விழுப்புரத்துடன் திருக்கோவிலூரை இணைத்து உளுந்தூர்பேட்டை புதிய கோட்டமாக உருவெடுக்கிறதா?

By ந.முருகவேல் 


கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள திருக்கோவிலூர் வட்டத்தை விழுப்புரம் மாவட்டத்து டன் இணைத்து, உளுந்தூர்பேட்டையை வருவாய் கோட்டமாக உயர்த்தி, எலவனாசூர் கோட்டையை தனி வருவாய் வட்டமாக உருவாக்க இரு மாவட்ட வருவாய்த் துறையி னரும் முயற்சிப்பதாக கூறப்படுகிறது.

கடந்த 2019-ம் ஆண்டு விழுப்புரம் மாவட் டத்தில் இருந்து பிரிக்கப்பட்டு கள்ளக்குறிச்சி மாவட்டம் உருவாக்கப்பட்டது. கள்ளக்குறிச்சி மற்றும் திருக்கோவிலூர் ஆகிய இரு கோட்டங்களுடன், கள்ளக்குறிச்சி, சின்னசேலம், சங்கராபுரம், கல்வராயன்மலை, திருக்கோவிலூர், உளுந்தூர் பேட்டை உள்ளிட்ட6 வருவாய் வட்டங்களை இணைத்து இந்தப் புதிய கள்ளக்குறிச்சி மாவட்டம் உருவாக்கப்பட்டது. அதன் பின் அண்மையில் சங்கராபுரம் வட்டத்தைப் பிரித்து வாணாபுரம் எனும் புதிய வட்டம் 7- வது வட்டமாக உருவாக்கப்பட்டது.

அதேபோன்று உளுந்தூர்பேட்டை வட்டத்துக்குட்பட்ட திருவெண்ணெய் நல்லூர் ஊராட்சியைச் சேர்ந்தவர்கள், தங்கள் பகுதியை கள்ளக் குறிச்சியில் சேர்க்கக் கூடாது என போராட்டம் நடத்தியதைத் தொடர்ந்து, திருவெண்ணெய் நல்லூர் வட்டம் உருவாக்கப்பட்டு, விழுப்புரம் மாவட்டத்துடன் இணைக்கப்பட்டது. தற்போதைய நிலையில் திருக்கோவிலூர் வட்டம் கள்ளக்குறிச்சியில் இருந்து வந்த போதிலும், திருக்கோவிலூர் சட்டப்பேரவைத் தொகுதிக்கப்பட்ட பெரும்பாலான ஊராட்சிகள் விழுப்புரம் மாவட்ட எல்லைக்குள்ளாகவே இருந்து வருகின்றன.

திருக்கோவிலூர் தொகுதியின் தற் போதைய சட்டப்பேரவை உறுப்பினராக உயர்கல்வித்துறை அமைச்சர் க.பொன்முடி உள்ளார். எனவே திருக்கோவிலூர் வட்டத்தை விழுப்புரம் மாவட்டத்துடன் இணைக்க அவர் தரப்பில் முயற்சி மேற்கொண்டு வருவதாக கூறப்படுகிறது.

திருக்கோவிலூர் வட்டத்துக்குட்பட்ட, திருப்பாலப்பந்தல், குலதீபமங்கலம், திருக்கோவிலூர் மற்றும் ந.மணலூர்பேட்டை குறுவட்டங்களில் (பிர்கா) மணலூர்பேட்டை நீங்கலாக மற்ற குறுவட்டங்களை விழுப்புரம் மாவட்டத்தோடு இணைக்கும் நடவடிக்கையில் அமைச்சர் பொன்முடி தீவிரம் காட்டி வருவதாக இப்பகுதிகளில் பரவலாக பேச்சு அடிபடுகிறது. ஏற்கெனவே மணலூர்பேட்டை குறுவட்டம் வாணாபுரம் வட்டத்தோடு இணைக்கப்பட்டு விட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

வருவாய் கோட்டமாக இருக்கும் திருக் கோவிலூர் விழுப்புரம் மாவட்டத்தோடு சேரும் பட்சத்தில், கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் புதிதாக ஒரு கோட்டத்தை உருவாக்க ரிஷி வந்தியம் எம்எல்ஏ கார்த்திகேயன், அமைச்சர் எ.வ.வேலு மூலம் முயற்சிப்பதாகவும் பரவலாக பேச்சு அடிபடுகிறது.

உளுந்தூர்பேட்டையை தலைமையிட மாகக் கொண்டு புதிய வருவாய் கோட்டத்தையும், உளுந்தூர்பேட்டை வட்டத்துக்குட்பட்ட திருநாவலூர், உளுந்தூர்பேட்டை மற்றும் செங் குறிச்சி ஆகிய 6 குறுவட்டங்களில் எறையூர்,எலவனாசூர்கோட்டை, களமருதூர் ஆகிய வற்றை இணைத்து எலவனாசூர்கோட்டை எனும் புதிய வருவாய் வட்டத்தை உருவாக்கும் முயற்சியில் இறங்கியுள்ளதாக கூறப்படுகிறது.

உளுந்தூர்பேட்டையை தலைமையிடமாகக் கொண்டு புதிய கோட்டம் உருவாக்கப்படும் பட்சத்தில் திருவெண்ணெய் நல்லூர் வட்டம் உளுந்தூர்பேட்டை கோட்டத்தில் இணைக்கப் பட்டு கள்ளக்குறிச்சி மாவட்டத்தோடு இணையவாய்ப்பிருப்பதாக வருவாய் துறை வட்டா ரங்கள் தெரிவிக்கின்றன.

எதற்காக இந்த மாற்றங்கள்; இதற்கு எதற்கு அமைச்சர் தொடங்கி எம்எல்ஏ வரையில் ஆர்வம் காட்டுகின்றனர் என்ற கேள்வி விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்ட மக்களிடையே எழுந்துள்ளது. அமைச்சராக இருக்கும் திருக்கோவிலூர் தொகுதி எம்எல்ஏ-வான பொன்முடியால், தனது தொகுதிக்குட்பட்ட நிகழ்ச்சிகளில் பங்கேற்கும் போது, கள்ளக்குறிச்சி வடக்கு மாவட்ட திமுக எம்எல்ஏ-வான உதயசூரியன் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் எவரும் பங்கேற்பதில்லை.

அதேபோன்று தனது தொகுதியான திருக் கோவிலூரில் அரசு நலத் திட்டங்களை செயல்படுத்த கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியரை அணுகும் போது, மாவட்டத்தில் ஆதிக்கம் செலுத்தும் ரிஷிவந்தியம் திமுக எம்எல்ஏ கார்த்திகேயனுடன் மல்லுக் கட்ட வேண்டிய கட்டாயத்துக்கு ஆளாகிறார்.

இது ஒருபுறம் என்றாலும், கள்ளக்குறிச்சி மாவட்டத்தின் பொறுப்பாளராக தலைமையால் நியமிக்கப்பட்டுள்ள அமைச்சர் எ.வ.வேலுவிடம் கலந்தாலோசித்த பின்னரே, அப்பகுதியில் எதையும் செய்ய வேண்டிய நிர்ப்பந்தம் அமைச்சர் பொன்முடிக்கு ஏற்படுகிறது. இந்தச் சூழ்நிலையில் தனது தொகுதி முழுவதையும் விழுப்புரம் மாவட்டத்தோடு இணைத்து விட்டால், சுதந்திரமாக செயல்பட முடியும் என்பதால் அதற்கான முனைப்பில் அவர் தீவிரம் காட்டி வருகிறார்.

அதேநேரத்தில் எம்எல்ஏ கார்த்திகேயன், தனது அடுத்த கட்ட வளர்ச்சியாக கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் பரவலாக தனது ஆதிக்கத்தை நிலை நிறுத்த நினைக்கிறார். உளுந்தூர்பேட்டை கோட்டம் அமைந்துவிட்டால், அங்கும் தனது செல்வாக்கை நிலை நிறுத்திக்கொள்ளலாம் என முடிவு செய்து, திருக்கோவிலூர் போனால் போகட்டும், உளுந்தூர்பேட்டை மூலம் தனது அரசியலை விரிவுப் படுத்தலாம் என புதிய கோட்டத்துக்கு ஆர்வம் காட்டுகிறார்.

தற்போது திருவெண்ணெய்நல்லூர் வட்டத்தைச் சேர்ந்தவர்கள் கள்ளக்குறிச்சி மாவட்டத்தோடு இணைக்க எதிர்ப்புத் தெரிவித்து போராடி வரும் நிலையில், உளுந்தூர்பேட்டையை புதிய கோட்டமாக உருவாக்கி, அதில் திருவெண்ணெய்நல்லூரை இணைத்தால் அப்பகுதி மக்களிடம் இருந்து கிளம்பும் எதிர்ப்பையும் சமாளிக்கலாம் என்று அவர் தரப்பில் கணக்கு போடுகின்றனர்.

புதிதாக மாவட்டங்கள் உருவாவது, புதிய கோட்டங்களை, வட்டங்களைப் பிரிப்பது போன்ற செயல்பாடுகள் அரசின் நேர்த்தியான நிர்வாக வசதிகளுக்காக; மக்கள் அரசை எளிய முறையில் அணுகுவதற்காக. இந்த காரணங்களை முன்வைத்தே இதுவரையில் இதுபோன்ற புதிய புதிய வருவாய் பகுதிகள் உருவாக்கப்பட்டு வந்திருக்கின்றன. ஆனால், விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் ஆளும் கட்சியினர் தங்கள் சுய லாபத்துக்காக இந்த முயற்சியில் ஈடுபடுவது மக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தி வருகிறது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

14 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

48 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

மேலும்