“நம்பியவர்களே விஜயகாந்த் முதுகில் குத்தியதால் தேமுதிகவுக்கு சறுக்கல்” - பிரேமலதா விவரிப்பு

By செய்திப்பிரிவு

சென்னை: “விஜயகாந்த் எதிர்க்கட்சித் தலைவர் ஆன மூன்று மாதங்களில் யாரையெல்லாம் நம்பி எம்எல்ஏ பதவி கொடுத்தாரோ, அவர்கள் அனைவரும் அவரின் முதுகில் குத்திவிட்டனர். அவர்கள் செய்த துரோகங்களும், அதற்குப் பிறகு நடந்த ஒவ்வொரு விஷயமும் ஒரு பெரிய சறுக்கலை தலைவருக்கும் தேமுதிகவுக்கும் ஏற்படுத்தியது” என்று தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் கூறினார்.

சென்னை - திருவேற்காட்டில் டிச.14-ஆம் தேதி தேமுதிக தலைமை செயற்குழு மற்றும் பொதுக்குழுக் கூட்டம் நடைபெற்றது. அதில் தேமுதிக பொதுச் செயலாளராக பிரேமலதா விஜயகாந்த் நியமனம் செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டார். இந்நிலையில், இன்று சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்த பிரேமலதா, “விஜயகாந்த் மற்றும் கழக நிர்வாகிகள், மாவட்ட கழக செயலாளர்கள் என அனைவரும் பக்கபலமாக இருக்கின்றனர். அவர் நடிகராக இருந்தவரை வெறும் சினிமா துறையில் மட்டுமே நாங்கள் கவனம் செலுத்தினோம். அப்போது விஜயகாந்த் எல்லாருக்கும் பொதுவானவராகவும், எல்லோராலும் விரும்பப்பட்டவராகவும் இருந்தார். எப்போது விஜயகாந்த் கட்சிக்கு வந்தாரோ, அத்தனை பேரும் அவருக்கு எதிராளியாக மாறுகின்ற ஒரு சூழல் வந்தது.

விஜயகாந்த் அத்தனை எதிர்ப்புகளையும், சவால்களையும் சந்தித்து எதிர்நீச்சல் போட்டே திரையுலகிலும், அரசியலிலும் முன்னேறினார். அதற்கான வெற்றியை மக்களும் கொடுத்தனர். விஜயகாந்த் உத்தரவுப்படியே தேமுதிகவின் செயல்பாடுகள் எப்போதும் இருக்கும். அரசியல் என்பதே சவால் தான். அரசியலில் பெண்கள் இருப்பது பெரிய சவால் என்பதற்கு உதாரணம் ஜெயலலிதாதான். ஜெயலலிதா சந்திக்காத சவால்களே இல்லை. அதில் அவர் வெற்றியும் பெற்றுள்ளார்.

விஜயகாந்துக்கு எப்போதும் எம்ஜிஆர்தான் குரு, ரோல் மாடல். ஒரு பெண் தலைவராக ஜெயலலிதாதான் எனக்கு ரோல் மாடல். அவருடைய கம்பீரம், தைரியம், முடிவெடுக்கும் திறன் எனக்கு மிகவும் பிடிக்கும். அதைப் பார்த்தும் இருக்கிறேன். தமிழகத்தில் உள்ள அனைத்துப் பெண்களுக்கும் உறுதுணையாக இருப்பேன். தற்போது பொதுச் செயலாளர் என்ற மிகப் பெரிய பொறுப்பை எனக்கு கொடுத்திருக்கின்றனர். தொண்டர்களுக்கு அண்ணியாக மட்டுமில்லை, அன்னையாகவும் பயணித்துக் கொண்டிருக்கிறேன்.

2011 வரை தேமுதிக யாருடனும் கூட்டணி வைக்காமல் தனித்து இயங்கி வந்தது. விஜயகாந்த் எதிர்க்கட்சித் தலைவர் ஆன மூன்று மாதங்களில் அவர் யாரையெல்லாம் நம்பி எம்எல்ஏ பதவி கொடுத்தாரோ, அவர்கள் அனைவரும் அவரது முதுகில் குத்திவிட்டனர். அவர்கள் செய்த துரோகங்களும், அதற்குப் பிறகு நடந்த ஒவ்வொரு விஷயமும் ஒரு பெரிய சறுக்கலை தலைவருக்கும் தேமுதிகவுக்கும் ஏற்படுத்தியது. அதன்பிறகு அவரின் உடல்நிலையும் பாதிக்கப்பட்டது. ஆனால், விஜயகாந்த் யாருடனும் கூட்டணி வைக்க வேண்டாம் என உறுதியாக இருந்தார்” என்று பிரேமல்தா விஜயகாந்த் கூறினார்.

முன்னதாக, மக்களவைத் தேர்தல் 2024 குறித்து அவர் கூறும்போது, “வரப்போவது மக்களவைத் தேர்தல். எனவே, யாருடன் கூட்டணி, எத்தனை தொகுதியில் போட்டி என்பதை பரிசீலிக்க வேண்டும். கூட்டணி குறித்த அறிவிப்பை வெளியிட தேமுதிக தலைவருக்குதான் பொதுக் குழுவில் அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. அதனால், வெகுவிரைவில் குறிப்பாக ஜனவரி மாதத்தில் கூட்டணி குறித்த முடிவை கட்சித் தலைவர் விஜயகாந்த் அறிவிப்பார்.

தேமுதிக உட்கட்சி தேர்தல் முடிவடைந்துள்ளது. அடுத்தகட்டமாக கட்சியின் வளர்ச்சிப் பணிகள் குறித்து ஆலோசித்து நல்ல திட்டங்களை செயல்படுத்த இருக்கிறோம். தேமுதிகவின் வாக்கு சதவீதத்தில் எந்த சரிவும் ஏற்படவில்லை. 2006-ம் ஆண்டு கூட்டணியின்றி தேமுதிக போட்டியிட்டது. மாநில அளவில் 8.33 சதவீதம் வாக்குகளை பெற்றோம். அதன்பின்னர் கூட்டணியுடன் களம் கண்டதால் அந்தத் தொகுதிகளில் உள்ள வாக்கு சதவீதம் மட்டுமே கணக்கில் கொள்ளப்படுகிறது. எனவே, தேமுதிகவின் வாக்கு வங்கி நிலையாகவே இருக்கிறது. அதை அதிகரிப்பது தொடர்பாக வியூகம் வகுத்து செயல்படுத்துவோம்” என்று கூறியது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

10 mins ago

தமிழகம்

25 mins ago

தமிழகம்

33 mins ago

தமிழகம்

54 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

5 hours ago

மேலும்