மழை, வெள்ளத்தால் தென்மாவட்டங்கள் பாதிக்கப்பட்டபோது ‘இண்டியா’ கூட்டத்தில் முதல்வர் பங்கேற்பதா? - மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் குற்றச்சாட்டு

By ஆர்.ஷபிமுன்னா

புதுடெல்லி: மழை, வெள்ளத்தால் தமிழகத்தின் தென் மாவட்டங்கள் பாதிக்கப்பட்டபோது முதல்வர் ஸ்டாலின், டெல்லியில் இண்டியா கூட்டணி கூட்டத்தில் இருந்தார். ‘வெள்ளம் காரணமாக என்னால் கூட்டத்துக்கு வரமுடியாது. என் மண், மக்கள் எனக்கு முக்கியம்’ என்று, அந்த கூட்டத்தை தள்ளிவிட்டு அவர் தமிழகத்தில் இருந்திருக்க வேண்டும். ஆனால், மத்திய அரசு அவருக்கும் முன்பாகவே உதவிக்கரம் நீட்டிவிட்டது என்று மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக டெல்லியில் தமிழக செய்தியாளர்களிடம் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் நேற்று பேசினார். அவர்களது கேள்விகளுக்கும் பதில் அளித்தார். அவர் கூறியதாவது: திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசியில் 50 செ.மீ. அளவுக்கு மழை பெய்வது குறித்த தகவல் எங்களுக்கு 18-ம் தேதி காலையில் கிடைத்தது. இதுபற்றி உள்துறை அமைச்சர் அமித் ஷாவிடம் உடனே தெரிவித்தேன். விரைந்து மீட்பு பணிகளை மேற்கொள்ளுமாறு தேசிய பேரிடர் மீட்பு படை (என்டிஆர்எஃப்), ராணுவம் உள்ளிட்ட துறைகளுக்கு அவர் என் முன்னிலையிலேயே உத்தரவிட்டார்.

டிசம்பர் 18 முதல் 21-ம் தேதி மாலை வரையிலான மீட்பு பணியில் 42,290 பேர் மீட்கப்பட்டுள்ளனர். மீட்பு பணியில் மத்திய அரசின் அனைத்து துறைகளும் ஒன்றிணைந்து செயல்பட்டன. குறிப்பாக ஸ்ரீவைகுண்டம் ரயில் நிலையத்தில் சிக்கிய சுமார் 800 பயணிகளை மீட்க ரயில்வே சார்பில் சிறப்பு பேருந்துகள் அனுப்பி வைக்கப்பட்டன. மீட்பு பணிக்காக சிறப்பு ரயில்களும் இயக்கப்பட்டன.

உள்துறை அமைச்சகம் சார்பில் 2 கட்டுப்பாடு அறைகள் 24 மணி நேரமும் தொடர்ந்து நிலைமையை கண்காணித்தன. இதனால், உடனுக்குடன் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. இப்பணியில், விமானப் படை (5), கடற்படை (3), கடலோர காவல் படை (1) ஆகியவற்றின் 9 ஹெலிகாப்டர்கள் டிசம்பர் 21-ம் தேதி வரை 70 முறை பறந்து மீட்பு பணியில் ஈடுபட்டன.

வழக்கமாக, வெள்ள நிலைமை ஓரளவு சீரான பிறகே மீட்பு பணி தொடங்கப்படும். மத்திய குழுவும் பார்வையிடச் செல்லும். ஆனால், 4 தென் மாவட்டங்களிலும் மத்தியகுழுவினர் 19-ம் தேதி மாலைக்குள்ளாகவே நேரடியாக களம் இறங்கிவிட்டனர். வெள்ளம் வடியும் வரைகாத்திருக்காமல் மீட்பு பணியும் உடனடியாக தொடங்கியது.

என்டிஆர்எஃப், ராணுவம், விமானப்படை, கடற்படை, கடலோரக் காவல்படை சேர்த்து 5,049 பேரை மீட்டுள்ளனர். இதில் கடலோர காவல் படை மட்டுமே 709 பேரை மீட்டுள்ளது. வெள்ளத்தால் துண்டிக்கப்பட்ட மக்களும் காப்பாற்றப்பட்டுள்ளனர். பிரதமர் மோடியும், உள்துறை அமைச்சர் அமித் ஷாவும் விரைந்து பணிகளை மேற்கொள்ளுமாறு உத்தரவிட்டதை கண்கூடாக பார்த்தேன்.

தென் மண்டல வானிலை ஆய்வு மையம் சென்னையில் உள்ளது. இந்த அலுவலகம் சார்பில் தென் மாநிலங்களுக்கான மழை அபாயம் குறித்து 12-ம் தேதியே தகவல் அளிக்கப்பட்டுள்ளது. அதில், 14 முதல் 16-ம் தேதி வரையிலான மழை அறிவிப்பு இருந்தது. இது அதிநவீன மையம் என்பதால் அடுத்த 5 நாட்களுக்கான மழை குறித்து அறிந்து எச்சரிக்கை தருகின்றனர். இதுதவிர, ஒவ்வொரு 3 மணி நேரத்துக்கும் அடுத்த 3 மணி நேரத்துக்கான மழை எச்சரிக்கையும் அளிக்கப்படுகிறது. தங்களுக்கு முன்னெச்சரிக்கை கிடைக்கவில்லை என்று புகார் கூறுபவர்கள் இதை மனதில் வைப்பது அவசியம். அங்கு டோப்ளர் எனும் 3 அதிநவீன கருவிகள் உள்ளன. மழை பற்றி 12-ம் தேதியே அளித்த எச்சரிக்கைக்கு தமிழக அரசு எடுத்த முன்னெச்சரிக்கை நடவடிக்கை என்ன? கனமழை பெய்யும் என்று முன்கூட்டியே எச்சரித்தும், உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மாநில அரசு எடுக்கவில்லை. வெள்ளம்பாதித்த இடங்களுக்கு என்டிஆர்எஃப் படையினர் சென்ற பிறகுதான் அமைச்சர்கள், அதிகாரிகளே வந்தனர்.

‘‘வெள்ளத் தடுப்பு நிதி ரூ.4,000 கோடியில் 92 சதவீதம் செலவு செய்தாகிவிட்டது இனி, மழை வந்தால் சென்னை ஒன்றும் ஆகாது’’ எனதமிழக அமைச்சர் ஒருவர் குறிப்பிட்டிருந்தார். அவரே, வெள்ளம் வந்தபிறகு 42 சதவீதம் மட்டுமே செலவு செய்ததாக கூறியது ஏன்? 92-க்கும்,42-க்கும் வித்தியாசம் தெரியவில்லையா.

கடந்த 2015-ல் சென்னை வெள்ளத்தின்போது, அம்பத்தூரில் குறு, சிறு, நடுத்தர தொழில் நிறுவனங்களின் பாதிப்பை நேரில் சென்று பார்த்து வந்தேன். அதனால், இந்த முறை காப்பீடு நிறுவனங்களை உடனே அம்பத்தூருக்கு சென்று நிவாரணம் அளிக்க உத்தரவிட்டேன்.

2015 வெள்ளத்தால் தமிழக அரசு கற்றுக்கொண்ட பாடம் என்ன? அதன்படி நடவடிக்கை எடுத்திருந்தால் அம்பத்தூரில் இந்த நிலை ஏற்பட்டிருக்காது. இன்றும் அம்பத்தூர் மூழ்கி உள்ளது. மத்திய அரசு அளித்த பணத்தில் என்ன செய்யப்பட்டது. சுரங்கப்பாதையில் இன்னும்கூட தேங்கும் மழைக்கு மத்திய அரசு எப்படி பொறுப்பாகும்.

தமிழக முதல்வர் வெள்ள சேதத்தை பார்வையிட்டுவிட்டு, ‘‘நாம் கேட்ட நிதி வரவில்லை. அதிகனமழை பெய்யும் என எச்சரிக்கை இல்லை’’ என்று கூறியுள்ளார். முதல்வர் திருநெல்வேலி சென்றது உகந்த செயல். ஆனால், நாங்கள் 5 நாட்களுக்கு முன்பு அளித்த மழை எச்சரிக்கையையும் கிடைக்கவில்லை என்று கூறியுள்ளார்.

தென் மாவட்டங்களில் மீட்பு பணிக்கு என்டிஆர்எஃப் படையை நாங்கள் அனுப்பியபோது மாநில அரசு எங்கு இருந்தது? அந்த பேரிடரின்போது, முதல்வர் ஸ்டாலின், டெல்லியில் இண்டியா கூட்டணி கூட்டத்தில் இருந்தார். மாறாக, ‘வெள்ளம் காரணமாக என்னால் கூட்டத்துக்கு வரமுடியாது. என் மண், மக்கள் எனக்கு முக்கியம்’ என்று, இண்டியா கூட்டத்தை தள்ளிவிட்டு அவர் தமிழகத்தில் இருந்திருக்க வேண்டும். ஆனால், மத்திய அரசு அவருக்கும் முன்பாகவே உதவிக்கரம் நீட்டிவிட்டது.

தேசிய பேரிடர் என அறிவிக்கும் முறை இதுவரை இல்லை. உத்தராகண்டில் பெருவெள்ளம் ஏற்பட்டபோது கூட அவ்வாறு அறிவிக்கவில்லை. இதை ஒருவேளை தமிழக அரசு அறிவிக்க வேண்டுமானால், அதற்கு மத்திய நிதி அமைச்சகத்தின் 12 வழிகாட்டு முறைகள் உள்ளன. அதன் அடிப்படையில் மாநில அளவில் பேரிடராக தமிழக அரசு அறிவிக்கலாம். இந்த நிவாரண பணிக்கு பேரிடர் நிதியில் இருந்து 10 சதவீதம் எடுத்து பயன்படுத்தலாம். மாநில அரசிடம் இருந்து அறிக்கை வந்தபிறகு, கூடுதல் நிதி குறித்து மத்திய அரசு பரிசீலனை செய்யும்.

தமிழக அரசு ரூ.6,000 நிவாரணத்தை ரொக்கமாக அளிப்பது தவறு. நிவாரணத் தொகை தவறானவர்களுக்கு போய் சேர்வதை தடுக்க, வங்கி கணக்கில் நேரடியாக செலுத்த வேண்டும்.

உதயநிதிக்கு அறிவுரை: ‘உன் அப்பன் வீட்டு பணமா’ என்பது போல உதயநிதி ஸ்டாலின் கூறியது பற்றி கேட்கிறீர்கள். இதுபோன்ற பேச்சுகள் அரசியலில் நல்லதல்ல. அவர் அரசியலில் இன்னும் முன்னுக்கு வர ஆசைப்படுகிறார். அந்த குடும்பமும் ஆசைப்படுகிறது. நாம் பேசும் மொழி முக்கியம். அவரது தாத்தா எப்பேர்ப்பட்ட தமிழ் அறிஞர். எனவே, நம் நாக்கில் அந்த பதவிக்கு ஏற்ற அளவில் வார்த்தைகள் அளந்து வரவேண்டும். இதை பொதுப்படையாக கூறுகிறேனே தவிர, அவர் மீது காழ்ப்புணர்வு கொண்டு கூறவில்லை.

மழையில் மக்கள் அவஸ்தைப்படும்போது, அனுப்பி வைத்த தொகை மத்திய அரசுடையதா என பேசுவது சரியல்ல. ரூ.900 கோடியை முன்கூட்டியே கொடுத்து விட்டோம். அவரது அப்பாவும் வந்து பிரதமரை பார்த்துவிட்டு வந்துள்ளார். அவரும் ஏதாவது செய்வார். எனவே, உதயநிதி ஸ்டாலின் சற்று பொறுமையாக இருக்க வேண்டும். வாய் வார்த்தையும், பொறுமையும் நல்ல குணங்கள். இவ்வாறு அவர் கூறினார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE