மிக்ஜாம் பாதிப்பு: தற்காலிக நிவாரணமாக ரூ.7,033 கோடி வழங்க மத்தியக் குழுவிடம் முதல்வர் ஸ்டாலின் கோரிக்கை

By செய்திப்பிரிவு

சென்னை: மிக்ஜாம் புயலால் ஏற்பட்ட பாதிப்புகளை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்ட மத்தியக் குழு தலைவர் மற்றும் உறுப்பினர்களுடன் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை மேற்கொண்டார். புயல் - மழையால் ஏற்பட்ட பாதிப்புகளை சீர்செய்திட தற்காலிக நிவாரணத் தொகையாக 7033 கோடி ரூபாயும், நிரந்தர நிவாரணத் தொகையாக 12,659 கோடி ரூபாயும் வழங்கிட முதல்வர் கோரிக்கை விடுத்துள்ளார்.

இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று (டிச.14) தலைமைச் செயலகத்தில், மிக்ஜாம் புயலால் ஏற்பட்ட கனமழையால் சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு மற்றும் காஞ்சிபுரம் மாவட்டங்களில் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்ட மத்தியக் குழுவின் தலைவர் மற்றும் உறுப்பினர்களுடன் ஆலோசனை மேற்கொண்டார்.

மிக்ஜாம் புயலால் ஏற்பட்ட கடுமையான மழைப்பொழிவின் காரணமாக பெருநகர சென்னை மாநகராட்சி, திருவள்ளூர், செங்கல்பட்டு மற்றும் காஞ்சிபுரம் மாவட்டங்களில் பல்வேறு குடியிருப்பு பகுதிகளில் வெள்ள நீர் சூழ்ந்து, வீடுகளுக்குள் வெள்ளம் புகுந்ததால் பொதுமக்களின் வாழ்வாதாரம் பெரிதும் பாதிப்புக்குள்ளானது. மேலும் வரலாறு காணாத கனமழையின் காரணமாக, சாலை, பாலம், நீர்நிலை உள்ளிட்ட பல்வேறு துறைகளின் உட்கட்டமைப்புகளுக்கும் பெரிதளவு சேதம் ஏற்பட்டுள்ளது. தமிழக முதல்வரின் உத்தரவின் பேரில் மேற்கொள்ளப்பட்ட மீட்பு மற்றும் நிவாரண நடவடிக்கைகளின் காரணமாக, பாதிப்புக்குள்ளான பகுதிகளில் மிக விரைவாக இயல்பு நிலை திரும்பியது.

தமிழக முதல்வர் டிச.5-ம் தேதியன்று இந்தியப் பிரதமருக்கு எழுதிய கடிதத்தில், மிக்ஜாம் புயலின் தாக்கத்தினால் ஏற்பட்டுள்ள பாதிப்புகளை சீரமைக்கவும், வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ள பொதுமக்களுக்கு உரிய நிவாரணம் வழங்கவும், தமிழகத்துக்கு உடனடியாக ரூ.5,060 கோடி நிதியை விடுவிக்குமாறும் கோரியிருந்தார்.அதைத் தொடர்ந்து, மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் டிச.7 அன்று சென்னை வருகை தந்து, ‘மிக்ஜாம்’ புயல் பெருமழையால் ஏற்பட்ட பாதிப்புகளை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். பின்னர், தமிழக முதல்வருடன் தலைமைச் செயலகத்தில் ஆலோசனை மேற்கொண்டார். முதல்வர், மிக்ஜாம் புயலின் காரணமாக ஏற்பட்ட பாதிப்புகளைத் தெரிவித்து இடைக்கால நிதி உதவி கோரும் கோரிக்கை மனுவினை அளித்து, தமிழகத்துக்கு உடனடியாக நிதியை விடுவிக்குமாறு கோரிக்கை விடுத்தார்.

இதனைத் தொடர்ந்து தமிழகத்தில் வெள்ளம் பாதித்த பகுதிகளை பார்வையிட வந்த மத்திய அரசின் பல்துறை ஆய்வுக் குழு, டிச.12 மற்றும் டிச.13 ஆகிய நாட்களில் மழை, வெள்ளத்தால் ஏற்பட்ட பாதிப்புகளை பெருநகர சென்னை மாநகராட்சி, திருவள்ளூர், செங்கல்பட்டு மற்றும் காஞ்சிபுரம் மாவட்டங்களில் ஆய்வு மேற்கொண்டது. இன்று (டிச.14) தமிழக முதல்வரை மத்திய அரசின் பல்துறை ஆய்வுக் குழுவினர் சந்தித்து ஆலோசனை மேற்கொண்டனர். அப்போது, மிக்ஜாம் புயலால் ஏற்பட்ட சேதங்களுக்கு நிதி ஒதுக்கீடு கோரும் கோரிக்கை மனுவினை (Memorandum) தமிழக முதல்வர் மத்திய அரசின் ஆய்வுக் குழுவின் தலைவைரிடம் வழங்கினார்.

இக்கோரிக்கை மனுவில், புயல் மழையால் சாலைகள், பாலங்கள், பள்ளிக் கட்டடங்கள், அரசு மருத்துவமனைகள் போன்ற பொதுக் கட்டமைப்புகளுக்கு ஏற்பட்டுள்ள பாதிப்புகளை சீர்செய்திடவும், மழை வெள்ளத்தால் சேதமடைந்துள்ள டிரான்ஸ்பார்மர்கள், மின் கம்பங்கள், பழுதடைந்த துணை மின் நிலையங்கள் உள்ளிட்ட மின்சார உட்கட்டமைப்புகளை சீர் செய்திடவும், பாதிக்கப்பட்ட உள்ளாட்சி அமைப்புகளில் குடிநீர் தொட்டிகள், தெருவிளக்குகள், கிராம சாலைகள் ஆகியவற்றை சீர் செய்திடவும் இழப்பீடுகள் கோரப்பட்டுள்ளது.

மேலும், மிக்ஜாம் புயல் மழையால் பாதிக்கப்பட்ட மீனவர்களின் படகுகள், வலைகள் ஆகியவற்றுக்கு இழப்பீடுகள் வழங்கவும், சிறு, குறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்களுக்கு ஏற்பட்டுள்ள இழப்புகளை ஈடுசெய்திடவும், சாலையோர வியாபாரிகள் மற்றும் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேவையான உதவிகளை வழங்கிடவும், தற்காலிக நிவாரணத் தொகையாக 7033 கோடி ரூபாயும், நிரந்தர நிவாரணத் தொகையாக 12,659 கோடி ரூபாயும் கோரப்பட்டுள்ளது.

இக்கூட்டத்தில் முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது: "மிக்ஜாம் புயலால் ஏற்பட்ட வெள்ள சேதங்களைப் பார்வையிட்டு வந்துள்ள உங்கள் அனைவருக்கும் என்னுடைய நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.சென்னையில் கடந்த இரண்டு நாட்கள் நீங்கள் மேற்கொண்ட ஆய்வு பயனுள்ளதாக இருந்திருக்கும் என்று நான் நம்புகிறேன். இந்த வெள்ளச் சேதத்தை பொறுத்தவரை தமிழக அரசு தேவையான எல்லா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் எடுத்திருந்தது. அதேபோல் புயல், மழையின் தாக்கத்துக்கு பிறகு, மீட்பு நிவாரண நடவடிக்கைகளும் முழுவீச்சில் சிறப்பாக மேற்கொள்ளப்பட்டது. புதன்கிழமை நடந்த செய்தியாளர்கள் சந்திப்பில் இதனை குறிப்பிட்டு நீங்கள் தமிழக அரசுக்கு பாராட்டுக்களை தெரிவித்திருந்தீர்கள், அதற்காக என் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

வரலாறு காணாத இந்த பெருமழையின் காரணமாக ஏற்பட்ட மிகப் பெரிய சேதங்களை சரிசெய்து மீண்டும் உருவாக்கிடவும், வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட ஏழை எளிய மக்களுக்கு அதனை மீண்டும் உருவாக்கி வழங்கிடவும் தமிழக அரசின் நிதி ஆதாரங்கள் மட்டும் போதுமானது அல்ல. மத்திய அரசின் பங்களிப்பும் இதற்கு பெருமளவு தேவைப்படுகிறது. எனவே, மிக்ஜாம் புயலால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் உள்ள குடும்பங்களுக்கு வாழ்வாதாரங்களை மீட்க தேவையான உதவிகளை வழங்கவும் பல்வேறு வகையான சமூக உட்கட்டமைப்புகளை மீட்டுருவாக்கம் செய்யவும் மத்திய அரசுக்கு நீங்கள் உரிய பரிந்துரை செய்து, தமிழக அரசு கோரியுள்ள நிவாரணத் தொகையை பெற்றுத்தர வேண்டுமென்று கேட்டுக் கொள்கிறேன்" என்று மத்தியக் குழுவினரை முதல்வர் கேட்டுக் கொண்டார்.

இக்கூட்டத்தில், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன், தலைமைச் செயலாளர் சிவ் தாஸ் மீனா, மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

6 mins ago

தமிழகம்

14 mins ago

தமிழகம்

39 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

14 hours ago

தமிழகம்

14 hours ago

தமிழகம்

14 hours ago

மேலும்