“திமுகவின் நிலம் ஆக்கிரமிப்பு இனியும் செல்லுபடியாகாது” - அண்ணாமலை திட்டவட்டம்

By செய்திப்பிரிவு

சென்னை: பாஜக மாநில தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள அறிக்கை. தமிழகத்தின் புகழ்பெற்ற திரைப்பட தயாரிப்பு நிறுவனமாக விளங்கியது, சேலம் மாடர்ன் தியேட்டர்ஸ் நிறுவனம். இந்த நிறுவனத்தின் நினைவாக, சேலம் ஏற்காடு சாலையில், நினைவு வளைவு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது.

அந்த இடத்தில், தனது தந்தையின் சிலையை அமைக்க தமிழக முதல்வர் ஸ்டாலின் விரும்புவதாக கூறி, சேலம் மாவட்ட ஆட்சியர் நினைவு வளைவு அமைந்திருக்கும் இடத்தை தரும்படி தொடர்ந்து வலியுறுத்தி வருவதாகவும் அமரர் டி.ஆர்.சுந்தரம் முதலியார் குடும்பத்தினர் அதனை ஏற்றுக் கொள்ளாததால், நினைவு வளைவு அமைந்திருக்கும் இடம் நெடுஞ்சாலைக்கு சொந்தமானது என்று கூறி தமிழக அரசு ஆக்கிரமிக்க முயற்சி செய்வதாகவும் தெரிகிறது. பாரம்பரியமிக்க குடும்பத்தின் சொத்தை ஆக்கிரமித்துத்தான் சிலை வைக்க வேண்டுமா, நிலம் ஆக்கிரமிப்பு என்பது திமுகவின் பாரம்பரியமாக இருக்கலாம். ஆனால், இனியும் அது செல்லுபடியாகாது என்பது முதல்வர் உணர்ந்திருக்க வேண்டும்.

மக்கள் நலன் பற்றி எந்த சிந்தனையும் இல்லாமல், சிலை வைப்பது, பெயர் வைப்பது என்று வழக்கமான வரலாற்றைத் திரிக்கும் முயற்சியில் மட்டுமே கிட்டத்தட்ட 3 ஆண்டுகளாக திமுக அரசு செயல்பட்டு வருகிறது. திமுக தலைவர்களுக்கு சிலை வைப்பதில் காட்டும் கவனத்தை மக்கள் பணிகளுக்கு எப்போது காட்டும். முதலில் நிர்வாகத்தை கவனிக்கட்டும். பிறகு சிலையையும், பெயரையும் வைக்கலாம். உண்மையிலேயே தனது தந்தைக்கு மரியாதை செலுத்த வேண்டும் என்று முதல்வர் விரும்பினால், சேலம் மாடர்ன் தியேட்டர்ஸ் நினைவு வளைவு இடத்தில், தங்கள் குடும்பத்துக்கே வாழ்வளித்த அமரர் டி.ஆர்.சுந்தரம் முதலியாரின் சிலையை நிறுவுவதுதான் முறையாக இருக்கும்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE