இன்றும், நாளையும் தென் தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு

By செய்திப்பிரிவு

சென்னை: தென் தமிழகத்தில் இன்றும், நாளையும் மழை பெய்ய வாய்ப்பிருப்பதாக சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக அம்மையத்தின் இயக்குநர் பா.செந்தாமரை கண்ணன் நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பு:

குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் நேற்று முன்தினம் நிலவிய வளிமண்டல சுழற்சி லட்சத்தீவு மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் நேற்றும் நிலவியது. இந்நிலையில், தென் தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், வட தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இன்றும் (டிச.20), நாளையும் (டிச.21) லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். தமிழகத்தின் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் டிச.22 முதல் 25-ம் தேதி வரை லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். சென்னையைப் பொருத்தவரை இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் லேசான மழை பெய்யக்கூடும்.

மழை அளவு: தமிழகத்தில் நேற்று காலை 8.30 மணி வரையிலான கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூரில் 23 செமீ மழை பதிவானது. இதற்கு அடுத்தபடியாக தூத்துக்குடி மாவட்டம் காயல்பட்டினத்தில் 21, திருநெல்வேலி மாவட்டம் நாலுமுக்கில் 19, காக்காச்சியில் 18, மாஞ்சோலையில் 17, மூலைக்கரைப்பட்டியில் 13, அம்பாசமுத்திரத்தில் 12, பாபநாசத்தில் 11 செமீ மழை பதிவானது.

தென்தமிழக கடலோரப் பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் குமரிக்கடல் பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாமென அறிவுறுத்தப்படுகிறார்கள். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE