வேலூரில் விக்டோரியா மகாராணி நினைவுத் தூண் பகுதி சீரமைப்பு

By செய்திப்பிரிவு

வேலூர்: ‘இந்து தமிழ் திசை’ செய்தி எதிரொலியாக வேலூர் அண்ணா சாலையில் உள்ள விக்டோரியா மகாராணியின் நினைவுத்தூண் பகுதியில் வளர்ந்திருந்த புதர்களை நினைவுத்தூண் பராமரிப்பு பணியை ஏற்றிருந்த தனியார் பொறியியல் கல்லூரி நிர்வாகம் சீரமைத்துள்ளது. வேலூர் அண்ணா சாலையில் தெற்கு காவல் நிலையம் எதிரே சுமார் 135 ஆண்டுகள் பழமையான விக்டோரியா மகாராணி பொன்விழா நினைவுத்தூண் உள்ளது.

இந்தியாவை ஆட்சி செய்த பிரிட்டன் நாட்டின் அரசியாக நீண்ட காலம் ஆட்சி செய்த விக்டோரியா மகாராணியின் 50-வது ஆட்சியாண்டின் நினைவாக இந்த நினைவுத்தூண் அமைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. வேலூர் மாநகராட்சி பராமரிப்பில் இருந்த இந்த நினைவுத்தூண் பராமரிப்பு பணியை தனியார் பொறியியல் கல்லூரி நிர்வாகம் கவனித்து வந்தது. செயற்கை நிரூற்று, இரவில் மின்னொளி விளக்கு வெளிச்சம் என பார்க்கவே அழகாக இருந்த விக்டோரியா மகாராணி நூற்றாண்டு நினைவுத்தூண் கடந்த சில மாதங்களாக பராமரிப்பு இல்லாமல் இருந்தது.

இது தொடர்பாக கடந்த 5-ம் தேதி ‘இந்து தமிழ் திசை’ நாளிதழில் படத்துடன் செய்தி வெளியானது. மேலும், விக்டோரியா நினைவுத்தூண் அருகில் விரைவில் மாநகராட்சி சார்பில் ரூ.14 லட்சம் மதிப்பில் ‘செல்பி பாயின்ட்’ அமைக்க இருப்பதால் சீரமைப்பு பணி மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்படும் என மாநகராட்சி நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப் பட்டது. இதற்கிடையில், விக்டோரியா மகாராணியின் நினைவுத்தூண் பராமரிப்பு பணியை ஏற்றிருந்த தனியார் பொறியியல் கல்லூரி நிர்வாகம் விக்டோரியா நினைவுத்தூண் பகுதியில் படர்ந்திருந்த புதர்களை அகற்றி சீரமைத்துள்ளன. மேலும், நினைவுத் தூணில் வளர்ந்திருந்த செடிகளையும் அகற்றியுள்ளனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE