நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரியில் அடுத்த இரண்டு நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு

By செய்திப்பிரிவு

சென்னை: திருநெல்வேலி, தூத்துக்குடி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் அடுத்து வரும் இரண்டு நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக தனியார் வானிலை ஆய்வாளர் பிரதீப் ஜான் கூறியுள்ளார். மாஞ்சோலை மலைப்பகுதியில் 30-50 செ.மீ மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

இதுதொடர்பாக தனது சமூகவலைதளப் பக்கத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில், "தென் தமிழக பகுதிகளான கன்னியாகுமரி, திருநெல்வேலி மற்றும் தூத்துக்குடி பகுதியில் மழை தொடங்கியது. இந்தப் பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்துக்கு இடைவிடாது மழை பெய்யும். மாஞ்சோலை மலை மற்றும் கோதையாறு நீர்ப்பிடிப்பு பகுதிகளை கண்காணிக்க வேண்டும். மணிமுத்தாறு மற்றும் பாபநாசம் அணை இரண்டில் இருந்து உபரி நீர் அதிகரிக்க வாய்ப்புள்ளது. மாஞ்சோலை மலைப்பகுதியில் 30-50 செ.மீ மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், மாஞ்சோலை மலைப்பகுதிகளில் சூறாவளிக் காற்று வீசக்கூடும். கேரளாவின் திருவனந்தபுரம் மற்றும் கொல்லத்தின் மறுபகுதியிலும் கனமழை பெய்யும்" என்று அவர் பதிவிட்டுள்ளார்.

முன்னதாக, திருநெல்வேலி, தூத்துக்குடி மற்றும் கன்னியாகுமரி பகுதியில் சனிக்கிழமை இரவு முதலே பல இடங்களில் மழை பெய்து வந்தது. இந்நிலையில், இன்று காலை முதல் கனமழை பெய்து வருகிறது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. தாழ்வான பகுதிகளில் தண்ணீர் புகுந்ததால் மக்கள் கடும் சிரமத்துக்கு ஆளாகியுள்ளனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE