வீடுகளுக்குள் வெள்ளம் - கனமழையால் நெல்லை, தூத்துக்குடி, குமரி மக்கள் பரிதவிப்பு

By செய்திப்பிரிவு

திருநெல்வேலி/ தென்காசி/ தூத்துக்குடி/ நாகர்கோவில்/ கோவில்பட்டி: திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்களில் பலமணி நேரம் நீடித்த மழையால் மக்கள் பரிதவிப்புக்குள்ளாயினர். பல இடங்களில் மின்சாரம் தடைபட்டது. வீடுகளை வெள்ளம் சூழ்ந்த நிலையில் மக்கள் பாதுகாப்பாக மீட்கப்பட்டனர். தாமிரபரணியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. தெற்கு இலங்கை கடற்கரையை ஒட்டிய வங்கக்கடல் பகுதிகளில் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்களில் நேற்று முன்தினம் தொடங்கிய மழை, நேற்று இரவு வரை நீடித்தது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. வெளியே செல்ல முடியாமல் வீடுகளுக்குள் மக்கள் முடங்கினர். நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த கனமழையால் அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்தது. தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கியதால் மக்கள் அவதிக்குள்ளாயினர்.

திருநெல்வேலி: திருநெல்வேலி புதிய பேருந்து நிலையம் அருகே உள்ள சேவியர் காலனியில் வீடுகளை வெள்ளம் சூழ்ந்தது. திருநெல்வேலி டவுன் வ.உ.சி. தெரு, பாரதியார் தெரு, பாளையங்கோட்டை சமாதானபுரம் பகுதிகளில் வீடுகளுக்குள் மழை நீர் புகுந்தது. திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தண்ணீர் புகுந்ததால் நோயாளிகள் பாதிக்கப்பட்டனர். இதுபோல் மனகாவலம்பிள்ளை நகர், பேட்டை, மேலப்பாளையம் பகுதிகளிலும் வீடுகளை வெள்ளம் சூழ்ந்தது. அம்பாசமுத்திரம் அருகே பொட்டல் கிராமத்தில் கனமழையால் ஊருக்குள் வெள்ளம் புகுந்ததால் மக்கள் வெளியேறி அங்குள்ள திருமண மண்டபத்தில் தஞ்சமடைந்தனர். நம்பியாறு அணைப்பகுதியில் 165 மி.மீ. மழை பதிவாகியது. நம்பியாறு மற்றும் அனுமன் நதியில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.

திருநெல்வேலியில் இடை விடாது கொட்டிய மழையால் சந்திப்பு பேருந்து நிலையம்
முன்பு சாலையை மூழ்கடித்தவாறு பாய்ந்த தண்ணீர் கடைகளுக்குள் புகுந்தது.

செட்டிக்குளம், கூடங்குளம் பகுதிகளிலும் குடியிருப்புகளை வெள்ளம் சூழ்ந்தது. களக்காடு தலையணை, நம்பி கோயிலுக்கு சுற்றுலா பயணிகள் மற்றும் பக்தர்கள் செல்ல வனத்துறையினர் தடைவிதித்துள்ளனர் திருநெல்வேலியில் மாநகராட்சி ஊழியர்கள் பல்வேறு பகுதிகளில் கழிவு நீரோடைகளின் அடைப்புகளை சரி செய்து, தண்ணீர் வெளியேற நடவடிக்கை எடுத்தனர். வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களை பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்க ஏற்பாடுகள் செய்தனர். பலத்த மழையால் மணிமுத்தாறு அருவியில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் அருவியில் குளிக்க தடை விதிக்கப்பட்டது. தாமிரபரணி ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது.

திருநெல்வேலி ரயில் நிலையத்துக்கு செல்லும் த.மு. சாலையில் பாய்ந்தோடிய
வெள்ளத்தில் தத்தளித்தவாறு செல்லும் வாகனம்.

தென்காசி: தென்காசி மாவட்டத்திலும் மிதமான மழை தொடர்ந்து பெய்துகொண்டே இருந்தது. கடனாநதி அணை முழுமையாக நிரம்பியது. அணைக்கு வரும் நீர் அப்படியே வெளியேற்றப்பட்டது. குற்றாலத்தில் அனைத்து அருவிகளிலும் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. அருவிகளில் குளிக்க தடை விதிக்கப்பட்டது.

கன்னியாகுமரி: நாகர்கோவில், கன்னியாகுமரியில் குடியிருப்புகளை வெள்ளம் சூழ்ந்ததால், பரிதவித்த மக்களை தீயணைப்புத் துறையினர் மீட்டனர். கன்னியாகுமரி, திற்பரப்பு உள்ளிட்ட சுற்றுலா மையங்கள் மழையால் முடங்கின. கன்னியாகுமரியில் படகு போக்குவரத்து ரத்து செய்யப்பட்டது. மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை. ரப்பர் பால் வெட்டும் தொழில், தேங்காய் வெட்டும் தொழில், கட்டுமான தொழில் உட்பட அனைத்து தொழில்களும் பாதிக்கப்பட்டன. நாகர்கோவில் மீனாட்சி கார்டன், வடசேரி புளியடி, பாரைக்கால் மடம் பகுதிகளில் வெள்ளத்தில் சிக்கிய மக்களை தீயணைப்பு துறையினர் ரப்பர் படகு மூலம் மீட்டனர். அஞ்சுகிராமம், செட்டிகுளம் பகுதியில் மழையால் சாலைகள் ஆறுபோல் காட்சியளித்தன. இதனால் கன்னியாகுமரியில் இருந்து அந்த வழியாக போக்குவரத்து துண்டிக்கப்பட்டது.

நாகர்கோவில், சுசீந்திரம், மணக்குடியில் பழையாற்றில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் நாகர்கோவில், கன்னியாகுமரி, திருவனந்தபுரம் சாலைகளிலும் போக்குவரத்து துண்டிக்கப்பட்டது. பேச்சிப்பாறை அணை நீர்மட்டம் 45 அடியையும், பெருஞ்சாணி அணை நீர்மட்டம் 24 அடியையும் நேற்று தாண்டியது. பேச்சிப்பாறை அணையில் இருந்து நேற்று காலை 10 மணிக்கு 3,000 கன அடி தண்ணீரும், பெருஞ்சாணி அணையில் இருந்து 1,100 கன அடி தண்ணீரும் வெளியேற்றப்பட்டது. “தொடர்ந்து மழை பெய்வதால் கூடுதல் நீர் திறக்கவும் வாய்ப்புள்ளது, கரையோர மக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும்” என, மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு வெளியிட்டார். அணைப்பகுதிகளை பொதுப்பணித்துறையினர் கண்காணித்து வருகின்றனர்.

தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டத்திலும் நேற்று முன்தினம் நள்ளிரவு தொடங்கிய கனமழை, நேற்று இரவு வரை நீடித்தது. சாத்தான்குளம், ஸ்ரீவைகுண்டம், திருச்செந்தூர் பகுதிகளில் மிக கனமழை பெய்தது. சாத்தான்குளத்தில் தெருக்களில் இடுப்பளவுக்கு மேல் தண்ணீர் சென்றதால் மக்கள் வெளியே வரமுடியாமல் முடங்கினர். கடைகள், வீடுகளுக்குள் மழைநீர் புகுந்தது. சாத்தான்குளம் அண்ணாநகர் பகுதியில் வீடுகளை மழைநீர் சூழ்ந்ததால், அந்த பகுதியில் வசித்த 20 பேர் வெளியேற்றப்பட்டு, தனியார் திருமண மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டனர். பேய்க்குளம், கருங்கடல், அரசூர், பழனியப்பபுரம், பண்ணம்பாறை, தட்டார்மடம் உள்ளிட்ட அனைத்து கிராமங்களிலும் மழைநீர் சூழ்ந்துள்ளதால் மக்கள் வெளியே வரமுடியாமல் முடங்கியுள்ளனர்.

கனமழை காரணமாக தூத்துக்குடி ஜி.சி.சாலையில் ஆறுபோல
பெருக்கெடுத்து ஓடிய மழை நீர்.
படம்: என்.ராஜேஷ்

ஸ்ரீவைகுண்டம், திருச்செந்தூரிலும் தெருக்கள், சாலைகள் வெள்ளக்காடாயின. வைகுண்டம், ஆழ்வார்திருநகரி, வல்லநாடு உள்ளிட்ட பகுதிகளில் பிசான சாகுபடிக்காக தயார் செய்யப்பட்டிருந்த பல ஏக்கர் நாற்றங்கால்கள் தண்ணீரில் மூழ்கின. தூத்துக்குடி மாநகர பகுதிகளில் பாளையங்கோட்டை சாலை, ஜிசி சாலை உள்ளிட்ட அனைத்து முக்கிய சாலைகளிலும் மழை வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. ராஜீவ் நகர், கதிர்வேல் நகர், ராஜகோபால் நகர் பகுதிகளில் குடியிருப்புகளை மழைநீர் சூழ்ந்தது. மேயர் ஜெகன் பெரியசாமி மற்றும் அதிகாரிகள் மழைநீர் தேங்கிய பகுதிகளை ஆய்வு செய்து, தண்ணீரை வெளியேற்றும் பணிகளை முடுக்கிவிட்டனர்.

பல இடங்களில் நேற்று மின்சாரம் முழுமையாக தடைபட்டது. மீனவர்கள் நேற்று கடலுக்கு மீன்பிடிக்க செல்லவில்லை. சென்னையில் இருந்து தூத்துக்குடி வரும் விமான சேவையும் கடுமையாக பாதிக்கப்பட்டது. காலை 7.25 மணிக்கு வரக்கூடிய விமானம் மட்டும் வழக்கம் போல வந்துவிட்டு, திரும்பிச் சென்றது. காலை 11.55 மணிக்கு வரவேண்டிய விமானம் மதுரைக்கு திருப்பிவிடப்பட்டது. அதுபோல மாலை 4 மணிக்கு வரவேண்டிய விமானம் முழுமையாக ரத்து செய்யப்பட்டது. மேலும், 2.05 மணிக்கு வந்த பெங்களூரு விமானம் தரயிறங்க முடியாததால் பெங்களூருவுக்கே திருப்பிவிடப்பட்டது. இதனால் பயணிகள் பாதிப்படைந்தனர். ஸ்ரீவைகுண்டம் அணைக்கட்டு பகுதிகள், கலியாவூர் முதல் புன்னக்காயல் வரை தாமிரபரணி ஆற்றங்கரையோர கிராமங்களில் வசிக்கும் மக்கள் தாமிரபரணி ஆற்றில் குளிக்கவோ, ஆற்றின் கரையோர பகுதிகளுக்கு செல்லவோ கூடாது என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

பாளையங்கோட்டை அருகே திருச்செந்தூர் சாலையை மூழ்கடித்து சென்ற வெள்ளம்.
படம்: மு.லெட்சுமி அருண்

கோவில்பட்டி: கோவில்பட்டி, கழுகுமலை, கயத்தாறு, விளாத்திகுளம், எட்டயபுரம், எப்போதும்வென்றான், ஓட்டப்பிடாரம், குளத்தூர் உள்ளிட்ட பகுதிகளிலும் கன மழை பெய்தது. இலக்குமி ஆலை கீழ காலனி பகுதியில் வேன் நிறுத்தும் இடத்தில் இருந்த சுமார் 50 ஆண்டுகள் பழமையான வாகை மரம் வேருடன் சாய்ந்து விழுந்தது. இதில், மரத்தின் அருகே நிறுத்தப்பட்டிருந்த இரண்டு வேன்கள் சேதமடைந்தன. தீயணைப்பு துறையினர் வந்து மரத்தை வெட்டி அகற்றி போக்குவரத்தை சீர் செய்தனர். தண்ணீர் பெருகியதால் இளையரசனேந்தல் சுரங்கப்பாதை வழியாக வாகனங்கள் செல்வதற்கு தடை விதித்து மூடப்பட்டது.இலுப்பையூரணி, கிருஷ்ணா நகர் செல்லும் சாலை, இலக்குமி ஆலை அருகே ஆகிய இடங்களில் உள்ள சுரங்கப்பாதைகளிலும் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. கடம்பூர் அருகே கோடங்கால் கிராமத்துக்கு செல்லும் வழியில் உள்ள ரயில்வே சுரங்கப்பாதையில் தண்ணீர் அதிகளவு இருந்ததால், மக்கள் மாற்றுப் பாதை வழியாக சென்று வந்தனர். செண்பகவல்லி அம்பாள் கோயில் முன்புறம் உள்ள ஓடையில் இருந்து தண்ணீர் வெளியேறி பெருக்கெடுத்தது.

பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை தேர்வுகள் ரத்து: திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வரும் நிலையில், இன்றும் மழை எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. இதையடுத்து, இம்மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று (18-ம் தேதி) விடுமுறை அறிவித்து ஆட்சியர்கள் அறிவிப்பு வெளியிட்டுள்ளானர். உயர்கல்விக்கான தேர்வுகளும் ரத்து செய்யப்பட்டுள்ளன. தனியார் நிறுவனங்கள் அத்தியாவசிய தேவைக்கு மட்டும் மிகக் குறைந்த எண்ணிக்கையிலான பணியாளர்களை கொண்டு இயங்குமாறு மாவட்ட நிர்வாகங்கள் அறிவுறுத்தி உள்ளன. தென்காசி மாவட்டத்தில் கனமழை காரணமாக இன்று நடைபெற இருந்த மக்களுடன் முதல்வர் முகாம் ஜனவரி 6-ம் தேதி நடைபெறும் என, மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

திருநெல்வேலி ஆட்சியரின் அடுத்தடுத்த அறிவிப்பு: திருநெல்வேலி ஆட்சியர் கார்த்திகேயன் நேற்று காலையில் வெளியிட்ட அறிவிப்பில், “பாபநாசம், சேர்வலாறு அணைகளுக்கு வரக்கூடிய நீர்வரத்து, விநாடிக்கு 10 ஆயிரம் கனஅடி அளவுக்கு இருக்கிற காரணத்தினால், தாமிரபரணியில் விநாடிக்கு 3 ஆயிரம் கன அடி நீர் திறக்கப்படுகிறது. ஆங்காங்கே வந்து சேரும் நீரின் அளவையும் சேர்த்து, தாமிரபரணியில் விநாடிக்கு 5 ஆயிரம் கனஅடி அளவுக்கு நீர் செல்லும் ” என்று தெரிவித்திருந்தார். நேற்று மதியம் அவர் வெளியிட்ட அறிவிப்பில், “நீர் வரத்து அதிகரித்துள்ளதால் பாபநாசம், சேர்வலாறு அணைகளில் நீர் திறப்பு மதியம் 2 மணிக்கு விநாடிக்கு 15 ஆயிரம் கனஅடியாக அதிகரிக்கப்படும். மாலை 3 மணி முதல் 4 மணி வரை நீர் திறப்பு விநாடிக்கு 30 ஆயிரம் கனஅடியாக அதிகரிக்கப்படும். மக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்” என்று தெரிவித்திருந்தார்.

திருநெல்வேலி மாவட்டம் ஏர்வாடியில் வெள்ளத்தில் மூழ்கிய கடைவீதி.

நெல்லை, தூத்துக்குடியில் பாலம் உடைந்தது: திருநெல்வேலி கொக்கிரகுளம் அருகே கீழவீரராகவபுரம், மேலநத்தம் பகுதிகளுக்கு இடையே அமைக்கப்பட்டிருந்த பாலம் கனமழையால் இடிந்து விழுந்தது. பாளையங்கோட்டையில் இலந்தைகுளம் நிரம்பி அருகிலுள்ள குடியிருப்புகளுக்குள் தண்ணீர் புகுந்தது. இந்த குளத்து தண் ணீர் அருகிலுள்ள சாராள் தக்கர் மகளிர் மேல்நிலைப்பள்ளிக்குள்ளும் புகுந்தது.

தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டம் பொட்டலூரணியில் இருந்து செக்காரக்குடிக்கு செல்லும் சாலையில் உள்ள ஓடையின் குறுக்கே பாலம் அமைக்கும் பணிகள் நடந்து வருகின்றன. இதன் அருகே தற்காலிகமாக குழாய்கள் பதிக்கப்பட்டு பாலம் அமைக்கப்பட்டிருந்தது. அதனை பொதுமக்கள் பயன்படுத்தி வந்தனர். நேற்று இந்த பாலம் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டது. இந்த பாலம் கடந்த சில வாரங்களுக்கு முன்பும் மழையால் அடித்து செல்லப்பட்டது குறிப்பிடத்தக்கது.

கயத்தாறில் கொட்டகை இடிந்து ஆடுகள் உயிரிழப்பு: கயத்தாறு பேரூராட்சி 6-வது வார்டு தெற்கு சுப்பிரமணியபுரம் - வடக்கு மயிலோடை சாலையில் மரங்கள் வேரோடு சாய்ந்து விழுந்தன. கயத்தாறு அருகே தென்னம்பட்டி கிராமம் பிள்ளையார் கோவில் தெருவில் சிவன் என்பவரது ஆட்டுக்கொட்டகையில் கனமழையால் சுவர் இடிந்துவிழுந்தது. இதில் கொட்டகையில் அடைத்துவைக்கப்பட்டிருந்த ஆடுகளில் 5 ஆடுகள் இடிபாட்டில் சிக்கி உயிரிழந்தன.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

6 mins ago

தமிழகம்

37 mins ago

தமிழகம்

47 mins ago

தமிழகம்

49 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

51 mins ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

மேலும்