‘காசி தமிழ் சங்கமம்’ பெயரில் சென்னை வழியாக புதிய வாராந்திர ரயில்: தெற்கு ரயில்வே அறிவிப்பு

By செய்திப்பிரிவு

சென்னை: ‘காசி தமிழ் சங்கமம்’ என்ற பெயரில், கன்னியாகுமரியில் இருந்து சென்னை பெரம்பூர் வழியாக பனாரஸுக்கு புதிய வாராந்திர விரைவு ரயில் டிச.28-ம் தேதி முதல் இயக்கப்படும் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

கலாச்சார மையங்களாக திகழும் வாராணசிக்கும், தமிழகத்துக்கும் இடையேயான பிணைப்பைப் புதுப்பிக்கும் வகையில், காசி தமிழ் சங்கமத்தின் முதல்கட்ட நிகழ்வு கடந்த ஆண்டு தொடங்கியது. இது தமிழக மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில், ‘காசி தமிழ் சங்கமம்’ பெயரில் கன்னியாகுமரியில் இருந்து மதுரை, திருச்சி, விழுப்புரம், சென்னை பெரம்பூர் வழியாக பனாரஸுக்கு புதிய வாராந்திர ரயில் டிச.28-ம் தேதி முதல் இயக்கப்பட உள்ளது. இதை முன்னிட்டு, சிறப்பு ரயிலாக இன்று (டிச.17) கன்னியாகுமரியில் இருந்து மாலை 5:30 மணிக்கு புறப்பட்டு, 3-வது நாள் இரவு 11:35 மணிக்கு பனாரஸ் செல்கிறது. இந்த ரயில் சேவையை பிரதமர் மோடி தொடங்கி வைப்பார் என கூறப்படுகிறது.

தஞ்சாவூர் வழியாக இயக்கம்: அதைத்தொடர்ந்து, கன்னியாகுமரியில் இருந்து வரும் 28-ம் தேதி (வியாழக்கிழமைகளில்) புறப்பட்டு செல்லும். அதேபோல், பனாரஸில் இருந்து வாரந்தோறும் ஞாயிற்றுக்கிழமைகளில் புறப்படும். இந்த ரயில் திருநெல்வேலி, மதுரை, திருச்சிராப்பள்ளி, தஞ்சாவூர், கும்பகோணம், விழுப்புரம், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், அரக்கோணம், சென்னை பெரம்பூர்,நெல்லூர் வழியாக இயக்கப்பட உள்ளது.

முன்பதிவு தொடக்கம்: இதுகுறித்து, தெற்கு ரயில்வே கூறியதாவது.. தமிழகத்தில் முக்கிய ஆன்மிகக் கோயில் நகரங்கள் வழியாக பனாரஸுக்கு செல்லும் வகையில், இந்த புதிய வாராந்திர சிறப்பு ரயிலை இயக்க ரயில்வே நிர்வாகம் முடிவு செய்துள்ளது. அதன்படி, வரும் 28-ம் தேதி முதல் காலஅட்டவணைப்படி இயக்கப்படும். இந்த ரயில்களுக்கான டிக்கெட் முன்பதிவு தொடங்கிவிட்டது. இவ்வாறு அவர்கள் கூறினர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE