தென்மாவட்ட மழை பாதிப்பு: மத்திய அரசு அதிகாரிகளுடன் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி ஆலோசனை

By செய்திப்பிரிவு

சென்னை: தென்மாவட்ட கனமழை பாதிப்பு மற்றும் அங்கு நடந்து வரும் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகள் குறித்து மத்திய அரசின் பல்வேறு துறையின் உயர் அதிகாரிகள் உடன் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி ஆலோசனை மேற்கொண்டார்.

சென்னையில் உள்ள ஆளுநர் மாளிகையில், ஆளுநர் ஆர்.என்.ரவி தலைமையில் செவ்வாய்க்கிழமை ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில், இந்திய ராணுவம், விமானப் படை, கப்பல்படை, தேசிய பேரிடர் மீடப்புப் படை, இந்திய வானிலை மையம், தொலைத் தொடர்பு நிறுவனங்கள், ரயில்வே உள்ளிட்ட மத்திய அரசின் உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டார். இக்கூட்டத்தில், வெள்ளம் பாதித்த தென்மாவட்டங்களில் தற்போதைய நிலவரம் குறித்தும், மீட்பு மற்றும் நிவாரணப் பணிகள் குறித்தும் விவாதிக்கப்பட்டது.

முன்னதாக, விடிய விடிய கொட்டித் தீர்த்த அதிகனமழையால் திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, தென்காசி மாவட்டங்கள் வெள்ளத்தில் மிதக்கின்றன. பல பகுதிகளை வெள்ளம் சூழ்ந்துள்ளதால் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். பல இடங்களில் குடியிருப்புகளில் இருந்து வெளியே வரமுடியாமல் தவித்த மக்களை தீயணைப்புத் துறையினர், கமாண்டோ வீரர்கள் ரப்பர் படகில் மீட்டு கரை சேர்த்தனர். ராணுவத்தினரும் மீட்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, தென்காசி மாவட்டங்களில் பெய்த கனமழை முதல் அதிகனமழையால் ஏற்பட்டுள்ள பாதிப்புகளை சீர் செய்திடவும், மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளை போர்க்கால அடிப்படையில் மேற்கொள்ளவும், அமைச்சர்கள் நியமிக்கப்பட்டு, அவர்களுடன் இணைந்து நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், கண்காணிப்பு அலுவலர்கள் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் பணி மேற்கொண்டு வருகின்றனர்.

வெள்ளத்தில் சிக்கியவர்களை மீட்பதற்கும், உணவுப் பொருட்களை விநியோகிக்கவும் விமானப்படையின் 4 ஹெலிகாப்டர்கள், கடற்படையின் 2 ஹெலிகாப்டர்கள் மற்றம் கடலோரக் காவல் படையின் 2 ஹெலிகாப்டர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. மீட்பு மற்றும் நிவாரண நடவடிக்கைகளை மேற்கொள்ள தமிழக அரசு அலுவலர்கள், மாநில பேரிடர் மீட்புக் குழு மற்றும் தேசிய பேரிடர் மீட்புப் படையினர் ஈடுபட்டுள்ளனர். மேலும், தூத்துக்குடி மற்றும் திருநெல்வேலி மாவட்டங்களில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மீட்பு மற்றும் நிவாரண நடவடிக்கைகள் மேற்கொள்ள கூடுதல் ஹெலிகாப்டர்கள் அனுப்பக் கோரி பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்குக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். தமிழக வெள்ள பாதிப்பு தொடர்பாக பிரதமர் மோடியை முதல்வர் ஸ்டாலின் இன்று இரவு சந்திக்க உள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில்தான் ராணுவம், கடலோரக் காவல் படை, அஞ்சல், பிஎஸ்என்எல் உள்ளிட்ட அதிகாரிகளுடன் ஆளுநர் ஆர்.என்.ரவி இன்று ஆலோசனை நடத்தினார். இதனிடையே, தூத்துக்குடி மற்றும் திருநெல்வேலி மாவட்டங்களில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மீட்பு மற்றும் நிவாரண நடவடிக்கைகள் மேற்கொள்ள கூடுதல் ஹெலிகாப்டர்கள் அனுப்பக் கோரி பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்குக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE