எண்ணூர் எண்ணெய் கசிவால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு முழுமையான இழப்பீடு வழங்க வேண்டும்: பசுமை தாயகம் தலைவர் சவுமியா வலியுறுத்தல்

By செய்திப்பிரிவு

சென்னை: எண்ணூர் எண்ணெய் கசிவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு முழுமையான இழப்பீட்டை வழங்க வேண்டும் என்று பசுமைத் தாயகம் தலைவர் சவுமியா அன்புமணி வலியுறுத்தியுள்ளார். சென்னை எண்ணூரில் எண்ணெய் கசிவால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பசுமைத் தாயகம் தலைவர் சவுமியா அன்புமணி நேற்று பார்வையிட்டு பாதிக்கப்பட்ட மக்களைச் சந்தித்து குறைகளைக் கேட்டறிந்தார். அதைத் தொடர்ந்து, சவுமியா அன்புமணி செய்தியாளர்களிடம் கூறியதாவது: எண்ணூர் எண்ணெய் கசிவு தமிழகத்தின் கடைசி நிகழ்வாக இருக்க வேண்டும். தற்போது அரசு அறிவித்துள்ள இழப்பீடுகள் மிகமிகக் குறைவு. பாதிக்கப்பட்ட அனைவருக்கும் முழுமையான இழப்பீட்டை அளிக்க வேண்டும். உடல்நல பாதிப்புகள் தொடர்பான பரிசோதனைகளை அனைத்து பகுதிகளிலும் நடத்தி உயர் சிகிச்சை அளிக்க வேண்டும். பாதிக்கப்பட்ட சூழலமைப்பை மறுசீரமைக்கும் பணிகளை மேற்கொள்ள வேண்டும்.

இவற்றுக்காக மாசுபடுத்தியவரையே பொறுப்பேற்கும் கோட்பாட்டை முழுமையாக செயலாக்க வேண்டும். தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் உள்ளிட்ட அரசு அமைப்புகள் மற்றும் தொழிற்சாலைகள் செய்த பிழைகளை முழுமையாகக் கண்டறிந்து, அவை மீண்டும் நடைபெறாமல் இருப்பதற்கு உரிய உயர்மட்ட விசாரண குழு அமைத்து நடவடிக்கை எடுக்க வேண்டும். தென்மண்டல பசுமைத் தீர்ப்பாயம் 2022-ம் ஆண்டில் தீர்ப்பளித்தவாறு, எண்ணூர் கழிமுகப் பகுதியை பாதுகாக்கப்பட்ட சதுப்புநிலப் பகுதியாக அறிவித்து, இங்குசூழலியல் அமைப்பை முழுமையாக மீளுருவாக்க வேண்டும். காலநிலை மாற்றம் இனிவரும் ஆண்டுகளில் பேரிடர்களை அதிகமாக்கும் என்பது அறிவியல் உண்மை. எனவே, தமிழக அரசு இனியும் தாமதிக்காமல், தமிழகத்தின் பாதுகாப்பு அரணாக விளங்கும் சோழமண்டல கடற்கரையை முழுமையாக பாதுகாக்கும் நடவடிக்கைகளை போர்க்கால வேகத்தில் எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE