கீழ்பவானி வாய்க்காலில் கான்கிரீட் தளம் அமைக்கும் திட்டத்துக்கு எதிர்ப்பு: திரண்ட ஆயிரக்கணக்கான விவசாயிகள்

By செய்திப்பிரிவு

ஈரோடு: பவானிசாகர் அணையில் இருந்து கீழ்பவானி வாய்க்காலில் திறக்கப்படும் நீரின் மூலம் இரண்டு லட்சத்து 7 ஆயிரம் ஏக்கர் நிலம் பாசனம் பெறுகின்றன. மண் கரைகளால் ஆன கீழ்பவானி வாய்க்காலின் பக்கவாட்டில் கான்கிரீட் தளம் அமைப்பது உள்ளிட்ட பராமரிப்பு பணிக்காக 2020-ம் ஆண்டு ரூ.710 கோடி நிதி ஒதுக்கப்பட்டு, அரசாணை பிறப்பிக்கப்பட்டது.

இந்த அரசாணையை ரத்து செய்து கீழ்பவானி வாய்க்காலில் கான்கிரீட் தளம் அமைக்கும் திட்டத்தை கைவிடக் கோரி விவசாயிகள் பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த கோரிக்கையை வலியுறுத்தி, கீழ்பவானி பாசன பாதுகாப்பு இயக்கம் சார்பில், ஈரோடு பழைய பாளையத்தில் இருந்து ஆயிரக்கணக்கான விவசாயிகள் ஊர்வலமாக வந்து ஈரோடு ஆட்சியரிடம் நேற்று மனு அளித்தனர்.

இது குறித்து கீழ்பவானி பாசன பாதுகாப்பு இயக்க ஒருங்கிணைப்பாளர் ரவி கூறியதாவது: கடந்த 2010-ம் ஆண்டு திமுக ஆட்சியில், கீழ் பவானி வாய்க்கால் சீரமைப்பு தொடர்பாக, மோகனகிருஷ்ணன் தலைமையில் குழு அமைக்கப்பட்டது. மோகன கிருஷ்ணன் அறிக்கையை நடைமுறைப் படுத்தினால் விவசாய நிலங்களுக்கும் சுற்றுச்சூழலுக்கும் பாதிப்பு ஏற்படும் என்று விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்ததால் அத்திட்டம் கை விடப்பட்டது.

இதையடுத்து, 2013-ம் ஆண்டு அப்போதைய முதல்வர் ஜெயலலிதா ஆட்சியில், ரூ.2,100 கோடி செலவில் கீழ்பவானி வாய்க்காலில் கான்கிரீட் தளம் அமைக்கும் திட்டம் கொண்டு வரப்பட்டு, விவசாயிகளின் கடும் எதிர்ப்பால் அத்திட்டமும் கைவிடப்பட்டது. இந்நிலையில், கடந்த 2020-ம் ஆண்டு, அதிமுக ஆட்சியில், கீழ்பவானி வாய்க்காலை, நவீனப்படுத்துதல், புதுப்பித்தல் மற்றும் விரிவாக்குதல் என்ற பெயரில், கீழ்பவானி வாய்க்காலில் கான்கிரீட் தளம் அமைப்பதற்கான அரசாணை வெளியிடப்பட்டது.

இது தொடர்பான வழக்கில், உயர்நீதிமன்ற உத்தரவின்படி வாய்க்காலில் கான்கிரீட் அமைக்கும் பணி தொடங்கப்பட்டுள்ளது. இத்திட்டத்துக்கு கீழ்பவானி வாய்க்காலால் பாசனம் பெறும் 90 சதவீத விவசாயிகள் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர். எனவே, கீழ்பவானி வாய்க்காலில் கான்கிரீட் அமைக்கும் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும்.

வாய்க்காலில் உள்ள பழைய கட்டுமானங்களை சீரமைக்க வேண்டும். 34 கசிவு நீர்த்திட்ட பாசன விவசாயிகளையும் பாதுகாக்க வேண்டும். வாய்க்கால் பாசன திட்டத்துக்கு நிலம் கொடுத்த விவசாயிகளை பாதுகாக்க வேண்டும். அனைத்து கடைமடை வரை முழுமையாக தண்ணீர் செல்ல ஏதுவாக கீழ் பவானி வாய்க்காலை ஆண்டுதோறும் முறையாக தூர்வார வேண்டும்.

பழுதடைந்த மதகுகளை சீரமைக்க வேண்டும். பாசன சபைக்கு முறையாக தேர்தல் நடத்த வேண்டும். இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி ஆட்சியரிடம் மனு அளித்துள்ளோம். இவ்வாறுஅவர் தெரிவித்தார்.

இந்நிகழ்வில், கொமதேக மாநில பொதுச் செயலாளர் ஈஸ்வரன், பாஜக விவசாயிகள் அணி மாநிலத் தலைவர் ஜி.கே.நாகராஜ், தமிழ்நாடு சிறு குறு விவசாயிகள் சங்கத் தலைவர் கே.ஆர்.சுதந்தரராசு மற்றும் விவசாயிகள், குடிநீர் ஆதாரம் பெறும் கிராம மக்கள் பங்கேற்றனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE