ரூ.6,000 வெள்ள நிவாரணம் வழங்கும் திட்டம்: காஞ்சி, செங்கை, திருவள்ளூரில் அமைச்சர்கள் தொடங்கி வைப்பு

By செய்திப்பிரிவு

காஞ்சி/செங்கை/திருவள்ளூர்: மிக்ஜாம் புயல், மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்ட மக்களுக்கு ரூ.6 ஆயிரம் நிவாரணம் வழங்கும் திட்டத்தை அமைச்சர்கள் அன்பரசன், காந்தி தொடங்கி வைத்தனர். கடந்த டிச. 3, 4 ஆகிய தேதிகளில் மிக்ஜாம் புயல் காரணமாக சென்னையில் அதிக கனமழை பெய்தது. மேலும் செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களிலும் குறிப்பிட்ட சில வட்டங்களில் கனமழை பெய்தது. இதனால் பொதுமக்களுக்குக் கடுமையான பாதிப்புகள் ஏற்பட்டு அவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டது. இதனால் அரசு சார்பில் ரூ.6,000 நிவாரண தொகை வழங்க முடிவு செய்யப்பட்டு டோக்கன் வழங்கப்பட்டது.

இந்நிலையில் நேற்று ரூ.6,000 வெள்ள நிவாரணம் வழங்கும் பணி காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் மாவட்டங்களில் தொடங்கப்பட்டது. செங்கல்பட்டு மாவட்டத்தில் பம்மல் அண்ணா நகர் மற்றும் காஞ்சிபுரம் மாவட்டம் குன்றத்தூர் பகுதிகளில் குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் இத்திட்டத்தைத் தொடங்கி வைத்தார். அதேபோல் திருவள்ளூர் மாவட்டம்,மாதர்பாக்கம் பகுதியில் கைத்தறி மற்றும் துணி நூல் துறை அமைச்சர்காந்தி தொடங்கி வைத்தார். செங்கல்பட்டு மாவட்டத்தில் 4,08,488 குடும்பங்களுக்கும், காஞ்சியில் 1,31,149 குடும்பங்களுக்கும், திருவள்ளூர் மாவட்டத்தில் 6,08,726 குடும்பங்களுக்கும் நிவாரணம் வழங்கப்படவுள்ளது. இந்த நிகழ்ச்சிகளில் செங்கை ஆட்சியர் ஆ.ர.ராகுல் நாத், காஞ்சி ஆட்சியர் கலைச்செல்வி மற்றும் எம்.பி, எம்எல்ஏக்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள், அரசு அதிகாரிகள் பங்கேற்றனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE