சென்னை: சென்னை உயர் நீதிமன்றத்தில் சிறப்பான பாதுகாப்பு ஏற்பாடுகள் உள்ளதால் பழனிசாமி நேரில் ஆஜராகி சாட்சியம் அளிக்க அறிவுறுத்துங்கள் என அவருடைய வழக்கறிஞரிடம் உயர் நீதிமன்ற நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.
கோடநாடு கொலை மற்றும் கொள்ளை வழக்கில் தன்னை தொடர்புபடுத்தி பேசிய பத்திரிகையாளர் மேத்யூ சாமுவேல் மற்றும் அந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட சயான் மற்றும் வாளையார் மனோஜ் ஆகியோர் மீது ரூ.1.10 கோடி மான நஷ்டஈடு கோரி அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி சென்னை உயர் நீதிமன்றத்தில் அவதூறு வழக்கு தொடர்ந்திருந்தார்.
இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், இந்த வழக்கில் பழனிசாமியின் சாட்சியத்தை பதிவு செய்ய உயர் நீதிமன்றத்தில் உள்ள மாஸ்டர் நீதிமன்றத்துக்கு உத்தரவிட்டிருந்தது. இந்நிலையில் முன்னாள் முதல்வர் என்பதாலும், தற்போது எதிர்கட்சித் தலைவராக பதவி வகிப்பதாலும் பாதுகாப்பு காரணங்களை சுட்டிக்காட்டி மாஸ்டர் நீதிமன்றத்தில் நேரில் ஆஜராக விலக்கு கோரியும் தனது வீட்டிலேயே வைத்து சாட்சியத்தை பதிவு செய்ய வழக்கறிஞர் ஆணையர் ஒருவரை நியமிக்கக்கோரியும் பழனிசாமி உயர் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்திருந்தார்.
அதன்படி வழக்கறிஞர் கார்த்திகை பாலனை வழக்கறிஞர் ஆணையராக நியமித்து நீதிபதி என்.சதீஷ்குமார் உத்தரவிட்டிருந்தார். இந்த உத்தரவை எதிர்த்து மேத்யூ சாமுவேல் உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருந்தார். இந்த வழக்கு நீதிபதிகள் ஆர்.மகாதேவன், முகமது ஷபீக் ஆகியோர் அடங்கிய அமர்வில் ஏற்கெனவே விசாரணைக்கு வந்தபோது, மாஸ்டர் நீதிமன்றத்தில் நேரில் ஆஜராக முடியாது என பழனிசாமி கூறும் காரணங்கள் ஏற்கும்படியாக இல்லை என்றும் சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்றும் நீதிபதிகள் கருத்து தெரிவித்திருந்தனர்.
இந்நிலையில் இந்த வழக்கு நேற்று மீண்டும் இதே அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், சென்னை உயர் நீதிமன்றத்தில் சிறப்பான பாதுகாப்பு ஏற்பாடுகள் உள்ளதால் பழனிசாமி நேரில் ஆஜராகி சாட்சியம் அளிக்க அவரை அறிவுறுத்துங்கள் என அவரது தரப்பு வழக்கறிஞரிடம் தெரிவித்து விசாரணையை ஜன.5-க்கு தள்ளி வைத்துள்ளனர்.
இதேபோல பழனிசாமி நேரில் ஆஜராக விலக்கு கோரிய மனு மீதான விசாரணையும் நீதிபதி என்.சதீஷ்குமார் முன்பாக நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது பழனிசாமி தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் அனில்குமார் இந்த வழக்கில் வழக்கறிஞர் ஆணையரை நியமித்து பிறப்பிக்கப்பட்ட உத்தரவை எதிர்த்து தொடரப்பட்ட மேல்முறையீட்டு வழக்கு ஜன.5-க்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளதால், இந்த வழக்கையும் தள்ளிவைக்க வேண்டுமென கோரினார். அதையடுத்து இந்த வழக்கை ஜன.18-க்கு தள்ளிவைத்த நீதிபதி, இப்படி மாறி மாறி வழக்கு தொடர்ந்து என்ன சட்ட நிவாரணம் பெற்றுள்ளீர்கள். ஊடகங்களுக்கு செய்தி கொடுப்பதற்காகவே இப்படி வழக்குகளைத் தொடருகிறீர்களா என்றும் இப்படி வழக்கு தொடருவதே நாடகம்தான் என்றும் கருத்து தெரிவித்துள்ளார்.
கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு தொடர்பாக விபத்தில் இறந்த ஜெயலலிதாவின் கார் ஓட்டுநர் கனகராஜின் சகோதரர் தனபாலுக்கு எதிராக பழனிசாமி தொடர்ந்த மற்றொரு வழக்கிலும் வழக்கறிஞர் ஆணையராக கார்த்திகைபாலன் நியமிக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
முக்கிய செய்திகள்
தமிழகம்
12 mins ago
தமிழகம்
39 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
6 hours ago