பிரதமர் மோடியுடன் முதல்வர் இன்று சந்திப்பு: புயல், மழை, வெள்ள பாதிப்புகள் குறித்து ஆலோசனை

By செய்திப்பிரிவு

சென்னை: இண்டியா கூட்டணி கூட்டத்தில் பங்கேற்பதற்காக டெல்லி சென்றுள்ள முதல்வர் மு.க.ஸ்டாலின், தமிழக கனமழை பாதிப்பு, நிவாரண பணிகள் குறித்து பிரதமரை இன்று சந்தித்து ஆலோசனை நடத்த உள்ளார்.

வங்கக்கடலில் உருவான மிக்ஜாம் புயல் கடந்த 3, 4-ம் தேதிகளில் வட தமிழக கடலோர பகுதியை நெருங்கி வந்தது. இதனால் ஏற்பட்ட காற்று, அதிகனமழை காரணமாக சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்டங்கள் பெரிதும் பாதிக்கப்பட்டன. இதையடுத்து, வெள்ள பாதிப்புகள் குறித்து மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் பார்வையிட்டு சென்றார். அப்போது, இடைக்கால நிவாரணமாக ரூ.5,060 கோடி வேண்டும் என்று பிரதமருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம் எழுதினார்.

இதன்பிறகு, மத்திய குழுவினர் வந்து மழை பாதிப்புகளை பார்வையிட்டு சென்றனர். அப்போது, தற்காலிக சீரமைப்புக்கான நிவாரணமாக ரூ.7,033 கோடியும், நிரந்தர சீரமைப்புக்கு ரூ.12,659 கோடியும் வழங்குமாறு மத்திய அரசுக்கு முதல்வர் ஸ்டாலின் கோரிக்கை விடுத்தார்.

இதற்கிடையே, மழை, வெள்ளத்தால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ரூ.6,000 நிவாரணம் வழங்கும் பணியை முதல்வர் கடந்த 17-ம் தேதி தொடங்கி வைத்தார். அதைத் தொடர்ந்து, நியாய விலை கடைகளில், பாதிக்கப்பட்ட மக்களுக்கு ரொக்கமாக ரூ.6,000 வழங்கப்பட்டு வருகிறது. பாதிக்கப்பட்டும் நிவாரணம் கிடைக்காதவர்கள், அரசு அறிவுறுத்தியபடி விண்ணப்பித்து வருகின்றனர்.

வட மாவட்டங்களில் வெள்ளத்தின் பாதிப்பு சற்று தணிந்து வரும் நிலையில், திருநெல்வேலி, கன்னியாகுமரி, தூத்துக்குடி, தென்காசி ஆகிய 4 தென் மாவட்டங்களிலும் நேற்று முன்தினம் தொடங்கி அதீத கனமழை பெய்து வருகிறது. இதனால், அங்கு இயல்பு வாழ்க்கை முற்றிலும் ஸ்தம்பித்துள்ளது. மீட்பு பணிகள் தீவிரமாக நடந்து வருகின்றன. மழை தொடரும் என்று வானிலை மையம் எச்சரித்துள்ளதால், மாவட்ட நிர்வாகங்கள் நிவாரண பணிகளை முடுக்கிவிட்டுள்ளன.

இத்தகைய சூழலில், பாஜகவுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து உருவாக்கியுள்ள இண்டியா கூட்டணியின் கூட்டம் டெல்லியில் இன்று நடக்கிறது. இதில் பங்கேற்பதற்காக முதல்வர் ஸ்டாலின் நேற்று மாலை 3.15 மணிக்கு கோவையில் இருந்து டெல்லி புறப்பட்டு சென்றார்.

இதனிடையே சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்டங்களில் மிக்ஜாம் புயல், கனமழையால் ஏற்பட்ட பாதிப்புகளுக்கு விரைந்து நிதி ஒதுக்க கோருவதற்கும், தற்போது தென் மாவட்டங்களில் பெய்துவரும் அதிகனமழையால் ஏற்பட்ட பாதிப்புகள், மீட்பு, நிவாரண பணிகள் குறித்து எடுத்துக் கூறி ஆலோசிப்பதற்கும், டிச.19-ம் தேதி (இன்று) டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடியை சந்திக்க நேரம் ஒதுக்க கோரி முதல்வர் ஸ்டாலின் கடிதம் எழுதியிருந்தார்.

இந்நிலையில் இந்த கோரிக்கையை ஏற்று முதல்வர் ஸ்டாலினை சந்திக்க பிரதமர் நரேந்திர மோடி இன்று நேரம் ஒதுக்கியுள்ளார். இதன்படி டெல்லியில் பிரதமரை முதல்வர் இன்று சந்தித்து பேசுகிறார். அப்போது தமிழகத்தில் ஏற்பட்ட மிக்ஜாம் புயல் பாதிப்பு மற்றும் தென் மாவட்டத்தில் கனமழையால் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் குறித்தும் மீட்பு, நிவாரணம் குறித்தும் இருவரும் முக்கிய ஆலோசனை நடத்தவுள்ளதாக அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

19 mins ago

தமிழகம்

33 mins ago

தமிழகம்

37 mins ago

தமிழகம்

47 mins ago

தமிழகம்

55 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

16 hours ago

தமிழகம்

17 hours ago

தமிழகம்

17 hours ago

தமிழகம்

17 hours ago

தமிழகம்

18 hours ago

தமிழகம்

18 hours ago

மேலும்