வைகை ஆற்றில் வெள்ளப்பெருக்கு - வேடிக்கைப் பார்க்க, செல்ஃபி எடுக்க கூடாதென மதுரை போலீஸ் எச்சரிக்கை

By ஒய். ஆண்டனி செல்வராஜ்

மதுரை: மதுரை வைகை ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுவதால், பொதுமக்கள் வேடிக்கை பார்க்கவோ, செஃல்பி எடுக்கவோ வேண்டாம் என காவல் துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

வைகை அணைக்கு கடந்த 17-ம் தேதி வெறும் 1,811 கன அடி தண்ணீர் மட்டுமே வந்து கொண்டிருந்தது. மேற்கு தொடர்ச்சி மலையில் உள்ள வைகை ஆறு, பெரியாறு நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்த கனமழையால் பெரியாறு அணைக்கும், வைகை அணைக்கும் நீர் வரத்து அதிகரித்தது. நேற்று முன்தினம் காலை 17,197 கன அடியாக பல மடங்கு நீர் வரத்து அதிகரித்தது. மதியம் 12 மணிக்கு உச்சப்பட்டமாக 24,558 கன அடி தண்ணீர் அணைக்கு வந்தது. உடனடியாக வைகை அணையில் இருந்து உபரி நீர் ஆற்றில் திறந்துவிடப்பட்டது. வெள்ள அபாய எச்சரிக்கையும் இரண்டு முறைவிடப்பட்டது.

இந்நிலையில், மேற்கு தொடர்ச்சி மலையில் மழை குறையவே அணைக்கு நீர் வரத்து குறையத் தொடங்கியது. தற்போது அணைக்கு 5,391 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணை நீர் மட்டம் 69.49 அடியை எட்டியது. அணை நிரம்பியதால் மூன்றாவது முறையாக வைகை ஆற்று கரைகளில் தாழ்வானப்பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தற்போது அணையில் இருந்து ஆற்றில் 3,169 கன அடி தண்ணீர் திறந்துவிடப்பட்டது.

கடந்த காலத்தில் வைகை அணையில் தண்ணீர் திறந்துவிட்டதால் அந்த தண்ணீர் உருண்டோடி, நிலத்தடி மண் உறிஞ்சி மதுரை வருவதற்கு தாமதமாகும். ஆனால், ஆற்று வழித்தடங்களில் மணல் கொள்ளை நடந்தப்பிறகு மணல் முற்றிலும் அள்ளப்பட்டு தண்ணீர் வேகமாக உருண்டோடி வந்துவிடுகிறது. அதனால், வைகை அணையில் மூன்றாவது முறையாக தேனி, மதுரை, சிவகங்கை, திண்டுக்கல், ராமநாதபுரம் மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

ஆற்றங்கரைகளில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்வதற்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. அணையில் இருந்து கூடுதல் தண்ணீர் எந்தநேரமும் திறந்துவிடுவதற்கு வாய்ப்புள்ளதால் பொதுக்கள் வேடிக்கை பார்க்கவும், செல்ஃபி எடுக்கவும் வேண்டாம் என காவல் துறையினர் கேட்டுக் கொண்டனர். வைகை அணையில் இருந்து கூடுதல் தண்ணீர் திறப்பால் மதுரை வைகை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. நீண்ட காலத்திற்கு பிறகு மதுரை வைகை ஆற்றில் இரு கரைகளையும் தொட்டப்படி தண்ணீர் கரைபுரண்டு ஓடுவது பார்க்க அழகாகவும், ரம்மியமாகவும் உள்ளது.

அதனால், வைகை ஆற்றில் பெருக்கெடுத்து ஓடும் தண்ணீரை பார்க்க, மதுரை மாநகர் பகுதியில் மக்கள் கரையோரங்களில் கூட்டம், கூட்டமாக நின்று வேடிக்கைப் பார்கின்றனர். ஏவி மேம்பாலம், யானைக்கல் மேம்பாலம், மாநகராட்சி உயர்மட்ட மேம்பாலங்கள், ஸ்மார்ட் சிட்டி சாலையில் வாகனங்களை நிறுத்தி வேடிக்கைப்பார்க்கிறார்கள். கரையோரங்களில் வசிக்கும் மக்கள், துணிகளை துவைப்பது, குளிப்பது, வாகனங்களை கழுவதுபோன்ற செயல்களில் ஈடுபட்டுள்ளனர். அவர்களை கண்காணித்து எச்சரித்து போலீஸார் அனுப்பி வருகின்றனர்.

கிராம நிர்வாக அலுவலர்கள், போலீஸார், நகர்பகுதியில் ஆற்றின் கரையோரப்பகுதிகளில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். வைகை ஆறு ஸ்மார்ட் சிட்டி சாலைகளில் தற்காலிகமாக போக்குவரத்து மாற்றிவிடப்பட்டுள்ளதால் நகர்பகுதியில் போக்குரவத்து நெரிசல் அதிகரித்துள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE