது. புதுச்சேரி மின்துறை உயர்த்தி கேட்கும் மின் கட்டணமே புதிய கட்டணமாக நிர்ணயிக்கப்படுவது தொடர்கிறது. தொடர்ந்து ஐந்து ஆண்டுகளுக்கும் மேலாக மின்கட்டணம் புதுச்சேரியில் உயர்ந்து வருகிறது. தற்போது தனியாருக்கு மின்துறை செய்ய நடவடிக்கை எடுத்து வரும் சூழலில் இக்கட்டண உயர்வு அதிகரிக்கவுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE