தூத்துக்குடியில் கனமழை | தாமிரபரணி கரையோர மக்களுக்கு எச்சரிக்கை: அவசரகால உதவி எண்கள் அறிவிப்பு

By ரெ.ஜாய்சன்

தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்ட தாமிரபரணி கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும், மாவட்டத்தில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்படும் மக்களுக்காக அவசர கால தொலைபேசி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் கோ.லட்சுமிபதி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: திருநெல்வேலி மாவட்டம் பாபநாசம், சேர்வலாறு மற்றும் மணிமுத்தாறு அணைகளுக்கு 15 ஆயிரம் கன அடிக்கு மேல் நீர்வரத்து உள்ளதாலும், உபரிநீர் வெளியேற்றப்படும் சூழல் உள்ளதால் தாமிரபரணி ஆற்றில் அதிகப்படியான மழை நீர் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும், தொடர் கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாலும், தூத்துக்குடி மாவட்டத்தில் மருதூர் மற்றும் ஸ்ரீவைகுண்டம் அணைக்கட்டு பகுதிகள், கலியாவூர் முதல் புன்னக்காயல் வரை தாமிரபரணி ஆற்றங்கரையோர கிராமங்களில் வசிக்கும் பொதுமக்கள் தாமிரபரணி ஆற்றில் குளிக்கவோ, ஆற்றின் கரையோர பகுதிகளுக்கு செல்லவோ கூடாது. மேலும், பாதுகாப்பாக இருக்கும் படியும் எச்சரிக்கப்படுகிறார்கள்.

தாமிரபரணி ஆற்றில் பொதுமக்கள் மற்றும் கால்நடைகள் இறங்காதவாறு கிராம நிர்வாக அலுவலர்கள் மற்றும் கிராம உதவியாளர்கள் மூலம் கண்காணித்திட ஸ்ரீவைகுண்டம், ஏரல் மற்றும் திருச்செந்தூர் வட்டாட்சியர்களுக்கு அறிவுரைகள் வழங்கப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறது.

அவசர கால எண்கள்: தூத்துக்குடி மாவட்ட பொதுமக்கள் மழைக்கால அவசர உதவிகளுக்கு கீழ் காணும் உதவி எண்களை தொடர்பு கொள்ளலாம். தூத்துக்குடி மாவட்ட பேரிடர் கட்டுப்பாட்டு மையம்- 1077, மாநில பேரிடர் கட்டுப்பாட்டு மையம்- 1070, மழைக்கால நோய்கள் தொடர்பான சந்தேகங்களுக்கு- 104, அவசர மருத்துவ உதவிக்கு- 108, மின்சாரம் தொடர்பான புகார்களுக்கு மின்னகம் உதவி மையம்- 94458 54718, தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் உதவி 101 மற்றும் 112 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம்.

தூத்துக்குடி மாவட்டத்தில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களை தங்க வைப்பதற்காக 97 நிவாரண மையங்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன என, அந்த செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேசிய பேரிடர் மீட்பு குழுவினர் வருகை: இதற்கிடையே தூத்துக்குடி மாவட்டத்தில் மழை வெள்ள மீட்பு பணிகளுக்காக அரக்கோணத்தில் இருந்து 2 கம்பெனி தேசிய பேரிடர் மீட்பு குழுவினர் வருகின்றனர். அவர்கள் மாவட்டத்துக்கு வந்து சேர்ந்து பணிகளை மேற்கொள்வார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது

பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை: தூத்துக்குடி மாவட்டத்தில் கனமழை காரணமாக பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை (டிச.18) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக மாவட்ட ஆட்சியர் கோ.லட்சுமிபதி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: தூத்துக்குடி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்து வரும் காரணத்தினாலும், கனமழை எச்சரிக்கை உள்ளதாலும் பள்ளி, கல்லூரிகள் மற்றும் அனைத்து வகை கல்வி நிறுவனங்களுக்கும் நாளை 18.12.2023 திங்கள்கிழமை ஒரு நாள் விடுமுறை விடப்படுகிறது. உயர்கல்வி வகுப்புகளுக்கு நடைபெறவிருந்த தேர்வுகள் மற்றொரு நாளில் நடைபெறும். அதற்கான தேதி பின்னர் அறிவிக்கப்படும் என, அந்த செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஸ்ரீவைகுண்டத்தில் 394 மி.மீ., மழை: தூத்துக்குடி மாவட்டத்தில் நேற்று காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரையிலான 12 மணி நேரத்தில் ஸ்ரீவைகுண்டத்தில் அதிகபட்சமாக 394 மி.மீ., மழை பெய்துள்ளது. சாத்தான்குளத்தில் 306.40 மி.மீ., மழையும், திருச்செந்தூரில் 185 மி.மீ., மழையும் பதிவாகியுள்ளது. இதர இடங்களில் 12 மணி நேரத்தில் பதிவான மழை அளவு (மில்லி மீட்டரி): தூத்துக்குடி 40.70, காயல்பட்டினம் 124, குலசேகரன்பட்டினம் 109, கோவில்பட்டி 138, கழுகுமலை 52, கயத்தாறு 110, கடம்பூர் 155, எட்டயபுரம் 64.60, விளாத்திகுளம் 64, காடல்குடி 27, வைப்பார் 68, சூரன்குடி 65, ஓட்டப்பிடாரம் 65, மணியாச்சி 90, வேடநத்தம் 35, கீழஅரசரடி 25 மி.மீ., மழை பெய்துள்ளது. மாவட்டம் முழுவதும் 12 மணி நேரத்தில் 2117.70 மி.மீ.,யும், சராசரியாக 111.46 மி.மீ., மழை பதிவாகியுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE