தூத்துக்குடி காயல்பட்டினத்தில் 95 செ.மீ. பதிவு: தென் மாவட்டங்களில் 39 இடத்தில் அதி கனமழை

By செய்திப்பிரிவு

சென்னை: தென் மாவட்டங்களில் 39 இடங்களில் அதி கனமழை பெய்துள்ளது. அதிகபட்சமாக காயல்பட்டினத்தில் 95 செ.மீ. மழை பதிவாகியுள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

திருநெல்வேலி, தூத்துக்குடி உள்ளிட்ட தென் மாவட்டங்களில் வரலாறு காணாத மழை பெய்து வருகிறது. இது தொடர்பாக இந்திய வானிலை ஆய்வு மைய தென் மண்டலத் தலைவர் எஸ்.பாலச்சந்திரன் செய்தியாளர்களிடம் நேற்று கூறியதாவது:

குமரிக்கடல் மற்றும் அதையொட்டிய பகுதிகளில் நிலவும் வளி மண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக டிச. 18-ம் தேதி (நேற்று) காலை 8.30 மணியுடன் நிறைவடைந்த 24 மணி நேரத்தில் பதிவான மழை அளவுகளின்படி, 39 இடங்களில் அதி கனமழையும், 33 இடங்களில் மிக கனமழையும், 12 இடங்களில் கனமழையும் பதிவாகியுள்ளது.

அதிகபட்சமாக தூத்துக்குடி மாவட்டம் காயல்பட்டினத்தில் 95 செ.மீ., திருச்செந்தூரில் 69 செ.மீ., வைகுண்டத்தில் 62 செ.மீ., திருநெல்வேலி மாவட்டம் மூலைக்கரைப்பட்டியில் 61 செ.மீ., மாஞ்சோலையில் 55 செ.மீ., தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் 53 செ.மீ., தென்காசி மாவட்டம் குண்டாறு அணையில் 51 செ.மீ., திருநெல்வேலி மாவட்டம் ஊத்து பகுதியில் 50 செ.மீ., நாலுமுக்கு பகுதியில் 47 செ.மீ., பாளையங்கோட்டையில் 44 செ.மீ., அம்பாசமுத்திரத்தில் 43 செ.மீ., மணியாச்சியில் 42 செ.மீ., சேரன்மகாதேவி, கன்னடயன் அணைக்கட்டில் 41 செ.மீ. மழை பதிவாகியுள்ளது.

தமிழகத்தில் அக்.1 முதல் டிச.18-ம் தேதி வரையிலான வடகிழக்குப் பருவமழைக் காலத்தில் வழக்கமாக 42 செ.மீ.மழை பெய்யும். இந்த ஆண்டு இதுவரை 44 செ.மீ. மழை பதிவாகியுள்ளது. இது வழக்கத்தைவிட 5 சதவீதம் அதிகமாகும்.

கன்னியாகுமரி மாவட்டத்தில் 105 செ.மீ. மழை பெய்துள்ளது. இது வழக்கத்தைவிட 103 சதவீதம் அதிகம். திருநெல்வேலியில் 135 சதவீதம், தூத்துக்குடியில் 68 சதவீதம், தென்காசியில் 80 சதவீதம் அதிக மழை கிடைத்துள்ளது. பாளையங்கோட்டையில் தற்போது 44 செ.மீ. பதிவாகியுள்ளது. இதற்கு முன்பு அங்கு 1931-ல் 20 செ.மீ., 1963-ல் 29 செ.மீ. மழை பதிவாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

வழக்கமாக வளிமண்டல கீழடுக்கு சுழற்சியால் கனமழை பெய்ததில்லை. ஆனால் தற்போது பரவலாக அதி கனமழை பெய்துள்ளது. இவ்வளவு மழை இதுவரை பதிவானதில்லை. தற்போதுள்ள அறிவியல் முன்னேற்றத்துக்கு ஏற்ப, கிடைக்கும் தரவுகள் அடிப்படையில் எவ்வளவு முடியுமோ அவ்வளவு துல்லியமாக வானிலையைக் கணித்து வருகிறோம்.

இன்று தென் தமிழகத்தில் சில இடங்களிலும், வட தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

4 மாவட்டத்தில் கனமழை வாய்ப்பு: கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி மற்றும் தென்காசி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. வரும் 20 முதல் 24-ம் தேதி வரை தமிழகத்தில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். இவ்வாறு அவர் கூறினார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE