பொங்கல் பரிசு, வெள்ள நிவாரண பணப்பலன்களை மக்களுக்கு வங்கி கணக்கில் செலுத்தலாம்: உயர் நீதிமன்ற நீதிபதி யோசனை

By செய்திப்பிரிவு

சென்னை: பொங்கல் பரிசு மற்றும் வெள்ள நிவாரணம் போன்ற பணப்பலன்களை பொதுமக்களின் வங்கி கணக்கில் செலுத்தினால் முறைகேடுகளை தவிர்க்க இயலும் என உயர் நீதிமன்ற நீதிபதி யோசனை தெரிவித்துள்ளார்.

கூட்டுறவு சங்கங்களி்ல் உறுப்பினர்களுக்கு வட்டி வருவாய் ரூ.40 ஆயிரத்துக்கு அதிகமானால் வருமானவரி சட்டத்தின் பிரிவுகள் 194ஏ மற்றும் 194என் ஆகியவற்றின் கீழ் வருமானவரி பிடித்தம் செய்ய மாநில அரசு தலைமை கூட்டுறவு வங்கி, தமிழகம் முழுவதும் உள்ள கூட்டுறவு சங்கங்களுக்கு கடந்த 2021-ல் சுற்றறிக்கை பிறப்பித்தது. இதை ரத்து செய்யக்கோரி ஈரோடு மாவட்டம் சென்னிமலை முருகன் தொடக்க நெசவாளர் கூட்டுறவு சங்கம் உள்ளிட்ட பல்வேறு சங்கங்கள் உயர் நீதிமன்றத்தில் வழக்குகளைத் தொடர்ந்திருந்தன.

இந்த வழக்குகள் மீதான விசாரணை நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி முன்பாக நடந்தது. அப்போது மனுதாரர்கள் தரப்பிலும், வருமானவரித் துறை தரப்பிலும் வாதிடப்பட்டது.

இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, முதலீடுகளைப் பெற்று வட்டி வழங்கும் மனுதாரர்களின் சங்கங்கள் ரிசர்வ் வங்கி விதிகளின்படி வங்கி நடவடிக்கைகளையே மேற்கொள்கின்றன என்பதால் வருமானவரி பிடித்தம் செய்யலாம். தற்போதைய நிலையில் அதிகமாக பிடித்தம் செய்திருந்தால் அதை திரும்ப வழங்கக் கோரலாம் எனக்கூறி வழக்குகளை முடித்து வைத்தார்.

மேலும், வருமானவரிச் சட்டத்தின் கீழ் ரொக்கமில்லாத டிஜிட்டல் பணப்பரிவர்த்தனை கொண்டு வரப்பட்டுள்ள சூழலில் மோசடிகளையும், முறைகேடுகளையும் தவிர்க்கும் வகையில் ரொக்கமில்லா பணப்பரிவர்த்தனையை இதுபோன்ற சங்கங்கள் ஊக்குவிக்க வேண்டும். பொங்கல் பரிசு, வெள்ள நிவாரணம், கரோனா நிவாரணம் போன்ற பணப்பலன்களை பொதுமக்களின் வங்கி கணக்கில் நேரடியாக செலுத்தும்போது நேரம் மிச்சப்படுவதுடன், அந்த தொகைக்கு பாதுகாப்பும் கிடைக்கும். ஊழியர்களின் பணிச்சுமையும் குறையும் என நீதிபதி தெரிவித்தார்.

மேலும் ரேஷன் கடை ஒன்றில் தனது உறவினர் சர்க்கரை மட்டுமே வாங்கி வரும் நிலையில் மற்ற பொருட்களை வாங்கியது போல குறுஞ்செய்தி வருவதாக சுட்டிக்காட்டிய நீதிபதி, இதுபோன்ற மோசடிகளை தடுக்க அரசு பல வகையில் யோசித்தாலும் ஏமாற்றுவோர் புதுமையான வழிகளை கண்டுபிடித்துக்கொண்டே இருக்கின்றனர்.

எனவே அரசின் பணப்பலன்கள் பொதுமக்களுக்கு நேரடியாக சென்றடையும் வகையில், ரொக்கமாக வழங்காமல் அவர்களின் வங்கி கணக்கில் செலுத்தப்பட்டால் முறைகேடுகள் தவிர்க்கப்படும். அவ்வாறு செலுத்தும்போது இதுபோன்ற வருமானவரி பிடித்தம் போன்ற டிடிஎஸ் பிரச்சினையும் வராது என்றும் நீதிபதி யோசனை தெரிவித்தார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE