தென்மாவட்ட வெள்ளத்துக்கு இதுவரை 35 பேர் உயிரிழப்பு; 1.83 லட்சம் ஹெக்டேர் பயிர்கள் சேதம்

By செய்திப்பிரிவு

சென்னை: தென்மாவட்ட வெள்ள பாதிப்புகளில் இதுவரை 35 பேர் உயிரிழந்துள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளதாக தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா கூறியுள்ளார். இந்த 4 மாவட்டங்களில் 1 லட்சத்து 83 ஹெக்டேர் அளவிலான பயிர்கள் நீரில் மூழ்கி சேதமடைந்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

சென்னை தலைமைச் செயலகத்தில் தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா வெள்ளிக்கிழமை செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியது: "தென் மாவட்டங்களில், வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மீட்புப் பணிகள் முடிவுக்கு வந்துவிட்டது. வெள்ளம் பாதித்த பகுதிகளில் இருந்து மொத்தமாக 49,707 பேர் மீட்கப்பட்டுள்ளனர். இந்த மீட்பு பணிகளில் சுமார் 3,400 பேர் ஈடுபட்டனர். மீட்புப் பணியில் 323 படகுகள் பயன்படுத்தப்பட்டன. தற்போது அனைத்துப் பகுதிகளிலும் மீட்புப் பணிகள் முடிவடைந்துள்ளன.

அனைத்துப் பகுதிகளிலும் சமுதாய சமையல்கூடம் மூலமாக உணவு தயாரிக்கப்படுகிறது. மீட்கப்பட்ட 49,707 பேரில், 17,161 பேர் 67 நிவாரண முகாம்களில் தங்கியுள்ளனர். 43 சமுதாய சமையல் கூடங்களிலும், 5 இடங்களில் பெரிய அளவிலான ஒருங்கிணைந்த சமையல் கூடங்களும் அமைக்கப்ப்டடுள்ளன. இந்த 5 சமையல் கூடங்களில் இருந்து 75,000 பேருக்கு உணவு விநியோகிக்கப்பட்டு வருகிறது. 43 சமுதாய சமையல் கூடங்கள் மூலம் 60,000 பேருக்கு உணவு தயாரித்து வழங்கப்படுகிறது. மொத்தமாக, இதுவரை 5 லட்சம் உணவு பொட்டலங்கள் விநியோகித்துள்ளோம்.

வெள்ளத்தில் இருந்து மீட்கப்பட்ட பகுதிகளில், விரைவில் அரசின் சேவைகளைத் தொடங்குவதே முதல் இலக்கு. இதற்காக பிற மாவட்டங்களைச் சேர்ந்த பணியமர்த்தி அதற்கான பணிகள் நடந்து வருகிறது. மற்ற மாவட்டங்களில் இருந்து மட்டும், தூத்துக்குடி மற்றும் திருநெல்வேலி மாவட்டங்களுக்கு 249 லோடுகளில் உணவு விநியோகித்துள்ளோம். இது கிட்டத்தட்ட 1200 மெட்ரிக் டன் லாரிகள் மூலமாகவும், 81 டன் ஹெலிகாப்டர் மூலமாகவும் விநியோகித்துள்ளோம்.

திருநெல்வேலி, கன்னியாகுமரி மற்றும் தென்காசி மாவட்டங்களில் பால் விநியோகம் சீராகி உள்ளது. தூத்துக்குடி மாவட்டத்தில் இன்று 21,000 மெட்ரிக் டன் விநியோகித்துள்ளோம். ஆவின் மூலமாக விநியோகிக்கப்படும் அளவில் இது 81 சதவீதம் ஆகும். சில பகுதிகளில் பவுடர் மூலமாகவும் வழங்கியிருக்கிறோம்.

இதுவரை உறுதி செய்யப்பட்ட மனித உயிரிழப்புகள் 35. மேலும் 3,700 குடிசைகள் பாதிக்கப்பட்டுள்ளன. ஆனால், கணக்கெடுக்கும் பணிகள் முடிந்தால்தான் பாதிப்புகளின் முழு விவரம் தெரியவரும். 170 வீடுகள் முழுமையாக கட்டி முடிக்கப்பட்ட வீடுகள் சேதமடைந்துள்ளன. 318 கால்நடைகள், 2,387 ஆடுகள், 41,500 கோழிகள் பலியாகியுள்ளன. அதேபோல், இந்த 4 மாவட்டங்களில், 1 லட்சத்து 83 ஹெக்டேர் அளவிலான பயிர்கள் நீரில் மூழ்கி சேதமடைந்துள்ளன. வெள்ள பாதிப்புகளுக்கான நிவாரணங்களை நேற்றே முதல்வர் அறிவித்துவிட்டதால், பிற மாவட்டங்களைச் சேர்ந்த கூடுதல் பணியாளர்களை நியமித்து சேதங்களை கணக்கிடும் பணியைத் துவங்கியுள்ளதாக அவர் கூறினார்.

இதனிடையே, வெள்ள நிவாரண நிதி விவகாரத்தில் தமிழக அரசுக்கும் மத்திய அரசுக்கும் இடையே மோதல் போக்கு நிலவி வருகிறது. அதன் விவரம்: “தமிழக மக்களை அவமானப்படுத்தி இருக்கிறார் நிர்மலா சீதாராமன்” - தங்கம் தென்னரசு @ வெள்ள நிவாரண நிதி விவகாரம்

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE