அம்பத்தூர் தொழிற்பேட்டைக்குள் மழைநீர், துயரில் நிறுவனங்கள்: 1000+ பேர் வேலை இழக்கும் அபாயம்

By துரை விஜயராஜ்

சென்னை: மிக்ஜாம் புயல் பாதிப்பால் தவித்த மக்களை காப்பதற்காக கவனம் செலுத்திய அரசு,நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு முக்கிய பங்குவகிக்கும் குறு, சிறு, நடுத்தர தொழில் நிறுவனங்களை கைவிட்டு விட்டார்கள் என சென்னை அம்பத்தூர் தொழிற்பேட்டையில் உள்ள குறு, சிறு, நடுத்தர தொழில் நிறுவனங்களின் உரிமையாளர்கள் ஆதங்கம் தெரிவிக்கின்றனர். ‘‘நம் நாட்டின் முதுகெலும்பு விவசாயமாக இருந்தாலும், பொருளாதாரத்தின் முதுகெலும்பு நிச்சயமாக சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்களாகத்தான் இருக்க முடியும். புயலால் பாதிக்கப்பட்ட தொழிற் நிறுவனங்கள் மீண்டு எழுந்து வருவதற்கு பெருந்தொகையை செலவிட வேண்டும்’’ என உரிமையாளர்கள் வேதனையுடன் தெரிவிக்கின்றனர்.

மழைக் காலத்தின்போது, அம்பத்தூர் ஏரி முழுவதும் நிரம்பினால், அங்கிருந்து திறந்து விடப்படும் உபரி நீர், அம்பத்தூர் தொழிற்பேட்டை வழியாக அமைக்கப்பட்டிருக்கும் கால்வாய் மூலமாக கொரட்டூர் ஏரியில் நிரம்புகிறது. இந்நிலையில், மிக்ஜாம் புயலால், அம்பத்தூர் ஏரி முழுவதுமாக நிரம்பி, ஏரியில் இருந்து வெளியேற்றப்பட்ட உபரி நீர், அம்பத்தூர் தொழிற்பேட்டை கால்வாய் வழியாக அதிகளவில் வெளியேறியதால், வெள்ள நீர் தொழிற்பேட்டையில் உள்ள நிறுவனங்களுக்குள் புகுந்தது. குறிப்பாக, அம்பத்தூர் தொழிற்பேட்டை வடக்கு பகுதியில் செக்டார் 3-ல் உள்ள 1-வது குறுக்கு பிரதான சாலையில் முதல் தெரு, 2-வது தெரு, 3-வது தெரு, பட்டரவாக்கம் ரயில் நிலையம் அருகில் உள்ள அனைத்து நிறுவனங்களுக்கும் 5 அடி வரை மழை நீர் புகுந்து பெரும் பாதிப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

நிறுவனங்களுக்குள் புகுந்த மழைநீரை வெளியேற்றும் ஊழியர்கள்.

வெள்ள நீர் நிறுவனங்களுக்குள் புகாமல் இருப்பதற்கு மணல் மூட்டைகளை கொண்டு வாசலில் அடைத்து வைத்துள்ளனர். ஆனாலும் கூட அம்பத்தூர் தொழிற்பேட்டையில் உள்ள 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட குறு, சிறு, நடுத்தர தொழில் நிறுவனங்களுக்குள் மழை நீர் புகுந்து பெரும் இழப்பை ஏற்படுத்தி இருக்கிறது. 3 நாட்களாக அங்கு வெள்ளம் வடியவில்லை என்றும், வெள்ள நீரை வெளியேற்ற அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும் நிறுவனங்களின் உரிமையாளர்கள் குற்றம்சாட்டுகின்றனர். தற்போது, வரை பல இடங்களில், நிறுவனங்களுக்குள் புகுந்துள்ள வெள்ள நீரை, சிறிய மோட்டார் பம்புகள் மூலம் ஊழியர்கள் வெளியேற்றினர்.

மழை வெள்ள பாதிப்பால், 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட நிறுவனங்களில் விலை உயர்ந்த இயந்திரங்கள் பழுதாகி உள்ளன. இதனால், உற்பத்தி நின்றுள்ளது. உற்பத்தி நின்றுள்ளதால், வாடிக்கையாளார்களுக்கு குறிப்பிட்ட நேரத்தில் உற்பத்தி பொருட்களை வழங்க முடியாமல் நிறுவனங்கள் தவித்து வருகின்றன. மேலும், இந்த இழப்பால், ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஊழியர்கள் வேலையிழக்கும் அபாயமும் உள்ளதாகவும், அவர்களுக்கு ஊதியம் வழங்குவதில்சிக்கல் ஏற்பட்டுள்ளதாகவும் உரிமையாளர்கள் தெரிவிக்கின்றனர்.

அரசின் மாற்று திட்டம்: இந்நிலையில், அம்பத்தூர் ஏரியில் இருந்து வெளியேறும் உபரி நீர், தொழிற்பேட்டைக்குள் வராமல், தனியாக கால்வாய் அமைத்து கூவம், அல்லது கொசஸ்தலை ஆற்றில் கலப்பதற்கு தமிழக அரசு திட்டமிட்டு வருகிறது. அதன்படி, ஆவின் டைரி சாலை பகுதியில் ரயில்வேக்கு சொந்தமான இடத்தில் கால்வாய் விரிவுபடுத்தப்பட்டு கொரட்டூர் ஏரியில் கலப்பதற்கு திட்டமிட்டு வருவதாகவும், இதற்காக தமிழக அரசு சார்பில் குழு அமைக்கப்பட்டு, ரயில்வே துறையிடம் ஒப்புதல் கேட்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில், இதுகுறித்து அம்பத்தூர் தொழிற்பேட்டை உற்பத்தியாளர்கள் சங்கத்தின் தலைவர் ஜி.அரவிந்த் கூறும்போது, அம்பத்தூர் தொழிற்பேட்டை வடக்கு பகுதியில் 4 முதல் 5 அடி வரை தண்ணீர் புகுந்துவிட்டது.

அம்பத்தூர் தொழிற்பேட்டையில் உள்ள நிறுவனங்களுக்குள் புகுந்த
மழைநீரில் மூழ்கி பழுதான இயந்திரங்கள்.

இதனால் தொழிற் நிறுவனங்கள் அனைத்தும் பாதிக்கப்பட்டுள்ளன. இதற்கு காரணம், அம்பத்தூர் ஏரி உபரி நீர் செல்லும் கால்வாய் தொழிற்பேட்டை வழியாக செல்வதுதான். மொத்தமாக அதில் 600 கனஅடி தண்ணீர் வருகிறது. ஆனால், 200 கனஅடி தண்ணீர் செல்லும் அளவுக்குதான் கால்வாய் இருக்கிறது. எனவேதான் தண்ணீர் தொழிற் நிறுவனங்களுக்குள் புகும் நிலை ஏற்பட்டிருக்கிறது. சுமார் 60 ஆண்டுகளாக இதே நிலைதான் தொழிற்பேட்டையில் நிலவுகிறது. ஒவ்வொரு ஆண்டும் தொழிற்பேட்டையில் வெள்ள பாதிப்பு ஏற்படத்தான் செய்கிறது. ஆனால், இந்த ஆண்டு தான் பாதிப்பு அதிகமாக இருக்கிறது. 2015-ம் ஆண்டு வெள்ளப்பாதிப்பின் போதே பல நிறுவனங்கள், தரை தளத்தில் இருந்து உயரத்தை அதிகரித்திருந்தன. ஆனாலும், இந்த ஆண்டு, அந்த உயரத்தையும் தாண்டி தண்ணீர் உள்ளே புகுந்துள்ளது. இதனால், அம்பத்தூர் தொழிற்பேட்டையில் உற்பத்தி, மூலப்பொருட்கள் பாதிப்பால் சுமார் ரூ.2 ஆயிரம் கோடி நஷ்டம் ஏற்பட்டுள்ளது.

காப்பீடு நிறுவனங்கள், பாதிக்கப்பட்ட நிறுவனங்களில் வந்து சேதாரத்தை ஆய்வு செய்ய தாமதம் ஆகிறது. காப்பீடு நிறுவனங்கள் ஆய்வு செய்து, அதன் பிறகுதான் இயந்திரங்களை பழுது பார்க்க அனுப்புவார்கள். இதனால் இந்த பாதிப்பில் இருந்து தொழிற் நிறுவனங்கள் மீண்டு வருவதற்கு குறைந்தது 2 மாதங்களாவது ஆகும். கரோனா காலத்தில் கூட உற்பத்திதான் பாதிக்கப்பட்டது. ஆனால், இப்போது, மூலதனமே பாதிக்கப்பட்டுள்ளது. இயந்திரங்கள் இயங்கினால்தானே உற்பத்தி வரும். அப்போது தானே ஊழியர்களுக்கு ஊதியம் வழங்க முடியும். தற்போதைய சூழ்நிலையில், நிறுவனங்கள் பாதிக்கப்பட்டுள்ளதால், குறைந்தபட்ச மின்சார கட்டணத்தை ஒராண்டுக்கு தமிழக அரசு குறைத்து நிர்ணயிக்க வேண்டும்.

மேலும், அம்பத்தூர் தொழிற்பேட்டையில் மழை காலங்களில் உற்பத்தி பாதிக்கப்படுவதால், நாங்கள் எங்களது வாடிக்கையாளர்களை இழக்கும் நிலைக்கும் தள்ளப்படுகிறோம். இதனால், நிறுவனங்களை மூடும் நிலைக்கும் ஆளாகிறோம். எனவே, தமிழக அரசு தேவையான நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்றார். டெல்டா கண்ட்ரோல் சிஸ்டம் நிறுவன உரிமையாளர் பாலசந்திரன் கூறும்போது, ‘அம்பத்தூர் தொழிற்பேட்டையில் தெற்கு பகுதியைவிட வடக்கு பகுதிதான் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது. சாலையில் தண்ணீர், வீடுகளுக்குள் தண்ணீர் சென்றால் மக்கள் அதனை சுலபமாக அகற்றி சுத்தம் செய்துவிடுவார்கள்.

ஆனால், நிறுவனங்களுக்குள் தண்ணீர் புகுந்துவிட்டால், இயந்திரங்களை இயக்க முடியாமல், மாதக்கணக்கில் உற்பத்தியே முடங்கிவிடும். இதனால், எங்களின் வாழ்வாதாரம் மட்டுமல்லாமல், எங்களை நம்பி இருக்கும் தொழிலாளர்களின் வாழ்வாதாரமும் பாதிக்கப்படுகிறது. வெள்ளநீர் நிறுவனங்களுக்குள் உள்ளே புகுந்ததால், இயந்திரங்கள் அனைத்தும் பழுதாகிவிட்டன. ஒவ்வொரு இயந்திரத்தின் விலையும் ரூ.40 முதல் ரூ.50 லட்சம் வரையில் இருக்கிறது. இதனால், ஒவ்வொரு நிறுவனங்களுக்கும் கோடிக் கணக்கில் நஷ்டம் ஏற்பட்டுள்ளது’ என்றார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE