இயற்கை பேரிடரின்போது மக்களும் நேரடியாக தொடர்புகொண்டு உதவி கோரலாம்: இந்தியக் கடலோர காவல் படை கிழக்குப் பிராந்திய கமாண்டர் தகவல்

By ப.முரளிதரன்

சென்னை: புயல், மழை, வெள்ளம் போன்ற இயற்கை பேரிடர் ஏற்படும்போது பொதுமக்கள் எங்களையும் நேரடியாகத் தொடர்புகொண்டு உதவி கேட்கலாம். நாங்கள் உதவத் தயாராக உள்ளோம் என இந்தியக் கடலோர காவல் படை கமாண்டர் ஐ.ஜி. டானி மைக்கேல் தெரிவித்துள்ளார்.

புயல், மழை வெள்ளம் போன்ற இயற்கை பேரிடர்களின்போது ஆற்றிவரும் பணிகள் குறித்து, சென்னையில் உள்ள இந்தியக் கடலோர காவல் படையின் கிழக்குப் பிராந்திய கமாண்டர் ஐ.ஜி. டானி மைக்கேல் ‘இந்து தமிழ் திசை’ நாளிதழுக்கு அளித்த சிறப்பு நேர்காணல்:

சென்னையில் கடந்த 4-ம் தேதி மிக்ஜாம் புயலின்போது அதிகன மழை பெய்தது. இந்தப் புயல் வருவதற்கு 3 தினங்களுக்கு முன்பாகவே எங்களுக்கு எச்சரிக்கை தகவல் கிடைத்தது.

மிக்ஜாம் புயலின்போது, வடசென்னை பகுதியில் முதலில் ஹெலிகாப்டர் மூலம் வான்வெளி வழியாக சர்வே நடத்தினோம். அப்போது, அங்கு தாழ்வான பகுதிகளில் மக்கள் வெள்ளத்தில் சிக்கிதவிப்பதைக் கண்டோம். உடனடியாக அவர்களுக்கு ஹெலிகாப்டர் மூலம் உணவு கொண்டு சென்று வழங்கினோம்.

மிக்ஜாம் புயலின்போது சென்னையில் 2 நாட்களில் 150-க்கும்மேற்பட்ட பொதுமக்களை கடலோரகாவல் படை மீட்டது. அதேபோல், 600-க்கும் மேற்பட்ட உணவுப் பொருட்கள் விநியோகம் செய்யப்பட்டன.

அதிகனமழை பெய்த தினத்தன்று எண்ணூர் முகத்துவாரத்தில் எண்ணெய் கசிவு ஏற்பட்டது. இதுகுறித்து தகவல் அறிந்த 2 மணி நேரத்துக்குள் எங்களது குழு அங்கு சென்றது. இந்த எண்ணெய் கசிவு முகத்துவாரம் வழியாக சென்று 10 கி.மீ. தூரத்துக்கு பரவியது. கசிவு ஏற்பட்டால் அவை வேறு பகுதிக்குச் செல்லாதவாறு முதலில் தடுத்து நிறுத்த வேண்டும்.

கடந்த 10-ம் தேதி எண்ணூர் கடற்பகுதியில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டபோது எண்ணெய் படலம் கடல் பகுதியில் 20 கி.மீ.தூரத்துக்கு பரவுவதைக் கண்டோம். உடனடியாக, ஹெலிகாப்டர்மூலம் ரசாயனத்தை தூவி எண்ணெய் படலத்தை அகற்றினோம். இல்லையென்றால், எண்ணெய் படலம் மெரினா முதல் பெசன்ட் நகர்வரை பரவியிருக்கும். மேலும், இந்தநடவடிக்கையால் காசிமேடுக்கு கூட எண்ணெய் படலம் பரவவில்லை.

திருநெல்வேலி, தூத்துக்குடி உள்ளிட்ட மாவட்டங்களில் அதிகனமழை பெய்ய உள்ளதாக எங்களுக்கு 3 தினங்களுக்கு முன்பாகதகவல் கிடைத்தது. ஆனால், ஒரேநாளில் 90 செ.மீ. அளவுக்கு மழைபெய்யும் என கருதவில்லை. எனினும், நாங்கள் முன்னெச்சரிக்கையாக இந்தியக் கடலோர காவல்படையின் ‘சுஜய்’ என்ற கப்பலை ஒரு சேட்டக் ஹெலிகாப்டருடன் 2 தினங்களுக்கு முன்பாக தூத்துக்குடி துறைமுகத்துக்கு அனுப்பி வைத்தோம். தமிழக அரசு எங்களிடம் விடுத்த கோரிக்கையை ஏற்று டார்னியர் விமானமும் அங்கு அனுப்பி வைக்கப்பட்டது.

வெள்ளத்தில் சிக்கித் தவித்த பொதுமக்கள் 84 பேரை நேற்று முன்தினம் மீட்டோம். நேற்று 3 கர்ப்பிணிகள் உள்ளிட்ட 54 பேரைமீட்டோம். அதேபோல், 450 பேருக்குஉணவுகளை வழங்கினோம். தூத்துக்குடி, திருநெல்வேலி உள்ளிட்டமாவட்டங்களில் மீட்பு பணியில்கடலோர காவல் படையின் 3 கப்பல்கள், 3 ஹெலிகாப்டர், ஒரு டார்னியர் விமானம் மற்றும் 150 வீரர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

இதுபோல் இயற்கை பேரிடர் ஏற்படும்போது பொதுமக்கள் எங்களை நேரடியாகத் தொடர்பு கொண்டும் உதவி கேட்கலாம். நாங்கள் உதவத் தயாராக உள்ளோம். மீனவர்களுக்கு உதவுவதற்காக ‘1511’ என்ற கட்டணமில்லா உதவி எண் உள்ளது. பொதுமக்களும் பேரிடர் சமயங்களில் அவசர உதவி தேவைப்பட்டால் இந்த எண்ணை தொடர்பு கொண்டு உதவி கோரினால் நாங்கள் நிச்சயம் உதவத் தயாராக உள்ளோம். இவ்வாறு கூறினார்.

இப்பேட்டியின் போது, கடலோர காவல்படையின் கமாண்டன்ட் சோமசுந்தரம் உடன் இருந்தார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE