தென்மாவட்டங்களில் கனமழை | தூத்துக்குடியில் முதல்வர் ஸ்டாலின் வியாழக்கிழமை ஆய்வு

By செய்திப்பிரிவு

சென்னை: தென்மாவட்டங்களில் கனமழை பதிவான நிலையில் தூத்துக்குடியில் வியாழக்கிழமை அன்று முதல்வர் ஸ்டாலின் ஆய்வு மேற்கொள்ள உள்ளார். இது குறித்து வெளியாகி உள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது.

தூத்துக்குடி, திருநெல்வேலி, தென்காசி மற்றும் கன்னியாகுமரி ஆகிய 4 மாவட்டங்களில் டிசம்பர் 17 மற்றும் 18 ஆகிய தேதிகளில் பெய்த கனமழையின் காரணமாக கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. இதனை எதிர்கொள்ளவும் மக்களுக்குத் தேவையான மீட்பு மற்றும் நிவாரண நடவடிக்கைகளையும் மேற்கொள்ள அமைச்சர்கள் மற்றும் ஆட்சிப்பணி அலுவலர்களும் உடனடியாக பாதிக்கப்பட்ட மாவட்டங்களுக்கு அனுப்பிவைக்க முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டிருந்தார்.

மேலும், அப்பகுதிகளில் மாநில பேரிடர் மீட்புக் குழு தேசிய பேரிடர் மீட்புக் குழு, தீயணைப்புத்துறை, காவல் துறையினர் மற்றும் அனைத்து அரசுத் துறைகளுடன் இணைந்து ஒருங்கிணைந்த முறையில் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு பாதிக்கப்பட்ட மக்கள் மீட்கப்பட்டு பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டு வருகிறார்கள். தூத்துக்குடி மாவட்டத்தில் மீட்புப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.

இந்தச் சூழ்நிலையில் முன்னதாக புதன்கிழமை (நாளை) தூத்துக்குடிக்குச் செல்வதாக தலைநகர் டெல்லியில் அறிவித்திருந்த முதல்வர் ஸ்டாலின், மத்தியக் குழு தூத்துக்குடி மாவட்டத்தில் நாளை ஆய்வு மேற்கொள்ள உள்ளதால் மாவட்ட நிர்வாகம் அவர்களுக்கு உடனிருக்க வேண்டிய நிலையைக் கருத்தில்கொண்டு, நாளை இரவு மதுரை சென்று வியாழக்கிழமை (டிச. 21) தூத்துக்குடியில் ஆய்வு மேற்கொள்கிறார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE