“ஒன்றுபடாத, உருப்படாத கூட்டணி” - ‘இண்டியா’ அணி மீது எல்.முருகன் விமர்சனம்

By அ.முன்னடியான்

புதுச்சேரி: “இண்டியா கூட்டணி தலைவர்களுக்குள் ஒற்றுமை இல்லை. ஒன்றுபடாத கூட்டணி, உருப்படாத கூட்டணி அது” என்று மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் விமர்சித்துள்ளார்.

விக்சித் பாரத் சங்கல்ப் யாத்ரா நிகழ்ச்சி புதுச்சேரி இசிஆர் சாலையில் உள்ள காமராஜர் மணிமண்டபத்தில் இன்று நடைபெற்றது. இதில் மத்திய இணை அமைச்சர் எல். முருகன், முதல்வர் ரங்கசாமி, சட்டப்பேரவைத் தலைவர் செல்வம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சிக்குப் பின்னர் மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் கூறியது: பிரதமர் நரேந்திர மோடி கடந்த நவம்பர் 15-ம் தேதி ஜார்க்கண்ட் மாநிலம் ராஞ்சியில் ‘வளர்ந்த பாரதம்’ 2047 உறுதிமொழி யாத்திரையை தொடங்கி வைத்தார். அன்று முதல் நாடு முழுவதும் அனைத்து கிராமங்களுக்கும் மோடியின் உத்தரவாத வாகனம் சென்று மத்திய அரசின் திட்டங்களில் பயன்பெற்றவர்களுடன் கலந்துரையாடுவது, புதிய பயனாளிகள் பதிவு செய்வது என விளக்கி வருகிறது.

2047-ல் உலகத்துக்கு வழிகாட்டியாகவும், உலகத்தை ஆளும் வல்லரசு நாடாகவும் இந்தியா இருப்பதற்கு இந்த உத்தரவாத வாகன யாத்திரை தொடங்கப்பட்டிருக்கிறது. அடுத்த 25 ஆண்டுகளை நோக்கி இப்பொழுதே அடியெடுத்து வைத்துள்ளோம். திட்டங்களை தொடங்கி இருக்கின்றோம். ஒவ்வொரு குடிமகனும் முற்றிலும் காலனித்துவ மனோபாவத்தை விட்டுவிட்டு தன்னுடைய கடமையுடன் சேவையை செய்ய வேண்டும். இந்த வாகனம் தமிழகத்தில் 12 ஆயிரம் கிராமங்களுக்கும், புதுச்சேரியில் அத்தனை கிராமங்களுக்கும் சென்று கொண்டிருக்கிறது. மிக்ஜாம் புயல் மழை வெள்ளம் குறித்து நான் அரசியல் செய்ய விரும்பவில்லை. மழை விட்டு 10 நாட்கள் ஆகிறது. இன்னும் சென்னை புறநகர் உள்ளிட்ட பகுதிகளில் மழை வெள்ளம் வடியாமல் இருக்கிறது. எனவே, தமிழக அரசு புறநகர் பகுதிகளில் வேலையை துரிதப்படுத்தி பணிகளை செய்ய வேண்டும்.

இண்டியா கூட்டணி ஏற்கெனவே உடைந்துபோன கூட்டணியாக இருக்கிறது. காங்கிரஸ் - கம்யூனிஸ்ட்களும் இணைந்து கேரளாவில் போட்டியிடுவார்களா? மம்தா பானர்ஜி, காங்கிரஸ், கம்யூனிஸ்ட்கள் இணைந்து மேற்கு வங்கத்தில் போட்டியிடுவார்களா? ஆம் ஆத்மி - காங்கிரஸ் இணைந்து டெல்லியில் தேர்தலை சந்திப்பார்களா? இப்போதே கேஜ்ரிவால் எங்கிருக்கிறார் என்று தெரியவில்லை.

அகிலேஷ் யாதவ் கூட்டணியில் இடம் கொடுக்கவில்லை என்று தனது அதிருப்தியை தெரிவித்திருக்கிறார். விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் எப்போது இந்தக் கூட்டணியில் இருந்து வெளியே வரலாம் என்று காத்துக்கொண்டிருக்கிறார். இந்தக் கூட்டணி பேச்சுவார்த்தைகள் தொடங்குவதற்கு முன்பே உடைந்துவிட்டது. அதனால் தான் அவர்களின் கூட்டத்தைக் கூட நடத்த முடியவில்லை. தலைவர்களுக்குள் ஒற்றுமை இல்லை. ஒன்றுபடாத கூட்டணி, உருப்படாத கூட்டணி. ஏற்கெனவே புதுச்சேரியில் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி இருந்து கொண்டிருக்கிறது. கூட்டணி கட்சியிடன் எங்களது தேர்தல் வேலையை இங்கு தொடங்கி இருக்கின்றோம்.

மீனவர்கள் பிரச்சினை அண்ணன், தம்பி பிரச்சினை இல்லை. இரண்டு நாடுகளுக்கு இடையிலான பிரச்சினை. மீனவர்கள் ஆழ்கடலுக்கு சென்று மீன்படிப்பதை ஊக்குவிக்கின்றோம். எல்லை தாண்டாமல் இருக்க மீனவர்களின் படகுகளில் ஜிபிஎஸ் கருவி பொருத்தியுள்ளோம். ஒரு லட்சம் மீனவ படகுகளுக்கு சேட்லைட் போன் வசதியை செய்து கொண்டிருக்கின்றோம். மீனவர்கள் எல்லை தாண்டும் போது கைது செய்யப்படுகின்றனர். அரசு உடனடியாக தலையிட்டு மீட்டு கொண்டு வருகிறது. இதனை முழுமையாக நிறுத்துவதற்கு ஒரே வழி இரண்டு நாடுகளுக்கும் இடையே சுமூக பேச்சுவார்த்தை நடக்க வேண்டும்.இரண்டு நாட்டு மீனவர் குழுவினர் கூட்டம் நடைபெற வேண்டும். அந்த கூட்டம் இரு நாடுகளிலும் இருக்கின்ற சூழல் காரணமாக தள்ளிப்போகிறது” என்றார்.

அவரிடம் புயல் நிவாரண நிதி தொடர்பாக மத்திய அமைச்சர், புதுச்சேரி ஆளுநர் குறித்து அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்த கருத்து தொடர்பாக செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த எல்.முருகன், “ஓர் அமைச்சர் மக்கள் தலைவராக இருந்து, மக்கள் மூலமாக வந்திருந்தால் அதுபோன்று பேசியிருக்க மாட்டார். ஒரு குடும்பத்தின் மூலம் இருந்து வந்ததால்தான் அவர் அப்படி பேசுகிறார்.

2ஜி ஊழலில் இருந்த பணத்தை யாரேனும் கொண்டு வந்து போட சொன்னார்களா? ஆற்று மணலில் ஊழல் என்று சொல்கிறார்கள். அவர்களுடைய நிதியமைச்சரே அவரது குடும்பத்தின் மேல் ஒரு ஊழல் குற்றச்சாட்டை சுமர்த்தியிருந்தார். அந்த ஊழல் பணத்தை கொண்டு வந்து செலவு செய்ய சொன்னார்களா? ஆகவே அமைச்சர் ஒரு பொறுப்புடன் நடந்து கொள்ள வேண்டும்.பொறுப்புடன் இந்த சூழ்நிலையை கையால்வதை விட்டுவிட்டு இவ்வாறு பேசக்கூடாது. ஒரு கும்பத்தின் மூலமாக வந்ததால் அவரது எண்ணம், செயல், நடவடிக்கைகள் குடும்பத்தையொட்டியே இருப்பதையே காட்டுகிறது” என்று கூறினார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE