காய்ச்சல் பரவும் விவகாரத்தில் தமிழக அரசிடம் வெளிப்படைத் தன்மை இல்லை: சி.விஜயபாஸ்கர் குற்றச்சாட்டு

By செய்திப்பிரிவு

புதுக்கோட்டை: காய்ச்சல் பரவும் விவகாரத்தில்திமுக அரசிடம் வெளிப்படைத்தன்மை இல்லை என முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர் குற்றம்சாட்டினார்.

புதுக்கோட்டையில் செய்தியாளர்களிடம் அவர் நேற்று கூறியதாவது: தமிழகத்தில் காய்ச்சல், சளி, உடல் சோர்வு, உடல் வலியால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

இந்த காய்ச்சல், டெங்குவா, மலேரியாவா, சிக்குன்குனியாவா அல்லது கரோனாவா என்பதை வல்லுநர்கள் மூலம் ஆய்வுசெய்து, பொதுமக்களுக்கு தமிழக அரசு விளக்க வேண்டும்.

காய்ச்சலுக்குரிய மருந்து, மாத்திரைகள் கொடுத்தும், பலருக்கும் காய்ச்சல் குணமாகவில்லை.காய்ச்சல் அறிகுறியுடன் வருவோருக்கு மருத்துவமனைகளில் ஏன் பரிசோதனை செய்ய மறுக்க வேண்டும்? எந்த வகையான காய்ச்சல் என்று பரிசோதித்து சொல்ல வேண்டியது அரசின் கடமை. கேரளாவில் கரோனா தொற்றால் பலர் பாதிக்கப்பட்டு வருகின்றனர். அமெரிக்கா, சிங்கப்பூர், மலேசியா போன்ற நாடுகளிலும் கரோனா தொற்று பரவுகிறது.

ஒமிக்ரான் புதிய வகை தொற்றான ஜேஎன் 1 பரவி வருவதாகவும் தகவல் இருக்கிறது. இது தமிழகத்தில் இருக்கிறதா, இல்லையா? இதைத் தடுக்க தமிழக அரசு என்ன செய்யப்போகிறது என்பதை விளக்க வேண்டும்.

மேலும், பன்றிக் காய்ச்சல், டெங்கு காய்ச்சல் பரவலை திமுகஅரசு மறைக்கிறது. எனவே, விமானநிலையங்களிலும், அண்டை மாநில எல்லைகளிலும் பரிசோதனை மேற்கொள்ளப்படுவதை கட்டாயமாக்க வேண்டும். காய்ச்சல் பரவும் விவகாரத்தில் திமுக அரசிடம் வெளிப்படைத் தன்மை இல்லை. எதையும் மறைக்காமல் நடந்து கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE