வெள்ள நிவாரண நிதி ரூ.6,000 பெறுவதற்கான டோக்கன் விநியோகம் தொடங்கியது: 17-ம் தேதி முதல் ரேஷனில் பணம் பெறலாம்

By செய்திப்பிரிவு

சென்னை: புயல் மழையால் பாதிக்கப்பட்டோருக்கு தமிழக அரசு அறிவித்த ரூ.6,000 நிவாரண நிதி பெறுவதற்கான டோக்கன் விநியோகம் சென்னையில் நேற்று தொடங்கியது. ‘மிக்ஜாம்’ புயல் காரணமாக சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய 4 மாவட்டங்களில் பல இடங்களில் கடந்த 3, 4-ம் தேதிகளில் அதி கனமழை பெய்தது. இந்த மாவட்டங்களில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ரேஷன் கடைகள் மூலம் தலா ரூ.6,000 நிவாரண நிதி வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்தது. இதையடுத்து, சென்னை மாவட்டம் முழுவதும், மற்ற 3 மாவட்டங்களில் மழை பாதித்த தாலுகாக்களில் மட்டும் ரூ.6,000 வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்தது.

இந்த 4 மாவட்டங்களில் சர்க்கரை அட்டை வைத்திருப்பவர்கள், வருமானவரி செலுத்துபவர்கள், அரசு ஊழியர்களுக்கு இந்தத் தொகை வழங்கப்படாது. அப்படியே அவர்கள் பாதிக்கப்பட்டிருந்தால், பாதிக்கப்பட்ட பொருட்கள் குறித்து விவரங்களை ரேஷன் கடைகளில் வைக்கப்பட்டிருக்கும் விண்ணப்பங்களை பூர்த்தி செய்து தங்கள்வங்கிக் கணக்கு எண்ணையும் அளிக்க வேண்டும். அதிகாரிகள் விசாரித்து நிவாரண தொகையைவங்கிக் கணக்கில் செலுத்துவார்கள் என்று தமிழக அரசு அறிவித்திருந்தது.

இந்நிலையில், வெள்ள நிவாரண நிதி ரூ.6,000 வழங்குவதற்கான டோக்கன் விநியோகம் நேற்று தொடங்கியது. நாளை (டிச.16) வரை வீடு வீடாக சென்று டோக்கன் வழங்கப்பட உள்ளது. டோக்கன் பெற்றவர்கள், 17 முதல் 21-ம் தேதி வரை ரேஷன் கடைகளில், டோக்கனில் கொடுத்த தேதி, நேரத்துக்கு சென்று நிவாரணத் தொகை பெற்றுக்கொள்ளலாம்.

டோக்கன் கிடைக்காதவர்கள், உண்மையில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு இருந்தால், ரேஷன் கடைகளுக்கு சென்று விண்ணப்பம் வாங்கி பூர்த்தி செய்து அங்கேயே வழங்க வேண்டும். அதற்காக, ஒவ்வொரு ரேஷன் கடைகளிலும் இரண்டு நகராட்சி அலுவலர்கள் இருப்பார்கள். இதனிடையே, யாருக்கெல்லாம் ரூ.6,000 வழங்க வேண்டும் என்பது குறித்த பட்டியலையும் ரேஷன் கடைகளுக்கு அரசு அனுப்பியுள்ளதாக கடை ஊழியர்கள் தெரிவித்தனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE