புதுடெல்லி: தமிழகத்தில் ஏற்பட்ட மிக்ஜாம் புயல் பாதிப்பு மற்றும் தென் மாவட்டத்தில் கனமழையால் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் குறித்தும் மீட்பு, நிவாரணம் குறித்தும் பிரதமர் நரேந்திர மோடியுடன் முதல்வர் ஸ்டாலின் டெல்லியில் இன்று (செவ்வாய்க்கிழமை) ஆலோசனை நடத்தி இருந்தார். அப்போது மழை பாதிப்புகளுக்கு விரைந்து நிதி ஒதுக்கீடு செய்யுமாறு பிரதமரிடம் முதல்வர் ஸ்டாலின் கோரிக்கை வைத்தார்.
இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது. பிரதமர் நரேந்திர மோடியை இன்று (டிச. 19) புதுடெல்லியில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் சந்தித்து, மிக்ஜாம் புயல் கனமழையால் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் ஏற்பட்ட பாதிப்புகளுக்கு விரைந்து நிதி ஒதுக்கீடு செய்யக் கோரியும், தென் மாவட்டங்களில் தற்போது பெய்த அதி கனமழையால் ஏற்பட்ட பாதிப்புகள், மேற்கொள்ளப்பட்டு வரும் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகள் குறித்தும் எடுத்துரைத்து, அப்பாதிப்புகளை சீரமைத்திட தேவையான நிதியினை விரைந்து ஒதுக்கீடு செய்திட வேண்டும் என்று கேட்டுக்கொண்டு கோரிக்கை மனுவினை அளித்தார்.
மிக்ஜாம் புயல் கனமழையால் சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு மற்றும் காஞ்சிபுரம் மாவட்டங்களில் வெள்ளம் சூழ்ந்து மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டது குறித்தும், புயல் மழையால் சாலைகள், பாலங்கள், பள்ளிக் கட்டடங்கள், அரசு மருத்துவமனைகள் போன்ற பொதுக் கட்டமைப்புகளும், மின்சார உட்கட்டமைப்புகளும், உள்ளாட்சி அமைப்புகளில் குடிநீர் கட்டமைப்புகள் கிராம சாலைகள் போன்றவைகளுக்கு ஏற்பட்ட பாதிப்புகள் குறித்தும், தமிழக அரசு மீட்பு மற்றும் நிவாரண நடவடிக்கைகளை போர்க்கால அடிப்படையில் மேற்கொண்டதால் பாதிப்பிற்குள்ளான பகுதிகளில் மிக விரைவாக இயல்பு நிலை திரும்பியது குறித்தும் முதல்வர் ஸ்டாலின், பிரதமரிடம் எடுத்துரைத்தார்.
மேலும், மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், கடந்த டிச. 7-ம் தேதி சென்னைக்கு வருகை தந்து, ‘மிக்ஜாம்’ புயல் பெருமழையால் ஏற்பட்ட பாதிப்புகளை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தது குறித்தும், மத்திய அரசின் பல்துறை ஆய்வுக் குழு, டிச. 12 மற்றும் 13 ஆகிய நாட்களில் மழை வெள்ள பாதிப்புகளை ஆய்வு செய்து, அக்குழு தன்னுடன் ஆலோசனை மேற்கொண்டது குறித்தும் எடுத்துரைத்ததுடன், தமிழக அரசு மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளை விரைந்து மேற்கொண்டதற்கு அக்குழு பாராட்டு தெரிவித்ததையும் குறிப்பிட்டு, சீரமைப்பு மற்றும் நிவாரணப் பணிகளை மேற்கொள்வதற்காக தற்காலிக நிவாரணத் தொகையாக 7033 கோடி ரூபாயும், நிரந்தர நிவாரணத் தொகையாக 12,659 கோடி ரூபாயும் கோரப்பட்டதை தெரிவித்து, அந்நிதியினை விரைந்து ஒதுக்கீடு செய்யுமாறு பிரதமரிடம் முதல்வர் ஸ்டாலின் கேட்டுக் கொண்டார்.
மேலும், திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, தென்காசி மாவட்டங்களில் டிச. 17 மற்றும் 18 ஆகிய இரண்டு நாட்களில் பெய்த கனமழை முதல் அதி கனமழையால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து விளக்கி, அம்மாவட்டங்களில் மேற்கொள்ளப்பட்டு வரும் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகள் குறித்தும் எடுத்துரைத்தார்.
மிக்ஜாம் புயல் கனமழையால் சென்னை மற்றும் சுற்றுப்புற மாவட்டங்களில் கடந்த 47 ஆண்டுகளாக இல்லாத கனமழையால் ஏற்பட்ட வெள்ளப் பாதிப்பையும், தென் மாவட்டங்களில் தற்போது வரலாறு காணாத வகையில் 100 ஆண்டுகள் இல்லாத கனமழை பெய்ததால் ஏற்பட்ட பாதிப்புகளையும் கருத்தில் கொண்டு, தேசிய பேரிடராக அறிவிக்க வேண்டும் என்று பிரதமரிடம் முதல்வர் ஸ்டாலின் கேட்டுக் கொண்டார்.
எனவே, பேரிடர் நிவாரண நிதியிலிருந்து 2000 கோடி ரூபாயை அவசர நிவாரண நிதியாக வாழ்வாதார உதவிக்காகவும், திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி மற்றும் தென்காசி மாவட்டங்களின் தற்காலிக சீரமைப்புப் பணிகளுக்காகவும் வழங்கிட வேண்டும் என்றும் பிரதமரிடம் கோரிக்கை விடுத்தார். இச்சந்திப்பின்போது, நாடாளுமன்ற உறுப்பினர் டி.ஆர். பாலு உடனிருந்தார்.
முதல்வர் ஸ்டாலின் ட்வீட்: “பிரதமர் நரேந்திர மோடி அவர்களைச் சந்தித்து, தமிழ்நாட்டில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளின் நிலையைப் பற்றி எடுத்துரைத்தேன்.
நடைபெற்று வரும் மீட்புப் பணிகளைத் தொய்வின்றி மேற்கொள்ளவும், முக்கிய உட்கட்டமைப்பு வசதிகளைச் சீரமைக்கவும் தேசிய பேரிடர் நிவாரண நிதியில் இருந்து நிதி வேண்டி கோரிக்கை மனுவை அளித்தேன்.
இத்தகைய கடினமான காலத்தில் தமிழ்நாட்டின் தேவைகளைக் கவனத்துடன் கேட்டறிந்தமைக்குப் பிரதமர் அவர்களுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்” என இந்த சந்திப்பு குறித்து முதல்வர் ஸ்டாலின் எக்ஸ் தளத்தில் ட்வீட் செய்துள்ளார்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
14 mins ago
தமிழகம்
38 mins ago
தமிழகம்
24 mins ago
தமிழகம்
26 mins ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
13 hours ago
தமிழகம்
14 hours ago
தமிழகம்
15 hours ago
தமிழகம்
15 hours ago