பொங்கல் பண்டிகையை முன்னிட்டு விரைவு பேருந்துகளில் முன்பதிவு தொடக்கம்

By செய்திப்பிரிவு

சென்னை: பொங்கல் பண்டிகையையொட்டி, அரசு விரைவு பேருந்துகளுக்கான முன்பதிவு நேற்று தொடங்கியது. இதுதொடர்பாக போக்குவரத்துக் கழக அதிகாரிகள் கூறியதாவது:

ஜன.15-ம் தேதி (திங்கள்கிழமை) கொண்டாடப்படும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, தமிழகம் முழுவதும் அரசு போக்குவரத்துக் கழகங்கள் சார்பில் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளன. விரைவு பேருந்துகளை பொருத்தவரை 30 நாட்களுக்கு முன்பு முன்பதிவு செய்ய முடியும். அந்த வகையில், பொங்கலையொட்டி சொந்த ஊர் செல்லும் பெரும்பாலானோர் வெள்ளிக்கிழமை (ஜன.12) பயணத்தை மேற்கொள்ள திட்டமிடுவார்கள். அவ்வாறு பயணம் மேற்கொள்வோருக்கான முன்பதிவு வசதி நேற்றுமுதல் தொடங்கியது. மேலும், சனிக்கிழமை (ஜன.13) பயணம் செய்வோருக்கான முன்பதிவு இன்று (டிச.14) தொடங்கவுள்ளது. ஞாயிற்றுக்கிழமை (ஜன.14) பயணிக்க விரும்புவோருக்கான முன்பதிவு டிச.15-ம் தேதி முதல் நடைபெறும்.

அரசு போக்குவரத்துக் கழகத்தின் www.tnstc.in என்ற இணையதளம் அல்லது tnstc செயலி வாயிலாக பேருந்து இருக்கைகளை முன்பதிவு செய்து கொள்ளலாம். இதுதவிர, பேருந்து நிலையங்களில் உள்ள முன்பதிவு மையங்கள் வாயிலாகவும் முன்பதிவு செய்யலாம். இதற்கிடையே வரும் 25-ம் தேதி கிறிஸ்துமஸ் பண்டிகை கொண்டாடப்படவுள்ளது. இதற்காக சென்னையில் இருந்து தென்மாவட்டங்களுக்கான பேருந்துகளில் பெரும்பாலான இருக்கைகளின் நிரம்பிவிட்டன. எனவே, கிறிஸ்துமஸ் பண்டிகைக்கான கூடுதல் பேருந்துகள் மற்றும் பொங்கல் பண்டிகைக்கான கூடுதல் பேருந்துகள் தொடர்பான அறிவிப்பு விரைவில் வெளியாகும். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE