ஒரே குடும்பமாக வீறுநடை போடும் இந்தியா: திருச்செங்கோட்டில் ஆளுநர் ஆர்.என்.ரவி பெருமிதம்

By செய்திப்பிரிவு

நாமக்கல்: ஒரே குடும்பமாக இந்தியா வீறுநடை போட்டு வருவதாக ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்தார். திருச்செங்கோடு கேஎஸ்ஆர் கல்வி நிறுவன வளாகத்தில் திருவள்ளுவர் சிலை திறப்பு விழா மற்றும் பட்டமளிப்பு நடைபெற்றது. இதில் ஆளுநர் ஆர்.என்.ரவி பங்கேற்றுப் பேசியதாவது:

2047-ம் ஆண்டில் 100-வது சுதந்திர தின விழாவை நாம் எதிர்பார்த்து உள்ள வேளையில், முழுமையாக வளர்ச்சி அடைந்த நாடு என்பதை நோக்கி இந்தியா செல்கிறது என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு உலக அளவில் பொருளாதார வளர்ச்சியில் முன்னேற்றமடைந்த நாடுகளில் 10-வது இடத்தில் இந்தியா இருந்தது. இப்போது 5-வது இடத்தில் உள்ளது. விரைவில் 3-வது இடத்தை அடையும்.

உலக அளவில் டிஜிட்டல் பயன்பாட்டில் இந்தியா முக்கிய இடம் வகிக்கிறது. நாள்தோறும் 45 சதவீத டிஜிட்டல் பரிமாற்றங்கள் நமது நாட்டில் நடைபெறுகின்றன. புதுத்தொழில் தொடங்கும் நிறுவனங்களில் உலகில் வளர்ந்த 3 நாடுகளில் இந்தியாவும் ஒன்றாகும். இன்றைய இளைஞர்கள், தோல்வி என்பதை பாடமாக எடுத்துக்கொண்டு அதிலிருந்து கற்று வெற்றி பெற வேண்டும். இன்றைய இளைஞர்கள் மின்னணு சாதனங்களுக்கு அடிமையாகாமல் தங்கள் இலக்குகளை பெரிதாக நிர்ணயித்துக் கொண்டு சுவாமி விவேகானந்தர் சொன்னதைப்போல விழிப்புடன் இருக்க வேண்டும்.

நமது நாடு, ஒரே குடும்பமாக வீறுநடை போட்டு வருகிறது. ஜி 20 மாநாட்டிலும் இதைத்தான் பிரதமர் நரேந்திர மோடி உலகுக்கு அறிவித்து செயல்படுத்தி காட்டினார். வேற்றுமையில் ஒற்றுமை என்பதே நமது பாதையாகும். காசி தமிழ் சங்கமம்-2 நிகழ்ச்சி, சங்க காலத்துடன் காசியும் தமிழகமும் இணைந்திருந்த பெருமையை இன்று அனைவருக்கும் எடுத்துக் கூறுகிறது.

அரசியலுக்கு அப்பாற்பட்டு நாம் ஒற்றுமையாக உள்ளோம் என்பதை காட்டுகிறது. புனித மண்ணான காசிக்கு தமிழகத்தில் இருந்து நிறைய ஆன்மிக பணிகள் கிடைத்துள்ளன. பல்லாயிரக்கணக்கான தமிழ்நாட்டு மக்கள் அங்கு வசிக்கின்றனர். நமது நாட்டின் ரிஷியாக திருவள்ளுவர் அறியப்படுகிறார். அவரது கருத்து கள் அனைவருக்கும் பொருந்தும் வகையில் அமைந்துள்ளன.

உலக அறிவுசார் சொத்துரிமை அமைப்பு கூறியுள்ள தகவலின்படி, நமது இந்தியா ஒரே ஆண்டில் 31 சதவீதம் காப்புரிமையை பல்வேறு பொருட்களுக்கு பெற்றுள்ளது. இது உலக அளவில் வேறு எந்த நாட்டிலும் இல்லாத வளர்ச்சியாகும். மத்திய அரசு சுகாதாரம், கட்டமைப்பு, பெண்களுக்கு எரிவாயு இணைப்பு, வீடு இல்லாதவர்களுக்கு வீடுகள் வழங்கியது, அனைவருக்கும் குடிநீர் இணைப்பு போன்ற திட்டங்கள் அனைவருக்கும் கிடைத்துள்ளதை உறுதி செய்துள்ளது.

இன்று ஏழ்மை, சுகாதாரமின்மை, காலநிலை மாற்றம் போன்ற பல பிரச்சினைகளுக்கு நாம் தீர்வு கண்டுள்ளோம். பசுமை சக்திக்கு முக்கியத்துவம் அளித்து வருகிறோம். ஜி 20 மாநாடு இதைத்தான் தெளிவுபடுத்தி உள்ளது. கரோனா தொற்றால் உலகம் பாதிக்கப்பட்ட நிலையில் நமது நாட்டு விஞ்ஞானிகளும் தொழில்நுட்ப அறிஞர்களும் தடுப்பூசிகளை கண்டறிந்ததோடு மட்டுமல்லாமல் வெளிநாடுகளுக்கும் அவற்றை வழங்கிய பெருமை நமக்கு உள்ளது என்றார்.

நிகழ்ச்சியில், கேஎஸ்ஆர் கல்வி நிறுவனங்களின் தலைவர் சீனிவாசன் ரங்கசாமி, முதன்மை செயல் அலுவலர் அகிலா முத்துராமலிங்கம், இயக்குநர்கள், முதல்வர்கள், பேராசிரியர்கள், மாணவ, மாணவியர் கலந்து கொண்டனர். முன்னதாக ஆளுநரை நாமக்கல் ஆட்சியர் ச.உமா, எஸ்.பி. ராஜேஷ்கண்ணன் வரவேற்றனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE