சென்னை: இந்தி பேசும் மாநிலங்களின் தேர்தல் முடிவுகள் பாஜகவுக்கு எதிரான வாக்குகளை எதிர்க்கட்சிகள் ஒருங்கிணைக்க வேண்டும் என்பதையே உணர்த்துவதாக திமுக தலைவரும், தமிழக முதல்வருமான மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
தி இந்து ஆங்கில நாளிதழுக்கு அவர் அளித்தப் பிரத்யேகப் பேட்டியின் விவரம் வருமாறு:
கேள்வி: அண்மையில் வெளியான இந்தி பேசும் மாநிலங்களின் சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகள் பாஜகவின் சக்தியை தடுப்பதற்கு இல்லை என்பதை உணர்த்துவதாக இருக்கிறது. இந்தச் சூழலில் வரவிருக்கும் மக்களவைத் தேர்தலில் இண்டியா கூட்டணியின் எதிர்காலத்தை நீங்கள் எப்படிப் பார்க்கிறீர்கள்?
பதில்: சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகள் மக்களவைத் தேர்தலின் மீது தாக்கத்தை செலுத்தாது. சட்டப்பேரவைத் தேர்தல்கள் மாநிலங்களின் பிரச்சினைகளை முன்னிறுத்தி எதிர்கொள்ளப்படுகின்றன.
ராஜஸ்தானில் பாஜக வென்றிருந்தாலும்கூட வாக்கு வித்தியாசத்தைப் பார்த்தால், காங்கிரஸைவிட வெறும் 10 லட்சம் வாக்குகளே பாஜக அதிகம் பெற்றுள்ளது. சத்தீஸ்கரில் பாஜக 6 லட்சம் வாக்குகள் மட்டுமே அதிகமாகப் பெற்றுள்ளது. மத்திய பிரதேசத்தில் மட்டுமே 35 லட்சம் வாக்குகள் அதிகமாகப் பெற்றுள்ளது. இதிலிருந்து, பாஜக எதிர்ப்பு வாக்குகளை மடைமாற்றியிருந்தால் நிச்சயமாக இந்த மாநிலங்களில் பாஜக வெற்றி பெற்றிருக்க முடியாது என்பது தெளிவாகத் தெரிகிறது. இண்டியா கூட்டணியானது, மக்களவைத் தேர்தலின்போது பாஜக எதிர்ப்பு வாக்குகளை ஒருங்கிணைக்கும். அதன்மூலம் எளிதாக வெற்றியை சாத்தியப்படுத்தும்,. 3 மாநிலத் தேர்தல் முடிவு எங்களுக்கு ஒரு பாடம்.
கேள்வி: நீங்களும், ஆளுநரும் பேசிப் பிரச்சினைகளுக்குத் தீர்வு காணும்படி உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது. ஆளுநரும் உங்களைச் சந்திக்க அழைப்பு விடுத்துள்ளார். இந்த சந்திப்பு நன்மை பயக்கும் என நினைக்கிறீர்களா?
பதில்: நான் நிறையமுறை ஆளுநரை சந்தித்து ஆலோசனைகள் நடத்தியுள்ளேன். நாங்கள் பல அரசு நிகழ்வுகளில் ஒன்றாகக் கலந்து கொண்டிருக்கிறோம். அப்போதெல்லாம் அவர் என்னுடன் நல்லமுறையிலேயே பழகியுள்ளார். இங்கே சந்திப்பதென்பது பிரச்சினையல்ல. ஆளுநர் தனது மனப்பாண்மையை மாற்றி மாநில நனுக்காக செயல்பட வேண்டும். மக்களுக்கு, வளர்ச்சிக்கும், மாநிலக் கொள்கைகளுக்கு எதிரான சக்திகளின் கைகளில் கைப்பாவையாக இருப்பதை அவர் தவிர்த்து தமிழகத்தின் வளர்ச்சிக்கு அவர் ஆதரவு தர வேண்டும்.
கேள்வி: சென்னை வெள்ள பாதிப்பைப் பார்த்த மத்தியக் குழு பாதிப்பு மிகவும் குறைவாகவே இருப்பதாகக் கூறியுள்ளது. மாநில அரசின் முயற்சிகளையும் பாராட்டியுள்ளது. இந்தச் சூழலில் நீங்கள் நிவாரணப் பணிகள் நிறைவாக செய்யப்பட்டதாக உணர்கிறீர்களா?
பதில்: மத்தியக் குழு தமிழக அரசின் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளைப் பாராட்டியது. நீர்நிலைகளில் இருந்து முன்கூட்டியே தண்ணீர் வெளியேற்றப்பட்டதை பாராட்டியுள்ளது. பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங்கும் இதே கருத்தை என்னிடம் சொன்னார். திமுகவும்- பாஜகவும் எதிரெதிர் கொள்கைகள் கொண்ட கட்சி என்பது அனைவரும் அறிந்ததே. அப்படியிருந்தும் மத்திய அரசு எங்களைப் பாராட்டியுள்ளது என்றால் அது எங்களின் திறன்வாய்ந்த செயல்பாட்டிற்கான சான்று.
சென்னையில் இரண்டு நாட்களுக்கு இடைவிடாமல் மழை பெய்தது. மழை நின்ற மறுகனமே நாங்கள் நிவாரணப் பணிகளைத் தொடங்கினோம். போக்குவரத்து அடுத்தநாளே சீரானது. பெரும்பாலான பகுதிகளில் 3 நாட்களுக்கு மின் சேவை சீரடைந்தது. புறநகர்ப் பகுதிகளிலும் இயல்பு நிலை திரும்பியது. வெள்ளம் பாதித்தப் பகுதிகளில் இருந்து மக்களை மீட்டு பாதுகாப்பான இடங்களில் தங்கவைத்தோம். அத்தியாவசிப் பொருட்களை வழங்கினோம்.
நானே தனிப்பட்ட முறையில் பல இடங்களுக்குச் சென்றேன். 20 அமைச்சர்கள், 50 ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள், 20 ஆயிரம் அரசு ஊழியர்கள் களத்தில் பணியாற்றினர். பிற மாவட்டங்களில் இருந்தும் உதவிகள் வந்தன. இன்றுவரை திமுக தனிப்பட்ட முறையில் தேவைப்படுவோருக்கு உதவிகள் செய்து வருகிறது. நாங்கள் மக்களுக்கான பணி புரிகிறோம். அவர்களுக்காக இன்னும் அதிகமாகச் செய்ய விரும்புகிறோம். நீங்கள் இன்னும் சிறப்பாக செய்திருக்கலாமா என வினவினீர்கள். என்னிடம் அந்தக் கேள்வியைக் கேட்டால் எப்போதுமே மக்களுக்கு இன்னும் அதிகமாக செய்ய வேண்டும் என்றே சொல்வேன்.
கேள்வி: 2015-ல் அப்போதைய அரசு செம்மபரம்பாக்கம் ஏரியில் இருந்து முன்கூட்டியே திறந்துவிடாததால் சென்னை பேரழிவைச் சந்தித்தது. ஆனால் உங்கள் அரசு ஆட்சிக்கு வந்ததில் இருந்து வெள்ளத் தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டும் பாதிப்பு பரவலாக இருந்தது ஏன்? அரசு என்ன பாடம் கற்றுக் கொண்டுள்ளது?
பதில்: 2015-ல் அதிகாரிகள் அப்போதைய முதல்வர் ஜெயலலிதாவின் அனுமதியைப் பெற்றே செம்பரம்பாக்கம் ஏரியைத் திறந்துவிட வேண்டியதாக இருந்தது. ஆனால் எங்கள் அரசு நீர்நிலைகளில் இருந்து உபரி நீர் திறப்பை படிப்படியாக செய்தது. நிலைமையை எதிர்கொள்ள தயார் நிலையில் இருந்தது.
சென்னை ஐஐடியின் முன்னாள் பேராசிரியர் எஸ்.ஜனகராஜன் குறிப்பிட்டதை இங்கே சுட்டிக்காட்ட விரும்புகிறேன். 2015 வெள்ள மனிதப் பேரிடர் என்று அவர் கூறியிருந்தார். ஆனால் மிச்சாங் புயல் 36 மணி நேரத்தில் 53 செ.மீ மழைப்பொழிவைக் கொண்டு வந்தது. மிச்சாங் புயல் சென்னையில் இருந்து 100 கி.மீ தொலைவிலேயே 16 மணி நேரம் நின்றிருந்தது. மணிக்கு 8 முதல் 10 கிமீ வேகத்தில் நகர்ந்தது. இதனால் எதிர்பாராத அளவுக்கு மழை பெய்தது. கடந்த 47 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு மழை பொழிந்தது. 177 ஆண்டுகளில் இதுவே மூன்றாவது பெரிய மழைப்பொழிவு. எங்கள் நாடாளுமன்ற குழுத் தலைவர் டி.ஆர்.பாலு பிரதமர் மோடியை சந்தித்து வெள்ள நிவாரணம் கோரியபோது பிரதமரும் கூட இதே கருத்தைக் கூறியுள்ளார்.
நாட்டிலேயே தமிழகம் தான் காலநிலை மாற்ற நடவடிக்கைத் திட்டத்தை அமல்படுத்திய ஒரே மாநிலம். நாங்கள் இதற்காக ஒரு சிறப்புக் குழுவும் அமைத்துள்ளோம். சுற்றுச்சூழல் துறை சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத் துறையாக உருவெடுத்துள்ளது. காலநிலை மாற்றப் பிரச்சினைக்கு வேறு எந்த மாநிலமும் இவ்வளவு முக்கியத்துவம் கொடுக்கவில்லை
மக்கள்தொகையைப் பொறுத்து புயல், வெள்ளத்தை எதிர்கொள்ளும் அமைப்புகளை வலுப்படுத்த வேண்டும். காலநிலை மாற்றம் தான் மிகப்பெரிய பிரச்சினையாக இருக்கப்போகிறது என நான் நிறைய தருணங்களில் சொல்லிக் கொண்டுதான் இருக்கிறேன்.
கேள்வி: புறநகர்ப் பகுதிகளில் ரியல் எஸ்டேட்டின் வரைமுறையற்ற வளர்ச்சி வெள்ளத்தை அதிகப்படுத்தியதா?
பதில்: 2011 முதல் 2021 வரை அதிமுக எந்த ஒரு திட்டத்தை முறையாக செயல்படுத்தவில்லை. அதற்கான விலையை நாங்கள் கொடுத்துக் கொண்டிருக்கிறோம். ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரி திருப்புகழ் பரிந்துரைகளின்படி நாங்கள் பல்வேறு திட்டங்களை இப்போது செயல்படுத்தி வருகிறோம்.
கேள்வி: புயல், வெள்ளத்தின்போது அரசு இயந்திரங்கள் கடுமையாக இயங்குகின்றன ஆனால் அதன்பின்னர் தேங்கிவிடுகின்றன. ஆண்டு முழுவதுமே நிலைமையைக் கண்காணிக்க முடியாதா?
பதில்: அரசுத் தரப்பில் எந்தவித சுணக்கமும் இல்லை. திமுக அரசு செயல்படுத்தியுள்ள மழைநீர் வடிகால் திட்டத்தை நீங்கள் ஆராய்ந்து பாருங்கள். திமுக 2021 ஆட்சிக்கு வந்தது. எங்களின் வடிகால் பணி உள்ளிட்ட நடவடிக்கைகள் பாதிப்பை குறைத்தது. எஞ்சிய பணியையும் விரைவில் முடித்துவிடுவோம். அடுத்தக் கட்டமாக புதிய திட்டங்களை வகுப்போம். அப்போது சென்னையின் மக்கள் தொகை, நகரின் விரிவாக்கம் ஆகியனவற்றை கருத்தில் கொண்டு திட்டங்களை வகுப்போம்.
தமிழில்: பாரதி ஆனந்த்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
3 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
13 hours ago
தமிழகம்
14 hours ago
தமிழகம்
14 hours ago
தமிழகம்
14 hours ago
தமிழகம்
14 hours ago
தமிழகம்
15 hours ago