தென் மாவட்டங்களில் வெள்ளம்: பாதுகாப்பு நடவடிக்கைகளை துரிதப்படுத்த தமிழக அரசுக்கு தலைவர்கள் வலியுறுத்தல்

By செய்திப்பிரிவு

சென்னை: தென்மாவட்டங்களில் கனமழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில், பாதுகாப்பு நடவடிக்கைகளை துரிதப்படுத்த வேண்டும் என தமிழக அரசை அரசியல் கட்சி தலைவர்கள் வலியுறுத்தியுள்ளனர். இதுதொடர்பாக அவர்கள் வெளியிட்ட செய்திக்குறிப்பு:

மத்திய இணை அமைச்சர் எல்.முருகன்: தென் மாவட்டங்களில் பல பகுதிகள் மழை வெள்ளத்தால் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன. வெள்ளத்தில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் பேரிடர் மீட்புக் குழுவினர் ஈடுபட்டுள்ளனர். மக்களை மீட்பதுதான் நமது முதல் பணி. இதற்காக அரசு நிர்வாகத்துடன் பாஜக தொண்டர்களும், நிர்வாகிகளும் இணைந்து களப்பணியாற்றி, மக்களை மீட்டு தேவையான உதவிகளை வழங்க வேண்டும்.

அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி: திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி, கன்னியாகுமரி ஆகிய 4 மாவட்டங்களில் 2 நாட்களாக பெய்து வரும் கனமழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. வீடுகளை வெள்ளம் சூழ்ந்துள்ளதால் மக்கள் வெளியே வரமுடியாமல் அவதிப்படுகின்றனர். கனமழையால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு தேவையான நிவாரண உதவிகளை போர்க்கால அடிப்படையில் அரசு வழங்க வேண்டும்.

அரசின் உதவிகள், நிவாரணம் வரும்வரை காத்திருக்காமல் ஆங்காங்கே உள்ள அதிமுக நிர்வாகிகள், கனமழையால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு உணவு, உடை, போர்வை, பால், ரொட்டி, குடிநீர் போன்ற நிவாரண உதவிகளை வழங்க வேண்டும்.

பாஜக மாநில தலைவர் அண்ணாமலை: தென்மாவட்டங்களில் கடுமையான மழை பெய்துவரும் நிலையில், மேலும் 2 நாட்களுக்கு கனமழை தொடரும் என வானிலை மையம் அறிவித்துள்ளது. தென்மாவட்டங்களில் உடனடியாக போர்க்கால நடவடிக்கைகளை தமிழக அரசு தொடங்க வேண்டும். மழை நின்றபிறகு பொதுமக்களுக்கு தேவையான நிவாரண உதவிகளை தென்மாவட்ட பாஜக நிர்வாகிகள் இயன்றவரை செய்து கொடுக்க வேண்டும்.

பாமக தலைவர் அன்புமணி: தென் மாவட்டங்களில் வரலாறு காணாத மழை பெய்து வருகிறது. பல கிராமங்கள் துண்டிக்கப்பட்டு தனித்தனி தீவாக மாறியுள்ளன. மழை நீடிக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளில் மக்களுக்கு தேவையான உணவுப் பொருட்களை வழங்குதல், நிவாரண முகாம்களை அமைத்தல் உள்ளிட்டவற்றை அரசு விரைந்து மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு தெரிவித்துள்ளனர்.

தமாகா தலைவர் ஜி.கே.வாசன், தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா, அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் இரா.முத்தரசன், மதிமுக முதன்மை செயலாளர் துரை வைகோ, ஐஜேகே தலைவர் ரவி பச்சமுத்து, நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், பெருந்தலைவர் மக்கள் கட்சி தலைவர் என்.ஆர்.தனபாலன் உள்ளிட்டோரும் பாதுகாப்பு பணிகளை துரிதப்படுத்த வலியுறுத்தியுள்ளனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE