குமரியில் பொதுப்பாதை ஆக்கிரமிப்புக்கு உதவிய காவல் ஆய்வாளர், சார்பு ஆய்வாளர் இடமாற்றம்: ஐகோர்ட் உத்தரவு 

By கி.மகாராஜன் 


மதுரை: குமரியில் பொதுப்பாதை ஆக்கிரமிப்புக்கு உதவிய காவல் ஆய்வாளர், சார்பு ஆய்வாளரை இடமாற்றம் செய்யவும், வழக்கறிஞர்கள் மீது பார் கவுன்சிலில் புகார் அளிக்கவும் உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

குமரி மாவட்டம் பாலப்பள்ளத்தைச் சேர்ந்த ஹெல்டன் செல்வகுமார், ஜேக்கப் என்ற ஜேக்கப் செல்வராஜன் உட்பட 21 பேர் உயர் நீதிமன்ற கிளையில் தாக்கல் செய்த மனு: பாலப்பள்ளத்தில் கருங்கல்லில் இருந்து குளச்சல் பிரதான சாலைக்கு செல்லும் பாதையை கருங்கல் காவல் ஆய்வாளர் இசக்கிதுரை, சார்பு ஆய்வாளர் மகேஷ் மற்றும் இரணியல் வழக்கறிஞர்கள் சிலர் உதவியுடன் அபிராஜஸ்பிரத், அமிர்த்ஜார்ஜ் ஆகியோர் ஆக்கிரமித்து 9 அடிக்கு சுற்றுச்சுவர் கட்டியுள்ளனர். எங்களுக்கு கருங்கல்லில் இருந்து குளச்சல் பிரதான சாலைக்கு செல்வதற்கு வேறு பாதை இல்லை. சுற்றுச்சுவரால் எங்களால் பிரதான சாலைக்கு செல்ல முடியவில்லை. எனவே, கருங்கல் - குளச்சல் சாலையில் சட்டவிரோதமாக கட்டப்பட்டுள்ள சுவரை அகற்றி, ஆக்கிரமிப்புக்கு உதவிய போலீஸார், வழக்கறிஞர்கள் மீது நடவடிக்கை எடுக்கவும், ரூ.25 லட்சம் இழப்பீடு வழங்கவும் உத்தரவிட வேண்டும் என்று மனுவில் கூறப்பட்டிருந்தது.

இந்த மனுவை விசாரித்து நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம், வி.லெட்சுமிநாராயணன் அமர்வு பிறப்பித்த உத்தரவு: கருங்கல்- குளச்சல் மெயின் ரோட்டில் இருந்து மனுதாரர்கள் தங்கள் குடியிருப்புகளுக்கு செல்ல 9 அடி பாதை இருந்தது உறுதி செய்யப்படுகிறது. அந்தப் பாதையை அதிகாரிகள் பாதுகாக்க வேண்டும். இதனால் அந்தப்பாதையை மனுதாரர்களின் பயன்பாட்டுக்காக திறக்க வேண்டும்.

இது தொடர்பான உரிமையியல் வழக்கில் இறுதி முடிவு எட்டப்படும் வரை அந்தப்பாதையை மனுதாரர்கள் பயன்படுத்த யாரும் இடையூறு ஏற்படுத்தக்கூடாது. இடையூறு ஏற்படுத்துவதாக புகார் வந்தால் போலீஸார் சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த வழக்கில் கருங்கல் காவல் ஆய்வாளர், உதவி ஆய்வாளர் மற்றும் இரணியல் வழக்கறிஞர்கள் சிலர் தொழில் தர்மத்துக்கு விரோதமாக தனிப்பட்ட பிரச்சினையில் தேவையில்லாமல் தலையிட்டதை ஏற்க முடியாது.

கருங்கல் காவல் ஆய்வாளர், சார்பு ஆய்வாளர்கள் தொடர்ந்து கருங்கல் காவல் நிலையத்தில் பணிபுரிந்தால் சிக்கல் ஏற்படும். எனவே அவர்களை வேறு காவல் நிலையங்களுக்கு இடமாற்றம் செய்ய வேண்டும். அவர்களின் செயல்பாடுகளை 6 மாதங்களுக்கு குமரி எஸ்பி கண்காணிக்க வேண்டும். வழக்கறிஞர்கள் மீது மனுதாரர்கள் தமிழ்நாடு, புதுச்சேரி பார் கவுன்சிலில் புகார் அளிக்கலாம். அவ்வாறு புகார் அளிக்கும்பட்சத்தில் பார் கவுன்சில் சட்டப்படி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நீதிபதிகள் உத்தரவில் கூறியுள்ளனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE