புலம்பெயர்வோர் மசோதா சட்டமாக்க நடவடிக்கை: அமைச்சர்கள் மஸ்தான், கணேசன் உறுதி

By செய்திப்பிரிவு

சென்னை: புலம்பெயர்வோர் மசோதாவை சட்டமாக்கிட முதல்வர் வாயிலாக மத்திய அரசை வலியுறுத்துவோம் என அமைச்சர்கள் செஞ்சி கே.எஸ்.மஸ்தான், சி.வி.கணேசன் ஆகியோர் தெரிவித்தனர்.

புலம்பெயர்வோர் மசோதாவை சட்டமாக்கிட மத்திய அரசை வலியுறுத்தி தமிழ்நாடு விவசாயிகள் - தொழிலாளர்கள் கட்சி சார்பில் சென்னையில் நேற்று கூட்டம் நடைபெற்றது. இதில் அரசியல் கட்சித் தலைவர்கள் பலர் பேசினர்.

வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் செஞ்சி கே.எஸ்.மஸ்தான்: வெளிநாடுகளுக்கு வேலைக்குச் செல்வோர் தொடர்புடைய துறையில் பதிவு செய்ய வேண்டும். அவர்களை ஏமாற்றும் போலி முகவர்கள் மீது நடவடிக்கை எடுத்து வருகிறோம். கூட்டத்தில் நிறைவேற்றப்படும் தீர்மானங்கள் முதல்வரிடம் நிச்சயம் எடுத்துச் செல்லப்படும்.

தொழிலாளர் நலத்துறை அமைச்சர் சி.வி.கணேசன்: கட்டுமான தொழிலாளர் நலவாரிய உறுப்பினர்களுக்கு வழங்கப்படாமல் இருந்த ரூ.1,273 கோடி கடந்த2 ஆண்டுகளில் வழங்கப்பட்டுள்ளது. 10 ஆயிரம் கட்டிட தொழிலாளர்களுக்கு வீடு கட்ட நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. ஓய்வூதியம் உயர்த்தவும் நவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதேபோல், புலம்பெயர் தொழிலாளர்களுக்கான கோரிக்கைகளும் முதல்வர் வாயிலாக செயல்படுத்தப்படும்.

மார்க்சிஸ்ட் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன்: பேரிடரில் தவிக்கும் தமிழக மக்களுக்கான நிதியை தரத் தயங்கும் மத்திய அரசு, எங்கோ வாழும் மக்களுக்கான மசோதாவை எப்படி நிறைவேற்றும். புதிய அரசு பொறுப்பேற்ற பிறகு இந்த கோரிக்கையை வைப்பது தான் பொருத்தமாக இருக்கும்.

கட்டுமானத் தொழிலாளர்கள் நலவாரியத் தலைவர் பொன்குமார்: பருவநிலை மாற்றத்தை கட்டுப்படுத்தும் திட்டத்தில் தொழிலாளர்களுக்கான சரத்து இடம் பெற வேண்டும். புலம்பெயர்வோர் மசோதாவை தக்க மாற்றங்களுடன் விரைவில் மத்திய அரசு சட்டமாக்க வேண்டும்.

இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

மேலும் இக்கூட்டத்தில், இந்திய கம்யூனிஸ்ட் துணைச் செயலாளர் மு.வீரபாண்டியன், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநில பொதுச்செயலாளர் கே.ஏ.எம்.முஹம்மது அபூபக்கர், எம்எல்ஏ-க்கள்எஸ்.எஸ்.பாலாஜி, ஏ.எம்.வி.பிராபகர் ராஜா, தமிழ்நாடு விவசாயிகள் - தொழிலாளர்கள் கட்சி பொதுச்செயலாளர்கள், முக்கிய நிர்வாகிகள் உள்ளிட்டோர் பங்கேற்று பேசினர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE