“மழை வெள்ளத்தில் மக்களை கவனிக்காமல் கட்சி மாநாடு நடத்துவதா?” - திமுக மீது செல்லூர் ராஜூ குற்றச்சாட்டு

By ஒய்.ஆண்டனி செல்வராஜ்

மதுரை: “மழைக்காலத்தில் மக்களை கவனிக்காமல் யாராவது கட்சி மாநாட்டை நடத்துவார்களா?” என்று திமுக மீது அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் கே.ராஜூ குற்றம்சாட்டியுள்ளார்.

மதுரை மாநகர அதிமுக சார்பில் நெல்லையில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அரிசி, பருப்பு, சேலை, கைலி, நைட்டி, பெட் ஷீட், துண்டு, பாய், வாளி, கப், பிஸ்கட் பாக்கெட் உள்பட பல்வேறு நிவாரணப் பொருட்கள் 2 லாரிகளில் இன்று அனுப்பினர். இந்த நிகழ்ச்சிக்கு பின்னர் முன்னாள் அமைச்சரும், மாநகரச் செயலாளருமான செல்லூர் கே.ராஜூ கூறியது: "திருநெல்வேலி மாவட்டத்தில் வரலாறு காணாத மழையால் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு உதவும் வகையில் அதிமுக சார்பில் நிவாரணப்பொருட்கள் நெல்லைக்கு அனுப்பி வைக்கிறோம். மாநகர மாவட்டச் செயலாளரிடம் இந்தப் பொருட்களை ஒப்படைத்து, அவர்கள் மூலம் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்கப்பட உள்ளது.

வானிலை ஆராய்ச்சி மையம், மழைப்பொழிவு சம்பந்தமாக முன்னெச்சரிக்கை தகவல்களை வழங்கி கொண்டிருக்கிறது. ஆனால், தமிழக அரசு துரிதமாக செயல்படாமல் மீட்பு பணி தோல்விகளில் அதிகாரிகளை பலிகாடாக்கப்படுகின்றனர். சென்னையில் ஒரு சொட்டு தண்ணீர் தேங்காது என்றார்கள். ஆனால், சென்னையே வெள்ளத்தில் மூழ்கியது. அவர்கள் மேற்கொண்ட 4 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான பணிகள் மழையில் கரைந்துப்போனது. இதுவரை நடந்த ஆட்சிகளில் கார்கள் அடித்துச் செல்லப்படவில்லை. முதலைகள், பாம்புகள் வீடுகளுக்கு படையெடுக்கவில்லை. ஆனால், இவர்கள் ஆட்சியில் மட்டும் அனைத்தும் வினோதமாக நடக்கிறது.

தற்போது 4 தென் மாவட்டங்களில் ரெட் அலர்ட் கொடுக்கப்பட்டுள்ளது. அங்கு ஓர் அமைச்சர்தான் உள்ளார். அனைத்து அமைச்சர்களும் திமுக இளைஞர் அணி மாநாட்டு ஏற்பாடுகளில் மூழ்கி உள்ளனர். அப்போதுதான் முதல்வர், அவரது மகன் பாராட்டுகளை பெற முடியும் என்று அமைச்சர்கள் மக்களையும், அவர்கள் பணிகளையும் மறந்து மாநாட்டு பணிகளில் கவனம் செலுத்துகிறார்கள்.

விவரம் தெரிந்த எந்த அரசாவது, மழைக்காலத்தில் கட்சியின் மாநாடுகளை நடத்துவார்களா? அவர்கள் மாநாட்டு ஏற்பாடுகளில் ஈடுபட்டுள்ளதால், மழை நிவாரணிப் பணிகள், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எப்படி எடுப்பார்கள்? அப்படிதான், சென்னையை தொடர்ந்து தற்போது தென் மாவட்ட மக்களும் மழைக்கு உதவிகள் கிடைக்காமல் உடைமைகளையும், பொருட்களையும் இழந்து தவிக்கிறார்கள். ஒவ்வொரு காலக்கட்டத்திலும் சில காரணத்துக்காக ஆட்சி மாற்றம் நிகழும். திமுகவுக்கு மழை போன்ற இயற்கை சீற்றங்களை கையாளத் தெரியாத காரணத்தாலே ஆட்சியை இழக்கும்.

பாலத்துக்கும், சாலைக்கும் மேல் 5 அடி முதல் 10 அடிக்கு மேல் தண்ணீர் செல்கிறது. எத்தனை பேரை தண்ணீர் அடித்து சென்றது என்பது தெரியவில்லை. கண் கெட்ட பிறகு சூரிய நமஸ்காரம் போல் இந்த அரசின் நிவாரணப்பணிகள் நடக்கிறது. கே.பழனிசாமி ஆட்சியிலும் சரி, ஜெயலலிதா காலத்திலும் சரி, இதுபோன்ற படு பயங்கரமான மழைகள், புயல்கள் வந்துள்ளன. அவற்றை நாங்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொண்டு மக்களை நெருங்காமல் அடக்கி வைத்துவிட்டோம். ஆட்சியைப் பிடிப்பதற்கு முன் முதல்வர் ஸ்டாலின், பிரச்சராரத்தில் எந்தநேரமும் என்னை கோட்டையில் சந்திக்கலாம் என்றார். ஆனால், இவர் யாரும் அணுக முடியாத நிலையில் உள்ளார். எத்தனை மழை வந்தாலும் இந்த அரசு விழிக்கவே செய்யாது. மதுரையில் இன்னும் சரியாக மழை பெய்யவில்லை. மழைநீர் கால்வாய், சாலை வசதிகள் மோசமாக உள்ளது’’ என்றார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

6 mins ago

தமிழகம்

14 mins ago

தமிழகம்

55 mins ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

13 hours ago

தமிழகம்

15 hours ago

தமிழகம்

15 hours ago

தமிழகம்

17 hours ago

தமிழகம்

17 hours ago

தமிழகம்

17 hours ago

தமிழகம்

18 hours ago

தமிழகம்

20 hours ago

தமிழகம்

21 hours ago

மேலும்