கனமழை | கன்னியாகுமரியில் குடியிருப்புகளை சூழ்ந்த மழைநீர்: நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை

By செய்திப்பிரிவு

கன்னியாகுமரி: கன்னியாகுமரி மாவட்டத்தில் பெய்து வரும் கனமழையின் காரணமாக, நாகர்கோவில் மாநகராட்சிக்குட்பட்ட குடியிருப்புப் பகுதிகளுக்குள் மழைநீர் சூழந்துள்ளது. வெள்ள நீரில் சிக்கியிருப்பவர்களை தீயணைப்பு மற்றும் மீட்பு படையினர் மீட்டனர். கனமழையின் காரணமாக, நாளை கன்னியாகுமரி மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு மாவட்ட நிர்வாகம் விடுமுறை அறிவித்துள்ளது.

இயல்பு வாழ்க்கை பாதிப்பு: கன்னியாகுமரி மாவட்டத்தில் சனிக்கிழமை காலை முதலே மாவட்டத்தின் பெரும்பாலான பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. மாவட்டத்தின் மலையோரப் பகுதிகள் மற்றும் கடலோரப் பகுதிகளில் கனமழை பெய்து வந்தது. இதைத்தொடர்ந்து மாவட்டத்தின் அனைத்துப் பகுதிகளில் தொடர் கனமழை பெய்து வருகிறது. கனமழையின் காரணமாக குடியிருப்புப் பகுதிகளுக்குள் வெள்ளநீர் புகுந்தது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்புக்குள்ளானது.

குடியிருப்புகளைச் சூழந்த மழைநீர்: செம்மண் குளத்தில் ஏற்பட்ட உடைப்பின் காரணமாக, நாகர்கோவில் மாநகராட்சிக்குட்பட்ட மீனாட்சிபுரம் பகுதியில் மழைநீர் சூழந்தது. இதனால், வீடுகளுக்குள் சிக்கிய மக்கள் வெளியே வரமுடியாமல் தவித்தனர். இந்தநிலையில், ஒருசில வீடுகளில் சிக்கியிருந்த மக்களை தீயணைப்புத் துறையினர் மற்றும் மாநகராட்சி பணியாளர்கள் பாதுகாப்பு உபகரணங்கள் உடன் வந்து பாதுகாப்பாக மீட்டனர். இந்தப் பகுதியில் உள்ள பல வீடுகளில் மக்கள் பலரும் சிக்கியிருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. தொடர்ந்து மீட்பு பணிகளில் தீயணைப்புத் துறையினர் ஈடுபட்டு வருகின்றனர். இந்தப் பகுதியில், மழைநீர் சூழ்ந்துள்ளதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மின் இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளது.

பேச்சிப்பாறை அணையிலிருந்து 4000 கனஅடி தண்ணீர் திறக்கப்படுகிறது

பழையாற்றில் வெள்ளப்பெருக்கு: நாகர்கோவிலில் கோட்டாறு மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளிலும் கோட்டாறு ரயில்வே காலனி பகுதியிலும் மழைநீர் சூழ்ந்துள்ளது. நேற்று இரவு முதல் பெய்து வரும் கனமழையின் காரணமாக, பழையாற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. இதைத்தொடர்ந்து கரையோரப் பகுதி மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. பழையாற்றில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கத்தின் காரணமாக அதன் பாசன கால்வாய்களிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. கால்வாய்களில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் நாகர்கோவில் மாநகராட்சிக்குட்பட்ட 28வது வார்டில் கடுமையான வெள்ள நீர் சூழ்ந்தது. இதைத்தொடர்ந்து அந்தப் பகுதியில் வசித்து வந்த 30-க்கும் மேற்பட்ட குடும்பங்களைச் சேர்ந்தவர்களை தீயணைப்பு மற்றும் மீட்பு படையினர் பத்திரமாக மீட்டு பாதுகாப்பான இடங்களுக்கு அனுப்பிவைத்தனர்.

கனமழையால் அஞ்சுகிராமம் பகுதியில் அதிசய விநாயகர் கோயில் மற்றும் காவல் நிலைய பகுதி வெள்ளத்தால் மூழ்கி உள்ளது

அணைகளில் இருந்து தண்ணீர் திறப்பு: கன்னியாகுமரி மாவட்டத்தில் பெய்து வரும் தொடர் கனமழையின் காரணமாக, மாவட்டத்தில் உள்ள பேச்சிப்பாறை, பெருஞ்சாணி மற்றும் சிற்றாறு அணைகளுக்கு தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது. பேச்சிப்பாறை அணையில் இருந்து 4,000 கனஅடியும், சிற்றாறு அணையிலிருந்து ஆயிரம் கனஅடியும் உபரிநீர் திறக்கப்பட்டு வருகிறது. இந்த உபரி நீர், கோதையாறு, தாமிரபரணி மற்றும் பரளியாறு ஆகிய ஆறுகளில் பெருக்கெடுத்து ஓடுகிறது.

இதனால், மாவட்டத்தின் மேற்கு பகுதிகளின் தாழ்வான இடங்களில் தண்ணீர் தேங்குவதற்கான வாய்ப்பு உள்ளதால், மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் அந்தப் பகுதிகளில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. மாவட்ட நிர்வாகம், அரசு அதிகாரிகள் கண்காணிப்பு மற்றும் மீட்புப் பணிகளை தீவிரப்படுத்தியுள்ளனர். மேலும், கன்னியாகுமரி மாவட்டத்தில் பெய்து வரும் கனமழையால் அஞ்சுகிராமம் பகுதியில் அதிசய விநாயகர் கோயில் மற்றும் காவல் நிலையம் அமைந்துள்ள பகுதி வெள்ளத்தால் மூழ்கி உள்ளது.

குடியிருப்புப் பகுதிகளுக்குள் கரைபுரண்டு ஓடும் வெள்ள நீர்

3 மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை: கன்னியாகுமரி மாவட்டத்தில் பெய்து வரும் கனமழையின் காரணமாக, நாளை (டிச.18) அனைத்து பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அருகில் உள்ள மாவட்டங்களான திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களிலும் அனைத்து பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE