அமைச்சர் ராஜகண்ணப்பனுக்கு பொன்முடி வகித்த துறைகள் ஒதுக்கீடு: ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல்

By செய்திப்பிரிவு

சென்னை: சொத்துக் குவிப்பு வழக்கில் தண்டனை விதிக்கப்பட்டதைத் தொடர்ந்து, பொன்முடி வகித்து வந்த உயர் கல்வி உள்ளிட்ட துறையை அமைச்சர் ராஜகண்ணப்பனுக்கு ஒதுக்கீடு செய்ய ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல் அளித்துள்ளார்.

பொன்முடி கவனித்து வந்த உயர் கல்வித் துறையை, பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத் துறை அமைச்சர் ராஜகண்ணப்பனுக்கு ஒதுக்கீடு செய்யக் கோரி ஆளுநருக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் அனுப்பியிருந்தார். இதையடுத்து, பொன்முடி வகித்து வந்த துறைகளை அமைச்சர் ராஜகண்ணப்பனுக்கு ஒதுக்கீடு செய்ய ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல் அளித்தார். மேலும், அமைச்சர் ராஜகண்ணப்பன் வசம் இருந்த கதர், கிராமத்தொழில் துறை, அமைச்சர் ஆர்.காந்திக்கு கூடுதல் பொறுப்பாக வழங்கவும் ஆளுநர் ஒப்புதல் அளித்துள்ளார்.

வழக்கு - தண்டனையின் பின்புலம்: வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவித்ததாக பதிவு செய்யப்பட்ட வழக்கில், தமிழக உயர் கல்வி துறை அமைச்சர் பொன்முடிக்கும், அவரது மனைவி விசாலாட்சிக்கும் தலா 3 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ரூ.50 லட்சம் அபராதமும் விதித்து சென்னை உயர் நீதிமன்றம் வியாழக்கிழமை உத்தரவிட்டது. இதைத் தொடர்ந்து, எம்எல்ஏவாக பதவி வகிக்கும் தகுதியை பொன்முடி இழந்தார். இதனால், அவரது அமைச்சர் பதவியும் பறிபோனது.

30 நாட்களில் சரண் அடைய வேண்டும்: சரணடைய 30 நாட்கள் அவகாசம் வழங்கிய சென்னை உயர் நீதிமன்றம், 30 நாட்கள் அவகாசத்துக்குள் சரணடையாவிட்டால், தண்டனையை அனுபவிக்கச் செய்வதற்கான நடைமுறைகளை விழுப்புரம் நீதிமன்றம் மேற்கொள்ள வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளது.

முன்னதாக, க.பொன்முடி கடந்த 2006-11 திமுக ஆட்சி காலத்தில் உயர் கல்வி, கனிமவளத் துறை அமைச்சராக இருந்தார். அப்போது, வருமானத்துக்கு அதிகமாக ரூ.1.72 கோடி அளவுக்கு சொத்து குவித்ததாக பொன்முடி, அவரது மனைவி விசாலாட்சி ஆகியோருக்கு எதிராக அதிமுக ஆட்சி காலத்தில் விழுப்புரம் மாவட்ட லஞ்ச ஒழிப்பு துறை போலீஸார் கடந்த 2011-ம் ஆண்டுஊழல் தடுப்பு சட்டத்தின்கீழ் வழக்கு பதிவு செய்தனர்.

விழுப்புரம் மாவட்ட தலைமை குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நடந்தது. பின்னர், விழுப்புரம் மாவட்ட ஊழல் தடுப்பு சிறப்பு நீதிமன்றத்துக்கு வழக்கு கடந்த 2015-ம் ஆண்டு மாற்றப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிபதி சுந்தரமூர்த்தி, இந்த வழக்கில் பொன்முடி, விசாலாட்சி மீதான குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்படவில்லை என்று கூறி இருவரையும் விடுதலை செய்து கடந்த 2016 ஏப்ரல் 18-ம் தேதி தீர்ப்பு அளித்தார். இதை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் லஞ்ச ஒழிப்பு துறை சார்பில் கடந்த 2017-ம் ஆண்டு மேல்முறையீடு செய்யப்பட்டது. பல ஆண்டுகளாக நிலுவையில் இருந்த இந்த வழக்கு விசாரணை, இறுதியாக நீதிபதி ஜி.ஜெயச்சந்திரன் முன்பு நடந்து வந்தது.

பொன்முடி தரப்பு வாதங்களை ஏற்க மறுத்த நீதிபதி பிறப்பித்த விரிவான தீர்ப்பில், ‘விழுப்புரம் சிறப்பு நீதிமன்றம் இந்த வழக்கை மேலோட்டமாக விசாரித்துள்ளது. வருமானத்துக்கு அதிகமாக ரூ.1.72கோடி அளவுக்கு, அதாவது 64.90 சதவீதம் அளவுக்கு அமைச்சர் பொன்முடியும், அவரது மனைவி விசாலாட்சியும் சொத்துகுவித்துள்ளதாக ஊழல் தடுப்பு சட்டத்தின்கீழ் லஞ்ச ஒழிப்பு போலீஸார் சுமத்தியுள்ள குற்றச்சாட்டுகள் சரிவர நிரூபணமாகியுள்ளன. ஆனால், அவர்களது வருமானத்தை தனித்தனியாக பிரித்துப் பார்த்து, வருமான வரி கணக்கு அடிப்படையில் இருவரையும் சிறப்பு நீதிமன்றம் விடுதலை செய்தது அடிப்படையிலேயே தவறு. அந்த தீர்ப்பை ரத்து செய்கிறேன்.

பொது ஊழியரான அமைச்சர் பொன்முடிக்கு, கணக்கில் காட்டப்படாத வகையில் வந்த வருமானம் மூலம் அவரது மனைவி விசாலாட்சி பல்வேறு சொத்துகளை வாங்கி குவித்துள்ளார். இந்த மூலதன வருமானத்தை சிறப்பு நீதிமன்றம் கவனத்தில் கொள்ளவில்லை. எனவே, இந்த வழக்கில் இருவரும் குற்றவாளிகள்’ என்று நீதிபதி தனது தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளார்.

மக்கள் பிரதிநிதித்துவ சட்டம் பிரிவு 8(1)-ன்படி, ஊழல் தடுப்பு போன்ற சட்டங்களின்கீழ் குற்றவாளி என அறிவிக்கப்பட்டாலே சம்பந்தப்பட்ட மக்கள் பிரதிநிதிகள் தகுதி இழப்புக்கு ஆளாக நேரிடும். மேலும், ஊழல் தடுப்பு சட்டத்தின்கீழ், தண்டனை விதிக்கப்படாமல் ஒரு ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டாலும் கூட தகுதி இழப்பு செய்யப்படுவார்கள். அதுபோல, இந்த வழக்கில் சிறை தண்டனையை அனுபவித்து விடுதலை செய்யப்பட்டாலும், அதன்பிறகு 6 ஆண்டுகளுக்கு தேர்தலில் போட்டியிட முடியாது. தற்போது ஊழல் தடுப்பு சட்டத்தின்கீழ் பொன்முடி குற்றவாளி என உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்து, 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து உத்தரவிட்டதால், தனது எம்எல்ஏ, அமைச்சர் பதவியை பொன்முடி இழந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

நிலுவையில் மற்றொரு வழக்கு: கடந்த 1996-2001 திமுக ஆட்சியில் போக்குவரத்து அமைச்சராக பொன்முடி இருந்தபோது, வருமானத்துக்கு அதிகமாக ரூ.1.36 கோடி அளவுக்கு சொத்து குவித்ததாக பொன்முடி, விசாலாட்சி உள்ளிட்டோருக்கு எதிராக 2002-ல் அதிமுக ஆட்சியில் ஊழல் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கில் இருந்து இருவரையும் வேலூர் முதன்மை அமர்வு நீதிமன்றம் கடந்த ஜூன் மாதம் விடுதலை செய்தது. இத்தீர்ப்பை மறு ஆய்வு செய்யும் விதமாக உயர் நீதிமன்றம் தாமாக முன்வந்து வழக்காக எடுத்து விசாரிக்கிறது. நீதிபதி ஜெயச்சந்திரன் முன்பு இந்த வழக்கு நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE