திருநள்ளாறு சனிப்பெயர்ச்சி விழா - 24 மணி நேரமும் சிசிடிவி செயல்படுவதை உறுதி செய்ய டிஜிபி உத்தரவு

By  என்.சி.ஞானப்பிரகாசம்

புதுச்சேரி: காரைக்கால் திருநள்ளாறில் நாளை (டிச.20) சனிப்பெயர்ச்சி விழா நடைபெற உள்ளது. இந்த விழாவை முன்னிட்டு காவல் துறை தீவிர முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. தண்ணீர் தேங்காமல் இருக்கவும், 24 மணி நேரம் சிசிடிவி கேமரா இயங்கவும், அனைத்து வயர்லெஸ் செட் மற்றும் தகவல் தொடர்பு சாதனங்கள் கட்டுப்பாட்டு அறையில் வேலை செய்வதை உறுதி செய்ய போலீஸ் அதிகாரிகளுக்கு புதுச்சேரி டிஜிபி சீனிவாஸ் உத்தரவிட்டுள்ளார்.

காரைக்கால் திருநள்ளாறில் நாளை (டிச., 20) சனிப்பெயர்ச்சி விழா நடைபெற உள்ளது. இந்நிலையில், நாளை நடைபெறவுள்ள சனிப்பெயர்ச்சி விழாவையொட்டி காவல்துறை ஏற்பாடுகள் தொடர்பாக புதுச்சேரி காவல் துறை தலைமை இயக்குநர் சீனிவாஸ் தலைமையில் இன்று காவல்துறை உயர் அதிகாரிகளுடன் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. புதுச்சேரி டி.ஜி.பி.யால் வெளியிடப்பட்ட வழிகாட்டுதல்கள்:- ”சுப நேரத்தில் விஐபிகள் நடமாட்டத்தை ஒழுங்குபடுத்துவதில் முறையான கட்டுப்பாட்டை உறுதிசெய்து, சன்னிதியில் நெரிசல் ஏற்படாத வகையில் செயல்படவேண்டும். கூட்ட நெரிசல் மற்றும் பகுதிகளை கூடுதலாக கவனித்து செயலாற்றவேண்டும்.

காரைக்கால் பகுதியில் கடந்த ஒரு வாரமாக மழை பெய்து வருகிறது. எனவே, அனைத்து வாகன நிறுத்துமிடங்கள், போக்குவரத்து பகுதிகளில் கவனம் செலுத்தி, தண்ணீர் தேங்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும். அனைத்து வரிசைப்படுத்தல்களில் பணிபுரிவோர் கண்ணியமாக இருக்க வேண்டும். மேலும் கோவில், வாகன நிறுத்துமிடங்கள், பக்தர்கள் நடமாட்டம் உள்ள பகுதிகளுக்குள் போதிய பாதுகாப்பு மற்றும் தடுப்பு சோதனைகள் நடத்தப்பட வேண்டும். பாதுகாப்பு தொடர்பான அறிவிப்புகளை வெளியிட வேண்டும்.

கவனிக்கப்படாத பொருட்கள், பைகள் போன்றவற்றின் மீது விழிப்புடன் இருக்குமாறு அனைவருக்கும் அறிவுறுத்தப்பட்டு, உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும். அனைத்து வயர்லெஸ் செட் மற்றும் தகவல் தொடர்பு சாதனங்கள் கட்டுப்பாட்டு அறையில் வேலை நிலையில் இருப்பதை உறுதி செய்ய வேண்டும். அனைத்து சிசிடிவி கேமராக்களும் 24 மணி நேரமும் செயல்படுவதை உறுதி செய்ய வேண்டும். பக்தர்கள் வரும் பாதைகளில் இடையூறு விளைவிக்கும் சூழ்நிலை அல்லது கனமழை போன்றவற்றால் நெரிசல் ஏற்பட்டால், தற்செயல் திட்டத்தை எஸ்பி (காரைக்கால்) தயாரிக்க வேண்டும். இரவுகளில் பக்தர்கள் வரக்கூடும் என்பதால், அனைத்து வாகன நிறுத்துமிடங்களிலும் வழித்தடங்களில் பாதுகாப்புக்கால போதுமான விளக்குகள் ஏற்பாடு செய்யப்பட வேண்டும்” என்று உத்தரவிட்டுள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE