தமிழக கனமழை பாதிப்புகள்: பிரதமர் மோடியை சந்திக்க நேரம் கேட்டு முதல்வர் ஸ்டாலின் கடிதம்

By செய்திப்பிரிவு

சென்னை: தென் மாவட்டங்களில் பெய்துவரும் கனமழையால் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் குறித்து ஆலோசனை நடத்த பிரதமர் மோடியை சந்திக்க நேரம் கேட்டுள்ளார் முதல்வர் ஸ்டாலின். டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடியை சந்திக்க நேரம் கேட்டு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் எழுதியுள்ள கடிதம் தொடர்பான செய்திக் குறிப்பில், “சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் அண்மையில் பெய்த மிக்ஜாம் புயல் மற்றும் கனமழையால் ஏற்பட்ட பாதிப்புகளுக்கு விரைந்து நிதி ஒதுக்க கோரவும், தற்போது தென் மாவட்டங்களில் பெய்து வரும் அதி கனமழையால் ஏற்பட்ட பாதிப்புகள், மீட்பு மற்றும் நிவாரணப் பணிகள் குறித்து எடுத்துக் கூறி ஆலோசிக்கவும், நாளை (டிச.19) டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடியை சந்திக்க தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் நேரம் கோரி கடிதம் எழுதியுள்ளார்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Loading...

திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்களில் நேற்று முன்தினம் இரவு தொடங்கி, நேற்று இரவு வரை பலமணி நேரம் இடைவிடாமல் கனமழை பெய்தது. இன்றும் சில இடங்களில் மழை தொடர்கிறது. வெள்ளத்தின் பாதிப்புகளை மக்கள் எக்ஸ் தளத்தில் பாதிப்புகளாக வெளியிட்டுள்ளனர். அதீத கனமழையால், குறிப்பாக நெல்லை மாநகரம் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. நெல்லையில் அடையாளங்களில் ஒன்றான வண்ணாரப்பேட்டை பாலத்தை மூழ்கடிக்கும் அளவுக்கு தாமிபரணி ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு பாய்கிறது.

முன்னதாக, தொடர் கனமழையால் பாதிக்கப்பட்டுள்ள திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, தென்காசி ஆகிய மாவட்டங்களில் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளை துரிதப்படுத்த கூடுதலாக நான்கு அமைச்சர்களை நியமனம் செய்து தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். மேலும், பொதுமக்கள் தங்களுக்கு தேவையான உதவிகள் மற்றும் பாதிப்புகள் குறித்த விவரங்களை தமிழகஅரசின் “வாட்ஸ்அப்” எண் மற்றும் “ட்விட்டர்”- மூலம் தெரிவிக்கலாம் என தமிழக அரசு வேண்டுகோள் விடுத்துள்ளது. இதனிடையே, தென் மாவட்டங்களில் இயல்பைவிட கூடுதல் மழை பொழிந்துள்ளது. தென்காசியில் 60%, தூத்துக்குடியில் 80% இயல்பைவிட கூடுதல் மழை பொழிந்துள்ளது. இது அதி கனமழையே தவிர மேக வெடிப்பு அல்ல என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

வரலாறு காணாத இந்த மழையால் நெல்லை, தூத்துக்குடி, குமரி, தென்காசி ஆகிய நான்கு தென் மாவட்டங்கள் கடுமையான பாதிப்புக்குள்ளாகி உள்ளனர். இம்மாவட்டங்களின் பல இடங்களில் வெள்ளநீர் சூழ்ந்துள்ளதால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்படைந்துள்ளது. தொடர் கனமழையால் பாதிக்கப்பட்டுள்ள திருநெல்வேலி, கன்னியாகுமரி, தூத்துக்குடி மற்றும் தென்காசி ஆகிய மாவட்ட ஆட்சியர்களுடன் முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை நடத்தினர். கோவையில் அரசு நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ள முதல்வர், 4 மாவட்ட ஆட்சியர்களுடன் காணொலி காட்சி வாயிலாக ஆலோசனை நடத்தினார். அப்போது, வெள்ளத்தில் பாதிக்கப்பட்டவர்களை மீட்பது, அத்தியாவசியப் பொருட்கள் விநியோகம் உள்ளிட்டவை குறித்து முதல்வர் உத்தரவுகள் வழங்கியுள்ளதாக தகவல் சொல்லப்பட்டுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE