கேரளாவில் கரோனா | தமிழகத்தில் ஆர்டி-பிசிஆர் சோதனைகளை அதிகப்படுத்த அரசு அறிவுறுத்தல்

By செய்திப்பிரிவு

சென்னை: "கேரளாவில் புதிய வகை கரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால், தமிழகத்திலும் காய்ச்சல் பாதிப்பு எண்ணிக்கை எங்கெல்லாம் அதிகமாக இருக்கிறதோ, அங்கெல்லாம் ஆர்டிபிசிஆர் பரிசோதனைகளை அதிகப்படுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது. எனவே, இது தொடர்பாக பெரிய அளவில் மக்கள் அச்சப்படத் தேவையில்லை" என்று தமிழக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியுள்ளார்.

சென்னையில் தமிழக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் வெள்ளிக்கிழமை செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியது: "புதிய வகை கரோனா வைரஸ் தொற்று ஒன்று சிங்கப்பூர் மற்றும் கேரளா போன்ற பகுதிகளில் கடந்த ஒரு வார காலமாக பரவி வருகிறது. அந்த வகையில், கேரளாவில் நேற்றைய பாதிப்பு எண்ணிக்கை 230 ஆக உயர்ந்திருக்கிறது. ஆக்டிவ் கேஸஸ் (Active cases) என்ற வகையில் நேற்று கேரளாவில், 1,104 பேர் சிகிச்சைப் பெற்று வருகிறார்கள். ஆனால், இந்த தொற்றால் பெரிய அளவில் பாதிப்பு இல்லை. மிதமான பாதிப்பு இருப்பதாகத்தான் கூறப்படுகிறது.

நானும் நேற்று சிங்கப்பூரில் இருக்கும் மருத்துவர்கள் மற்றும் நண்பர்களுடன் பேசினேன். அங்கு 3 ஆயிரத்துக்கும் அதிகமானவர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. மேலும், இந்த பாதிப்பு 3-4 நாட்கள் இருப்பதாகவும், பாதிக்கப்பட்டவர்களுக்கு தொண்டை வலி, இருமல் வந்து பின்னர் சரியாகிவிடுவதாக கூறினார்கள். அதேநேரம், கேரளாவில் இந்த புதிய வகை வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால், தமிழகத்திலும் காய்ச்சல் பாதிப்பு எண்ணிக்கை எங்கெல்லாம் அதிகமாக இருக்கிறதோ, அங்கெல்லாம் ஆர்டிபிசிஆர் பரிசோதனைகளை அதிகப்படுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது. எனவே, இது தொடர்பாக பெரிய அளவில் மக்கள் அச்சப்படத் தேவையில்லை.

தமிழகத்தைப் பொறுத்தவரையில், தினசரி கரோனா பாதிப்புகள் ஒற்றை இலக்க எண்ணிக்கையில்தான் இருந்து வருகின்றன. எனவே, தமிழகத்தில் புதிதாக கரோனா பாதித்தவர்களின் மாதிரிகளை ஆய்வு செய்ய உத்தரவிட்டுள்ளோம். இரண்டு மூன்று தினங்களில் அது என்ன மாதிரியான உருமாற்றம் என்பது குறித்தும், அதனால் ஏற்படும் உடல் உபாதைகள் குறித்து தெரிவிக்கப்படும்" என்று அவர் கூறினார்.

முன்னதாக, தமிழக பொது சுகாதாரத்துறை இயக்குநர் செல்வவிநாயகம் நேற்று கூறும்போது, “தமிழக பொது சுகாதாரத் துறை மேற்கொண்ட ஆய்வுகளில் நமது மாநிலத்தில் 87 சதவீதம் பேருக்கு கரோனாவுக்கு எதிரான எதிர்ப்பாற்றல் உருவாகியிருப்பது உறுதி செய்யப்பட்டது.

தற்போது கேரளத்தில் பாதிப்பு அதிகரித்து வருவதை கவனித்து வருகிறோம். அந்த தொற்று, ஏற்கெனவே தமிழகத்தில் பரவிய கரோனா தொற்றுதானா அல்லது புதிய வகை உருமாற்றமா என்பது தெரியவில்லை. ஆனாலும், தமிழகம் முழுவதும் மருத்துவக் கண்காணிப்பை தீவிரப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இன்ஃப்ளூயன்ஸா தொற்று பாதிப்புடன் மருத்துவமனைகளுக்கு செல்பவர்களுக்கு மூச்சு திணறல், சளி, காய்ச்சல் உள்ளிட்ட கரோனா அறிகுறிகள் இருந்தால், அவர்களில் தேவையானவர்களுக்கு ஆர்டிபிசிஆர் பரிசோதனைகள் செய்யப்படும்.

தேவைப்பட்டால் தினமும் செய்யப்படும் பரிசோதனைகளின் எண்ணிக்கை அதிகரிக்கப்படும். ஏற்கெனவே, தீவிர கரோனா தொற்று பரவலை எதிர்கொண்டு கட்டுக்குள் கொண்டு வந்த அனுபவம் தமிழகத்துக்கு இருக்கிறது. அதனால், கேரளாவின் கரோனா தொற்று பரவலை கண்டு பொதுமக்கள் அச்சமோ, பயமோ கொள்ள தேவையில்லை” என்று தெரிவித்தார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE