தென்மாவட்ட அமைச்சர்களும், அதிகாரிகளும் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்குச் சென்றது எப்போது?- நிர்மலா சீதாராமன் கேள்வி

By செய்திப்பிரிவு

சென்னை: "மழை பாதிப்பில் இருந்து மக்களை மீட்க தமிழக அதிகாரிகள் விரைந்து செயல்படவில்லை. அமைச்சர்களும், அதிகாரிகளும் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்குச் சென்றது எப்போது? கனமழை பெய்யும் என எச்சரித்த பின்னர் எடுக்கபட்ட நடவடிக்கை என்ன?" என தமிழக அரசுக்கு மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் சரமாரியாகக் கேள்விகளை எழுப்பியுள்ளார்.

தென்மாவட்ட மழை, வெள்ளப் பாதிப்பு மற்றும் நிவாரண பணிகள் குறித்து மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் டெல்லியில் தமிழக செய்தியாளர்களை சந்தித்துப் பேசினார். அப்போது பேசிய அவர், “தூத்துக்குடி போன்ற பகுதிகளில் 50 செ.மீ மழை என்பது தோராயமாக ஒரு வருடத்துக்கு பெய்ய வேண்டிய மழை அளவு. அது ஒரேநாளில் பெய்ய மழைநீர் தேங்கி மக்கள் தவிக்கும் நிலை உருவானது.

டிசம்பர் 18-ம் தேதி காலையிலேயே தென்மாவட்ட மழை குறித்து எனக்கு தகவல் கிடைத்தது. அன்று மதியமே மத்திய உள்துறை துறை அமைச்சர் அமித் ஷாவை சந்தித்து நான்கு மாவட்டங்களுக்கும் பேரிடர் மீட்புப் படைகள் அனுப்ப வேண்டும் என கோரிக்கை வைத்தேன். அதற்கேற்ப உதவிகள் கிடைக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. அதை நான் எக்ஸ் தளத்திலும் பதிவிட்டேன். உள்துறை அமைச்சகமும் செய்தி வெளியிட்டது. ஹெலிகாப்டர் மற்றும் படகுகள் மூலம் மீட்புப் பணிகள் நடைபெற்றன. அனைத்துப் படைகள் மூலமாகவும் 21-ம் தேதி வரை 42,290 பேர் மீட்கப்பட்டுள்ளனர். அதிகாரபூர்வ தகவலின்படி, 31 பேர் உயிரிழந்துள்ளனர். உடனடியாக மத்திய அரசு மீட்புப் பணியில் ஈடுபட்டாலும் இவ்வளவு பேர் உயிரிழந்தது என்பது வருத்தமளிக்க கூடிய விஷயம்.

மீட்புப் பணிகளை பொறுத்தவரை மத்திய அரசின் அனைத்து துறைகளும் ஒத்துழைத்து களத்தில் பணிபுரிந்தன. இதனால் தான் ஸ்ரீவைகுண்டம் ரயில் நிலையத்தில் சிக்கித் தவித்த 800-க்கும் மேற்பட்ட பயணிகள் ரயில்வே சார்பில் மீட்கப்பட்டனர். மத்திய உள்துறை அமைச்சகத்தில் உள்ள இரண்டு கட்டுப்பாட்டு அறைகள் மூலமாக தென்மாவட்ட மழை, வெள்ளம் குறித்து 24 மணி நேரமும் கண்காணிக்கப்பட்டு வருகிறது. இந்த தொடர் கண்காணிப்பால் உடனுக்குடன் மீட்புப் பணிகள் நடைபெற்றன. இந்திய விமானப் படை, கடற்படை, கடலோர காவல்படைகளின் 9 ஹெலிகாப்டர் 70 முறை மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ளது.

சாதாரணமாக ஒரு வெள்ளம் ஏற்படும்போது வெள்ள நீர் வடிந்த பிறகுதான் மத்திய அரசின் கணக்கெடுப்பு துறைகள் செல்லும். ஆனால், தென்மாவட்ட மழை வெள்ளம் ஏற்பட்ட சமயத்தில் மத்திய அரசின் குழு 19-ம் தேதி மாலையே நிலைமையை கண்காணிக்க சென்றுவிட்டனர். தேசிய பேரிடர் மீட்புப் படை, ராணுவம், விமானப்படை, கடற்படை, கடலோர காவல்படை இவை அனைத்தும் 5,049 பேரை மீட்டுள்ளனர். திருவனந்தபுரத்தில் இருந்தும், வெல்லிங்டனில் இருந்தும் ராணுவத்தின் படைப்பிரிவுகள் நான்கு மாவட்ட வெள்ள மீட்புப் பணிகளுக்கு உடனடியாக அனுப்பிவைக்கப்பட்டன. கடற்படையும் ஜெமினி படகுகளையும் நவீன ஹெலிகாப்டர்களையும் கொண்டு மீட்புப் பணிகளை செய்துள்ளன. இப்படியாக மத்திய அரசின் படைகள் உடனடியாக மீட்புப் பணியில் இறங்கியதால் நிறைய பேரை மீட்க முடிந்தது.

ஒவ்வொரு வருடமும் மாநில பேரிடர் நிதிக்கு மத்திய பேரிடர் நிதியில் இருந்து பணம் வழங்குவது உண்டு. இந்த நிதியாண்டில் ரூ.813.15 கோடி தமிழக அரசிடம் இருந்துள்ளது. இந்த வருடத்துக்கு மாநில பேரிடர் நிதிக்கு மத்திய அரசு ரூ.900 கோடி கொடுக்க வேண்டியது. இதில் முதல் தவணையாக ரூ.450 கோடியை இந்த புயல் வருவதுக்கு முன்னதாகவே கொடுத்துவிட்டோம். இரண்டாவது தவணையாக மீதமுள்ள ரூ.450 கோடியை தென்மாவட்ட மழை வெள்ளம் ஏற்படும் முன்னதாகவே டிசம்பர் 12ம் தேதி கொடுத்துவிட்டோம்.

சென்னை வானிலை மையம் தென்மாவட்ட மழை குறித்து டிச.12ம் தேதியே தகவல் கொடுத்துள்ளது. அதிநவீன உபகரணங்கள் உள்ள மையம் சென்னை வானிலை மையம். அந்த மையத்தில் இருந்து தென்மாவட்ட வெள்ளம் ஏற்படுவதற்கு ஐந்து நாட்கள் முன்னதாகவே மாநில அரசுக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அதனால் முன்னெச்சரிக்கை தகவல் கொடுக்கப்படவில்லை என்பது தவறு. இன்ச் பை இன்ச் இவ்வளவு மழை வரும் என்பதை கணித்துக் கூற முடியாது.

இந்த முறை தனிப்பட்ட வகையில் நான் இதில் ஈடுபட்டேன். பிரதமரையும், அமித் ஷாவையும் தனிப்பட்ட முறையில் சந்தித்து தென்மாவட்ட வெள்ளம் குறித்து கோரிக்கை வைத்த உடனேயே என் முன்னால் மீட்புப் பணிக்கான அனைத்து உத்தரவுகளும் பிறப்பிக்கப்பட்டன.

வானிலை முன்னெச்சரிக்கை முறையாக வழங்கப்பட்டது. ஆனால், தென்மாவட்ட பொறுப்பு தமிழக அமைச்சர்களும், அதிகாரிகளும் எப்போது பாதிக்கப்பட்ட இடங்களுக்குச் சென்றனர்? தேசிய பேரிடர் மீட்புப் படை செல்லும் முன் அவர்கள் அங்கு இல்லை. தேசிய பேரிடர் மீட்புப் படை சென்ற பிறகே தமிழக அமைச்சர்கள் தென்மாவட்டங்களுக்கு சென்றார்கள். கனமழைக்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தமிழக அரசு எடுக்கவில்லை. மழை பாதிப்பில் இருந்து மக்களை மீட்க தமிழக அதிகாரிகள் விரைந்து செயல்படவில்லை. கனமழை பெய்யும் என எச்சரித்த பின்னர் எடுக்கபட்ட நடவடிக்கை என்ன?. முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்காமல் இருந்துவிட்டு வானிலை மையம் மீது குற்றம் சாட்டுவது ஏன். சென்னையில் ரூ.4000 கோடி செலவிட்டு மழைநீர் வடிகால் அமைத்ததாக அமைச்சர் கூறினாரே. அப்போது 92% சதவீதம் வடிகால் பணிகளுக்கு செலவழித்தாக கூறிவிட்டு தற்போது மழை வெள்ளம் வந்ததும் அதே அமைச்சர் 42% தான் செலவழித்தோம் என மாற்றி பேசுகிறார்.

2015 வெள்ளத்துக்கு பிறகு கற்றுக்கொண்ட பாடம் என்ன? அதிலிருந்து எடுத்த நடவடிக்கைகள் என்ன? தேசிய பேரிடர் மீட்புப் படையை டெல்லியில் இருந்து நாங்கள் தென்மாவட்டங்களுக்கு அனுப்பிக் கொண்டிருக்கிறோம். ஆனால், அந்த சமயத்தில் தமிழக முதல்வர் ஸ்டாலின் டெல்லியில் இருந்தார். தென்மாவட்டங்களில் பேரிடர் ஏற்பட்ட சமயத்தில் முதல்வர் இண்டியா கூட்டணி கூட்டத்தில் பங்கேற்றுக் கொண்டிருந்தார்” என்றார்.

முதல்வர் மீது விமர்சனம்: தொடர்ந்து பேசிய அமைச்சர் நிர்மலா, “2015 வெள்ளத்துக்கு பிறகு கற்றுக்கொண்ட பாடம் என்ன?. அதிலிருந்து எடுத்த நடவடிக்கைகள் என்ன?. மக்கள் மழை, வெள்ளத்தில் தத்தளித்து கொண்டிருக்கும்போது தமிழக முதல்வர் என்ன செய்துகொண்டிருந்தார். தேசிய பேரிடர் மீட்புப் படையை டெல்லியில் இருந்து நாங்கள் தென்மாவட்டங்களுக்கு அனுப்பிக் கொண்டிருக்கிறோம். ஆனால், அந்த சமயத்தில் தமிழக முதல்வர் ஸ்டாலின் டெல்லியில் இருந்தார். தென்மாவட்டங்களில் பேரிடர் ஏற்பட்ட சமயத்தில் முதல்வர் இண்டியா கூட்டணி கூட்டத்தில் பங்கேற்று கொண்டிருந்தார். போகிற போக்கில் 3 நாட்களுக்கு பிறகு பாதிப்புகளை பார்வையிட்டுள்ளார்” என்றார்.

தொடர்ந்து பேசிய அவர், "தேசிய பேரிடர் என்றும் அறிவிக்கும் சிஸ்டமே இல்லை. தேசிய பேரிடராக மத்திய அரசு இதுவரை அறிவித்ததே இல்லை. இனி அறிவிக்கவும் முடியாது. வேறு எந்த மாநிலத்துக்கும் தேசிய பேரிடர் என்று அறிவித்தது இல்லை.

உத்தராகண்ட் உள்ளிட்ட மாநிலங்களின் மழை, வெள்ளத்தின் போதும் தேசிய பேரிடர் என அறிவிக்கவில்லை. எனவே, தமிழக வெள்ள பாதிப்பை தேசிய பேரிடராக அறிவிக்க முடியாது. ஆனால், மாநில அளவில் எடுத்துக்கொண்டால் சம்பந்தப்பட்ட மாநிலப் பேரிடராக அறிவிக்க விரும்பினால் அதற்கான நடைமுறைகளுக்கு மத்திய அரசு உதவும். மத்திய அரசின் பரிந்துரைகளை பெற்று மாநில அரசால் ‘மாநிலப் பேரிடர்’ என அறிவிக்க முடியும். மத்திய நிதி ஆணையத்தின் பரிந்துரைகளை பெற்று மாநில அரசு பேரிடராக அறிவிக்கும் பட்சத்தில் மாநில அரசின் பேரிடர் நிதியில் இருந்து 10 சதவீதத்தை அந்த பேரிடருக்கு பயன்படுத்தவும் முடியும்.

தமிழக அரசு வெள்ள பாதிப்புகளுக்கு நிவாரணமாக ரூ.6000 அளிப்பதில் நான் எதுவும் சொல்ல முடியாது. அது தமிழக அரசின் விருப்பம். ஆனால் கொடுக்கின்ற பணத்தை மக்களின் வங்கிக் கணக்கில் கொடுத்திருக்கலாம். அரசு பணத்தை ஏன் ரொக்கமாக கொடுக்க வேண்டும். ரொக்கமாக கொடுத்தால், அது யாருக்கு கொடுக்கப்பட்டது என்பதில் கணக்கு வைக்க முடியாது. ரொக்கமாக வழங்கியதற்கு பதில் வங்கியில் செலுத்தினால் வெளிப்படைத் தன்மை இருந்திருக்கும்" என்று அவர் தெரிவித்தார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

9 mins ago

தமிழகம்

19 mins ago

தமிழகம்

37 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

15 hours ago

தமிழகம்

15 hours ago

தமிழகம்

17 hours ago

தமிழகம்

17 hours ago

தமிழகம்

18 hours ago

தமிழகம்

18 hours ago

தமிழகம்

18 hours ago

தமிழகம்

19 hours ago

மேலும்