புயல், வெள்ளத்தில் வாழ்வாதாரம் இழந்த இயற்கை நார் நெசவாளர்கள்: உதவிக்கரம் நீட்டுமா அரசு?

By பெ.ஜேம்ஸ்குமார்


அனகாபுத்தூர்: சென்னை அருகே பல்லாவரத்தை அடுத்த அனகாபுத்தூரில் இயற்கை நார் நெசவு குழுமம் இயங்கி வருகிறது. இக்குழுமத்தினர் கற்றாழை, வாழை, மூங்கில் உள்ளிட்ட இயற்கை நார்களைக் கொண்டு புடவை, பேன்ட், சட்டை மற்றும் கைவினைப் பொருட்களை உற்பத்தி செய்து வருகின்றனர். இங்கு உற்பத்தி செய்யப்படும் பொருட்கள், ஆன்லைன் மூலமாக வெளிநாடுகளிலும் விற்பனை செய்யப்படுகின்றன. மேலும், கண்காட்சி போன்ற இடங்களிலும் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன.

சென்னை அருகே பல்லாவரத்தைஅடுத்த அனகாபுத்தூரில் மழை வெள்ளத்தில்
சேதமடைந்த இயற்கை நார் நெசவு பொருட்கள்.
படங்கள்: எம். முத்துகணேஷ்

இந்நிலையில் மிக்ஜாம் புயல் பாதிப்பால், அனகாபுத்தூர் குடியிருப்புகளில் வெள்ளம் புகுந்தது. இதில், வீடுகளில் இருந்த பொருட்கள் நாசமாகின. அதில் கற்றாழை, மூங்கில், வாழை நார்கள், புடவை, கைவினைப் பொருட்கள், நூல் என சுமார் ரூ.15 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் தண்ணீரில் நனைந்து பாழாகிவிட்டன. இதனால்தமிழக அரசு அனகாபுத்துார் இயற்கை நார் நெசவாளர்களுக்கு நிவாரணம் வழங்க முன்வர வேண்டும் என்று நெசவாளர்கள் சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து அனகாபுத்தூர் இயற்கை நார் நெசவு குழுமத்தின் தலைவர் சி.சேகர் கூறியதாவது: இயற்கை நார் நெசவு குழுமத்தில் 60 குடும்பங்கள் இருக்கின்றன. மழை வெள்ளத்தில் 60 குடும்பங்களும் கடுமையாகப்பாதிக்கப்பட்டுள்ளோம். அனைத்துபொருட்களும் வெள்ளத்தில் வீணாகிவிட்டன. எங்களுக்கு மாற்றுஇடம் கேட்டு ஆட்சியரிடம்கோரிக்கை வைத்தோம். ஆனால் பலன் இல்லை.கிறிஸ்துமஸ், புதுவருடம்,பொங்கல் பண்டிகைக்காக ஏராளமான ஆர்டர்கள் வந்துள்ளன.

ஆனால் வெள்ளத்தில் அனைத்தும் வீணானதால் என்ன செய்வது எனத் தெரியவில்லை. அரசு எங்கள் மீது கருணை வைத்து மீண்டும் தொழில் தொடங்க உதவி செய்ய வேண்டும். நிரந்தரமாகத் தொழிற்கூடம் அமைக்க இடம் ஒதுக்கீடு செய்ய வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE