“அவதூறு பேசி அரசியல் செய்வோரை புறந்தள்ளி இளைஞரணி மாநாட்டில் சந்திப்போம்” - தொண்டர்களுக்கு ஸ்டாலின் கடிதம்

By செய்திப்பிரிவு

சென்னை: திமுக தலைவரும், முதல்வருமான மு.க.ஸ்டாலின் திமுக தொண்டர்களுக்கு எழுதியுள்ள கடிதத்தில், “மத்திய அரசு திராவிட மாடல் அரசின் பணிகளைப் பாராட்டியிருப்பது நம் உண்மையான உழைப்புக்கும் அக்கறையான செயல்பாடுகளுக்குமான சான்றிதழ் மட்டுமல்ல, அவதூறு பேசி அரசியல் செய்ய நினைப்பவர்களின் கன்னத்தில் விழுந்த அறை” என்று கூறியுள்ளார்.

அக்கடிதத்தின் விவரம் வருமாறு: நம் உயிருடன் கலந்திருக்கும் தலைவர் கலைஞரின் அன்பு உடன்பிறப்புகளுக்கு, உங்களில் ஒருவன் எழுதும் மடல்.

வரலாறு காணாத கனமழையை மிக்ஜாம் புயலின் எதிரொலியாக அல்ல.. அல்ல.. இடியொலியாக எதிர்கொண்டன சென்னையும் அதனைச் சுற்றியுள்ள மாவட்டங்களும், எத்தகைய இடர் வந்தாலும் அதிலிருந்து மக்களைக் காப்பதில் அக்கறையும் பொறுப்பும் கொண்ட ஆட்சியை நடத்தி வருகின்ற காரணத்தால் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் பல மேற்கொள்ளப்பட்டிருந்தன. அத்துடன் சென்னை மாநகரத்தின் முக்கிய பகுதிகள் பலவற்றிலும் மழைநீர் வடிகால் பணிகள் நிறைவேற்றப்பட்டு, மற்ற இடங்களிலும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில்தான் மிக்ஜாம் புயலையும் கனமழையையும் எதிர்கொள்ள நேரிட்டது.

ஒரே நாளில் இடைவிடாமல் கொட்டித் தீர்த்த மழையின் அளவு 40 சென்ட்டி மீட்டருக்கு மேல் என்பதால் சென்னை கடந்த 50 ஆண்டுகளில் காணாத பேரிடரை எதிர்கொண்டது. டிசம்பர் 4-ஆம் நாள் முழுவதும் கனமழை பெய்த நிலையில், மறுநாள் (டிசம்பர் 5) அதிகாலைக்குள்ளாக ஏறத்தாழ பெரும்பாலான பகுதிகளில் வெள்ளநீர் வடிந்திருந்தது. அதற்கு காரணம், திராவிட மாடல் அரசின் மழைநீர் வடிகால் பணிகளும், மழை பெய்த நேரத்திலும் மாநகராட்சி மற்றும் அரசுத் துறை பணியாளர்களின் அயராத உழைப்பும்தான்.

2015-ஆம் ஆண்டு அ.தி.மு.க ஆட்சியில் செம்பரம்பாக்கம் ஏரியின் தண்ணீரை முறையான வகையில் திறக்காமல், ஒரே இரவில் அளவுக்கதிமாகத் திறந்துவிட்டு உருவாக்கப்பட்ட செயற்கை வெள்ளத்தின்போது சென்னைக்குள்ளேயே வாகனங்கள் வர முடியாத நிலை இருந்தது. ஆனால், மிக்ஜாம் புயல் சென்னையைக் கடந்த சில மணிநேரங்களிலேயே செங்கல்பட்டு முதல் சென்னை வரையிலான ஜி.எஸ்.டி. சாலையில் போக்குவரத்து சீரானது. பூந்தமல்லி நெடுஞ்சாலையிலும் சீரான நிலைதான். அதே நேரத்தில், சென்னைப் புறநகரின் ஏரிகள் சூழ்ந்த பகுதிகளிலும், கடல் மட்டத்துக்கு இணையான சென்னையின் தாழ்வான பகுதிகளிலும் மழை நீர் வெள்ளமாகத் தேங்கியிருந்ததை அறிந்து, அங்குள்ள மக்களுக்கு உதவிடவும், அவர்களை மீட்கவும், அந்தப் பகுதியில் வெள்ளநீரை வடியச் செய்து, இயல்பு நிலை திரும்பிடவும் அரசு இயந்திரங்கள் முழுமையான அளவில் தங்கள் பணிகளை மேற்கொண்டன.

சென்னை மற்றும் சுற்றுப்புற மாவட்ட மக்களுக்கு உதவிடும் வகையில் கழகத்தினர் கழகப் பணியாற்றிட வேண்டும் என்று உங்களில் ஒருவனான நான் விடுத்த வேண்டுகோளை ஏற்று, கழகத்தின் மாவட்டச் செயலாளர்கள், மாவட்ட நிர்வாகிகள், பகுதி - ஒன்றிய - நகர கழக அமைப்புகளின் நிர்வாகிகள், சட்டமன்ற - நாடாளுமன்ற உறுப்பினர்கள், உள்ளாட்சிப் பிரதிநிதிகள் உள்ளிட்டோர் தொடர்ந்து களப்பணியாற்றி மக்களுக்குத் தேவையான உணவு, மருந்து, உடை உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களை வழங்கினர்.

தண்ணீரை வெளியேற்றுவதற்கும், வெள்ளம் சூழ்ந்த பகுதிகளிலிருந்து மக்களை மீட்பதற்கும் கழக நிர்வாக அமைப்பினரும், சார்பு அணியினரும் முழுவீச்சில் பணியாற்றி, மக்களின் துயர் துடைத்தனர். மழை அளவையும் அதன் தாக்கத்தையும் கண்காணிப்பு அறைக்கு நேரில் சென்று அங்குள்ள அலுவலர்களிடமும், உதவிக்கான அழைப்பு விடுத்த பொதுமக்களிடமும் பேசிய உங்களில் ஒருவனான நான், என்னுடைய கொளத்தூர் தொகுதியில் தொடர்ச்சியாக நிவாரணப் பணிகளை மேற்கொண்டேன்.

அதுபோல, இளைஞரணிச் செயலாளரும் இளைஞர்நலன் - விளையாட்டு மேம்பாடு மற்றும் சிறப்புத் திட்டச் செயலாக்கத் துறை அமைச்சருமான தம்பி உதயநிதி தனது சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் கொட்டுகிற மழை நேரத்திலேயே வெள்ளநீரில் சென்று மக்களின் குறைகளைக் கேட்டறிந்ததுடன், நிவாரணப் பணிகளையும் நேரில் மேற்கொண்டார். கழக மருத்துவ அணிச் செயலாளரும் ஆயிரம் விளக்கு தொகுதியின் சட்டமன்ற உறுப்பினருமான டாக்டர் எழிலன் ஒவ்வொரு பகுதிக்கும் சென்று நிவாரணப் பணிகளை மேற்கொண்டார். சைதாப்பேட்டையிலும் தென்சென்னையின் மற்ற இடங்களிலும் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் அவர்களின் தலைமையில் கழகத்தினர் நிவாரணப் பணிகளில் முழுவீச்சாக ஈடுபட்டனர். துறைமுகம் தொகுதியிலும் வடசென்னையின் மற்ற பகுதிகளிலும் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு தலைமையில் பணிகள் விரைந்து நடைபெற்றன. சென்னை மாநகராட்சியின் மேயர் பிரியா அனைத்துப் பணிகளையும் ஒருங்கிணைத்து மேற்கொண்டார். ஆலந்தூர் தொகுதியிலும் காஞ்சி வடக்கு மாவட்டத்திலும் அமைச்சர் தா.மோ.அன்பரசன் தலைமையில் கழக நிர்வாகிகள் பணிகளை மேற்கொண்டனர்.

அண்ணாநகர், அம்பத்தூர், ஆர்.கே.நகர், ஆவடி, உத்திரமேரூர், எழும்பூர், காஞ்சிபுரம், கும்மிடிப்பூண்டி, செங்கல்பட்டு, சோழிங்கநல்லூர், தாம்பரம், தியாகராயநகர், திரு.வி.க.நகர், திருத்தணி, திருப்பெரும்புதூர், திருப்போரூர், திருவள்ளூர், திருவொற்றியூர், துறைமுகம், பல்லாவரம், பூந்தமல்லி, பெரம்பூர், பொன்னேரி, மதுரவாயல், மதுராந்தகம், மயிலாப்பூர், மாதவரம், ராயபுரம், விருகம்பாக்கம், வில்லிவாக்கம், வேளச்சேரி என சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களுக்குட்பட்ட தொகுதிகளில் மழை வெள்ளம் சூழ்ந்த பகுதிகளுக்கு நாடாளுமன்ற - சட்டமன்ற உறுப்பினர்களை நேரில் அனுப்பி பணிகளை விரைவுபடுத்தினேன். ஒவ்வொரு சட்டமன்ற உறுப்பினரிடமும் அலைபேசியில் தொடர்புகொண்டு நிலைமைகளைக் கேட்டறிந்தேன்.

மக்களின் அத்தியாவசியத் தேவைகளை உடனடியாக நிறைவேற்றிட சட்டமன்ற உறுப்பினர்களுடன் மேயர், சேர்மன், கவுன்சிலர் உள்ளிட்ட உள்ளாட்சிப் பிரதிநிதிகளும் களத்தில் நின்றனர். அவர்களுடன் கழகத்தினர் துணை நின்றனர்.

உங்களில் ஒருவனான என்னுடைய வழிகாட்டுதலில் கழகத்தின் தகவல் தொழில்நுட்ப அணிச் செயலாளரும் தொழில்-முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத்துறை அமைச்சருமான தம்பி டி.ஆர்.பி.ராஜா தலைமையில் ஐ.டி.விங் நிர்வாகிகள் வார் ரூம் அமைத்து, சமூக வலைத்தளங்கள் வாயிலாக வைக்கப்பட்ட கோரிக்கைகளைப் பரிசீலித்து, ஒவ்வொரு பகுதியிலும் மேற்கொள்ள வேண்டிய நிவாரணப் பணிகளையும், மீட்பு நடவடிக்கைகளையும் விரைந்து மேற்கொண்டனர்.

24X7 என்ற முறையில் பகல்-இரவு பாராது செயல்பட்ட இந்த வார் ரூமுக்கு உதவி கேட்டு வந்த மொத்த கோரிக்கைகள் 5 ஆயிரத்து 689 ஆகும். இதில் கர்ப்பிணிப் பெண்கள், அவசர சிகிச்சை வேண்டியோர், மாற்றுத்திறனாளிகளும் அடங்குவர். இவர்கள் உள்பட 4 ஆயிரத்து 266 கோரிக்கைகள் முழுமையாக நிறைவேற்றப்பட்டு, பாதிக்கப்பட்ட மக்களை மீட்டும் அவர்களுக்குத் தேவையான உதவிகளும் செய்யப்பட்டுள்ளன. மொத்த கோரிக்கைகளில் 74.9% அளவிற்கு நிறைவேற்றப்பட்டுள்ளன.

இதுபோலவே கழகத்தின் ஒவ்வொரு அணி சார்பிலும் உதவிக்கரம் நீண்ட காரணத்தால், சென்னை மற்றும் சுற்றுவட்டார மாவட்டங்களில் விரைந்து இயல்பு நிலை திரும்பியது. விமர்சனம் செய்வதற்கும் வீண்பழி சுமத்துவதற்கும் எதிர்க்கட்சிகள் முனைப்பு காட்டினாலும், மக்களின் துயர் துடைக்க அவர்கள் முன்வரவில்லை. எதிர்க்கட்சியாக இருந்தபோதும் திராவிட முன்னேற்றக் கழகம் 2015 வெள்ள பாதிப்பிலும், கொரோனா பேரிடரில் ஒன்றிணைவோம் வா என்ற பெயரிலும் மக்களின் துயரைத் துடைத்தது. ஆளுங்கட்சியாக இருக்கும்போதும் தி.மு.கழகத்தினர்தான் மிக்ஜாம் கனமழை வெள்ள பாதிப்பில் மக்களின் துயர் துடைக்கும் பணியில் ஈடுபட்டனர்.

ஒரு சில இடங்களில் தண்ணீர் தேங்கி நின்றது, மக்களின் கோரிக்கைகள் உடனடியாக செவி மடுக்கப்படாதது போன்ற தகவல்களையும் கவனித்து, அங்கும் நிவாரணப் பணிகளை மேற்கொள்ள ஆவன செய்தது உங்களில் ஒருவனான என்னுடைய தலைமையிலான திராவிட மாடல் அரசு. ஆட்சியை வழங்கிய மக்களிடம் பொறுப்புடன் நடந்துகொள்ளும் தன்மை கொண்டது இந்த அரசு. டி.வியில் பார்த்துதான் விவரம் தெரிந்துகொண்டேன் என்றோ, பங்களா வீட்டின் வாசலில் உள்ள பெரிய இரும்புக் கதவு திறக்கும் வரை காத்திருக்க வேண்டும் என்றோ முந்தைய ஆட்சியாளர்களின் நிலைமை இன்றில்லை. மக்கள் பிரதிநிதிகளை மக்கள் அணுகமுடியும், கேள்வி கேட்க முடியும், நிவாரணம் பெற முடியும் என்ற ஜனநாயகப்பூர்வமான அரசு செயல்பட்டு வருகிறது.

மிக்ஜாம் புயலின் பாதிப்புகளைப் பார்வையிட வந்த ஒன்றிய குழுவினரும், அரசியல் மாச்சரியமின்றி திராவிட மாடல் அரசின் பணிகளைப் பாராட்டியிருப்பது நம் உண்மையான உழைப்புக்கும் அக்கறையான செயல்பாடுகளுக்குமான சான்றிதழ் மட்டுமல்ல, அவதூறு பேசி அரசியல் செய்ய நினைப்பவர்களின் கன்னத்தில் விழுந்த பளார் அறை என்றால் மிகையல்ல.

பேரிடரிலும் அரசியல் செய்யும் குணம் படைத்தவர்களைப் பற்றிக் கவலைப்படாமல், மக்கள் நலன் காக்க சிந்தித்து செயல்படும் அரசு, 6000 ரூபாய் நிவாரணம் அறிவித்து, அதற்கானப் பணிகளை முன்னெடுத்துள்ளது. பேரிடரில் உயிர் இழந்தவர்களுக்கான நிவாரணம், மீனவர்களுக்கான வாழ்வாதாரம் உள்ளிட்ட அனைத்திலும் கவனம் செலுத்தி அவற்றுக்கான தொகை உயர்த்தப்பட்டுள்ளது.

திராவிட மாடல் அரசின் பணிகளை பிற மாநிலங்கள் கவனிக்கின்றன. திராவிட மாடல் அரசின் திட்டங்களை மற்ற மாநிலங்கள் பின்பற்றுகின்றன. இந்தியாவுக்கு வழிகாட்டும் வகையில் திராவிட மாடல் அரசின் செயல்பாடுகள் தொடரும் நிலையில், திராவிட முன்னேற்றக் கழகத்தின் அரசியல் கொள்கையான பேரறிஞர் அண்ணாவும் முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களும் முன்னிறுத்திய மாநில உரிமைகள் காக்கப்படவேண்டும். முந்தைய அடிமை ஆட்சியாளர்களால் பறிபோன மாநில உரிமைகளை மீட்டாக வேண்டும். தமிழ்நாட்டு மக்களுக்கும், பிற மாநில மக்களுக்கும் உரிமைகள் கிடைத்திட 2024 நாடாளுமன்றத் தேர்தல் வெற்றிக்களமாக நிச்சயம் அமைந்திடும். அந்தக் களத்தை நோக்கி நம்மை ஆயத்தப்படுத்திட, சேலத்தில் தம்பி உதயநிதி தலைமையில் இளைஞரணியின் இரண்டாவது மாநில மாநாடு, மாநில உரிமை மீட்பு முழக்கத்துடன் டிசம்பர் 24 அன்று நடைபெறுகிறது.

பேரிடரிலிருந்து மீண்ட மக்களின் மகிழ்வான மனநிலை தொடர்ந்திட கண்டு, நம்முடைய பொறுப்புகளை உணர்ந்து, சேலத்தில் சந்திப்போம்! களம் எதுவாயிலும் கலங்காது நிற்போம்! இளைஞரணி மாநாடு வெல்லட்டும்! அடுத்தடுத்த வெற்றிகளுக்கு அடித்தளமாகட்டும்” என்று முதல்வர் தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

10 hours ago

மேலும்