சென்னை: வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவித்த வழக்கில் 3 ஆண்டு சிறை தண்டனையை பெற்ற தமிழக உயர்கல்வி துறை அமைச்சர் பொன்முடி எம்எல்ஏ பதவியை இழந்ததாக சட்டப்பேரவை அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.
திருக்கோவிலூர் தொகுதியின் எம்எல்ஏவாக இருக்கும் பொன்முடி மூன்றாண்டு சிறை தண்டனை விதிப்பால் எம்எல்ஏ தகுதியை இழப்பார் எனத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
மக்கள் பிரதிநிதித்துவ சட்டம் பிரிவு 8(1)-ன்படி, ஊழல் தடுப்பு போன்ற சட்டங்களின்கீழ் குற்றவாளி என அறிவிக்கப்பட்டாலே சம்பந்தப்பட்ட மக்கள் பிரதிநிதிகள் தகுதி இழப்புக்கு ஆளாக நேரிடும். மேலும், ஊழல் தடுப்பு சட்டத்தின்கீழ், தண்டனை விதிக்கப்படாமல் ஒரு ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டாலும்கூட தகுதி இழப்பு செய்யப்படுவார்கள். அதேபோல், மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தின் 8(3)-வது பிரிவின் கீழ், ஒருவருக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டால், சிறை தண்டனை காலத்திலும், அதற்கு பிறகு 6 ஆண்டு காலத்துக்கும் தேர்தலில் போட்டியிட தகுதியில்லை.
சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது உடனே, தானாக இந்த சட்டம் அமலுக்கு வந்துவிடும் என்பதன் அடிப்படையில் அமைச்சர் பொன்முடியும் தானாக தகுதியிழப்பு செய்யப்படுவார் எனக் கூறப்படுகிறது. அமைச்சர் பதவியையும், எம்எல்ஏ என்ற தகுதியையும் இழப்பார் எனச் சொல்லப்படுகிறது. சமீபத்தில் காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்திக்கும் இதேபோல் தகுதியிழப்பு செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழகத்தில், சிறை தண்டனை விதிக்கப்பட்டதால் அரசு பதவியை இழந்தவர்கள் வரிசையில் மூன்றாவதாக இணைந்துள்ளார் அமைச்சர் பொன்முடி. இதற்கு முன் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, முன்னாள் அமைச்சர் பாலகிருஷ்ண ரெட்டி ஆகியோர் பதவி இழந்துள்ளனர். 2014ல் சொத்துக் குவிப்பு வழக்கில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா 4 ஆண்டுகள் சிறை தண்டனை பெற்றார். தொடர்ந்து கலவர வழக்கில் முன்னாள் அமைச்சர் பாலகிருஷ்ண ரெட்டிக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது. ஜெயலலிதா, பாலகிருஷ்ண ரெட்டி வரிசையில் அமைச்சராக இருந்தேபோதே பொன்முடிக்கு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
அடுத்து என்ன?: அமைச்சர் பொன்முடி மீதான உயர் நீதிமன்றத்தின் தண்டனை விவரங்கள் சட்டப்பேரவை செயலகத்துக்கு அனுப்பி வைக்கப்படும். அதன்பின், மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தின்படி பொன்முடியின் தகுதியிழப்பு அறிவிப்பாணையை சட்டப்பேரவை செயலகம் வெளியிடும். சட்டப்பேரவை செயலகத்தின் அறிவிப்பாணை தமிழக அரசின் அரசிதழில் வெளியிடப்பட்டு தகுதியிழப்பு நடைபெறும்.
இதன்பின் பொன்முடியின் தொகுதியான திருக்கோவிலூர் தொகுதி காலி என தேர்தல் ஆணையத்தால் அறிவிக்கப்படும். காலி என அறிவிக்கப்பட்ட 6 மாதத்துக்குள் திருக்கோவிலூர் தொகுதிக்கு தேர்தல் நடைபெறும். என சட்டப்பேரவை செயலக அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.
தண்டனை விவரம்: அதன்படி, பொன்முடிக்கும் அவரது மனைவி விசாலட்சுமிக்கும் தலா 3 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இருவருக்கும் தலா ரூ.50 லட்சம் அபராதமும் விதித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அதேவேளையில் மேல்முறையீடு செய்ய ஏதுவாக இருவருக்குமான தண்டனை 30 நாட்களுக்கு நிறுத்திவைக்கப்பட்டுள்ளது.
முன்னதாக, நீதிமன்றத்தில் இன்று பொன்முடி தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் என்.ஆர்.இளங்கோ, அமைச்சர் பொன்முடி அவரது மனைவி விசாலாட்சியின் வயது, மருத்துவ நிலையைக் கருத்தில் கொண்டு தண்டனையை அறிவிக்க வேண்டும் என்று கோரியதாகத் தகவல்.
வழக்கு பின்னணி: தமிழகத்தின் தற்போதைய உயர்கல்வி துறை அமைச்சர் க.பொன்முடி கடந்த 2006-11 திமுக ஆட்சி காலத்தில் உயர்கல்வி, கனிமவளத் துறை அமைச்சராக இருந்தார். அப்போது, வருமானத்துக்கு அதிகமாக ரூ.1.72 கோடி அளவுக்கு சொத்து குவித்ததாக பொன்முடி, அவரது மனைவி விசாலாட்சி ஆகியோருக்கு எதிராக அதிமுக ஆட்சி காலத்தில் விழுப்புரம் மாவட்ட லஞ்ச ஒழிப்பு துறை போலீஸார் கடந்த 2011-ம் ஆண்டுஊழல் தடுப்பு சட்டத்தின்கீழ் வழக்கு பதிவு செய்தனர்.
விழுப்புரம் மாவட்ட தலைமை குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நடந்தது. பின்னர், விழுப்புரம்மாவட்ட ஊழல் தடுப்பு சிறப்பு நீதிமன்றத்துக்கு வழக்கு கடந்த 2015-ம் ஆண்டுமாற்றப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிபதி சுந்தரமூர்த்தி, இந்த வழக்கில்பொன்முடி, விசாலாட்சி மீதான குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்படவில்லை என்றுகூறி இருவரையும் விடுதலை செய்து கடந்த 2016 ஏப்ரல் 18-ம் தேதி தீர்ப்பு அளித்தார்.
இதை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் லஞ்ச ஒழிப்பு துறை சார்பில்கடந்த 2017-ம் ஆண்டு மேல்முறையீடு செய்யப்பட்டது. பல ஆண்டுகளாக நிலுவையில் இருந்த இந்த வழக்கு விசாரணை, இறுதியாக நீதிபதி ஜி.ஜெயச்சந்திரன் முன்பு நடந்து வந்தது.
அப்போது, பொன்முடி தரப்பில், ‘மனைவி விசாலாட்சிக்கு சொந்தமாக பல ஏக்கரில் விவசாய நிலமும், தனியாகவணிகமும் நடந்து வருவதால், அதில்கிடைத்த வருமானத்தையும், என் வருமானத்துடன் ஒன்றாக சேர்த்துள்ளனர். புலன்விசாரணை அதிகாரி இதைகவனத்தில் கொள்ளவில்லை. எங்களுக்கு எதிரான குற்றச்சாட்டுகளுக்கு எந்த ஆதாரமும் இல்லை என்பதால்தான் கீழமை நீதிமன்றம் விடுதலை செய்து தீர்ப்பளித்தது’ என்று வாதிடப்பட்டது.
லஞ்ச ஒழிப்புத் துறை தரப்பில், ‘பொன்முடி, விசாலாட்சிக்கு எதிரான வருமானவரி கணக்குகள், சொத்து விவரங்கள்,வங்கி கணக்கு விவரங்கள் ஆகியவற்றுடன், மொத்தம் 39 சாட்சிகளிடம் விசாரணை நடத்தி, குற்றப் பத்திரிகை தாக்கல்செய்யப்பட்டது. ஆனால், குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்படவில்லை என்று கூறி இருவரையும் ஊழல் தடுப்பு நீதிமன்றம் விடுதலை செய்தது. எனவே அந்தத் தீர்ப்பை ரத்து செய்ய வேண்டும்’ என வாதிடப்பட்டது. இந்நிலையில் அவர்களுக்கான தண்டனை விவரம் தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது.
முக்கிய செய்திகள்
தமிழகம்
5 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
13 hours ago
தமிழகம்
13 hours ago
தமிழகம்
13 hours ago
தமிழகம்
14 hours ago
தமிழகம்
14 hours ago
தமிழகம்
14 hours ago
தமிழகம்
15 hours ago
தமிழகம்
16 hours ago
தமிழகம்
16 hours ago
தமிழகம்
16 hours ago
தமிழகம்
16 hours ago
தமிழகம்
17 hours ago