திருப்பாச்சேத்தியில் வீடுகளுக்குள் புகுந்த தண்ணீர் - நான்குவழிச் சாலையில் கிராம மக்கள் மறியல்

By செய்திப்பிரிவு

திருப்புவனம்: திருப்பாச்சேத்தியில் வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்ததால், கிராம மக்கள் நான்குவழிச் சாலையில் மறியலில் ஈடுபட்டனர்.

சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகே திருப்பாச்சேத்தி கண்மாய் சமீபத்தில் வைகை ஆற்று நீர் மூலம் நிரப்பப்பட்டது. கண்மாயிலிருந்து வெளியேறிய உபரிநீரால் அருகேயுள்ள நாச்சியார் ஊருணி நிரம்பியது. அங்கிருந்து உபரிநீர் வெளியேறி வருகிறது. இந்த தண்ணீர் மாரியம்மன் கோயில் ஊருணி சென்று, அங்கிருந்து ரீச் கால்வாய் மூலம் வெளியேற வேண்டும்.

ஆனால், மதுரை - ராமேசுவரம் நான்குவழிச் சாலை அமைத்த போது, மாரியம்மன் கோயில் ஊருணியில் இருந்து தண்ணீர் வெளியேறும் கால்வாய் மட்டம் உயர்ந்தது. இதனால் மாரியம்மன் கோயில் ஊருணியில் இருந்து தண்ணீர் வெளியேறாமல் தேங்கியது. அதேநேரம், நாச்சியார் ஊருணியிலிருந்து தொடர்ந்து நீர்வரத்து இருந்ததால், வெளியேற வழியின்றி ஆதிதிராவிடர் குடியிருப்புக்குள் தண்ணீர் புகுந்தது.

அங்கு, 100-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வரும் நிலையில், 30-க்கும் மேற்பட்ட வீடுகளை தண்ணீர் சூழ்ந்தது. மேலும், சில வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்தது. இதனால், அதிருப்திஅடைந்த அப்பகுதி மக்கள் நான்கு வழிச் சாலையில் மறியலில் ஈடுபட்டனர்.

திருப்புவனம் வட்டாட்சியர் விஜயகுமார் மற்றும் போலீஸார் அவர்களை சமாதானப்படுத்தினர். இதைத் தொடர்ந்து, அதிகாரிகள் சாலையை இயந்திரம் மூலம் உடைத்து, குடியிருப்புக்குள் புகுந்த நீரை விளைநிலங்கள் வழியாக வெளியேற்றினர். மேலும், பாதிக்கப்பட்ட மக்களை அரசு மேல்நிலைப் பள்ளி யில் தங்க வைத்தனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE